Tamil News : தமிழகம் மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொலைபேசி மூலம் உரையாடியபோது, இவ்விரண்டு மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால், எல்லை பகுதிகளில் எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாண்டவியா கேட்டறிந்தார்.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு இன்று விசாரணை
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, திவாகர், சஜீவன், முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடவியல் நிபுணர், கோத்தகிரி மின்வாரிய உதவிப் பொறியாளர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிவினைவாத தேசபக்தர் சையது அலி ஷா கிலானி மரணம்
92 வயதான பிரிவினைவாத அரசியலின் மூத்த தலைவர் சையத் அலி ஷா கிலானி உடல்நலக்குறைவால் ஸ்ரீநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் கடந்த புதன்கிழமை இரவு மரணமடைந்தார். இவர், பத்தாண்டுகளுக்கும் மேலாக வீட்டுக் காவலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), 370-வது பிரிவு ரத்து மற்றும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரம் தாழ்த்தப்பட்டதை அடுத்து அவர் மரணடைந்திருக்கிறார். அவருடைய இறுதி ஊர்வலம் பெரும் கூட்டத்தை ஈர்க்கக்கூடும் என்பதால் இணைய இடைநிறுத்தம் உட்பட கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாராலிம்பிக் டேக்வாண்டோ போட்டி – இந்திய வீராங்கனை முன்னேற்றம்
டோக்கியோ பாராலிம்பிக் டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அருணா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். செர்பியாவின் டேனிஜெலாவை 29-9 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் அருணா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம், ஆனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரத்தை 12 மணி நேரமாக நீட்டித்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்ததன் மூலம் அவரது கோல் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த சர்வதேச வீரர்கள பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சட்டப்பேரவையில் 18 அறிவிப்புகளை வெளியிட்டார் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டி போலி பத்திரப்பதிவு – பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு்ளளது. இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும்.
மிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடநாடு வழக்கில் புலன் விசாரணைக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு அமைச்சப்படும் என்றும், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும் என்றும், சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், டெல்டா பிளஸ் குறித்த அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 பட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ’வலிமை’படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் இன்று காலை சென்னை திரும்பியுள்ளனர். இம்மாதத்தில், இரண்டாம் பாடலுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியீட்டுத் தேதியும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுகின்றன என்று சேனல்கள் மற்றும் செய்தி இணைய தளங்களில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14ம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் அதற்கான கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி அன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், 1,74,000 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. 32 சுங்கச் சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
போலி பத்திரப்பதிவுகளை, பத்திரப்பதிவு தலைவரே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார்
கொடநாடு வழக்கை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். கொடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும் என்றும் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ் வெற்றி பெற்றுள்ளார். ஜெர்மன் வீரர் நிக்லசை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இயக்குநர் பாரதிராஜா, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுதல் என 2 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நாளை மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.