Tamil News : ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி மூன்று நாட்கள் ஆன நிலையில், இன்று அங்கு புதிய அரசை தாலிபான்கள் அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் தாலிபான்கள், கடந்த கால தவறுகளை செய்யப் போவதில்லை என்றும், மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளனர். பெண்கள் அலுவலகம் செல்வதற்கோ, கல்வி பயில்வதற்கோ தடை விதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கில் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
தாயகம் திரும்பிய பாராலிம்பிக் பதக்க நாயகர்களுக்கு டெல்லியில் வரவேற்பு
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவாக டோக்யோவில் அதிக பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில் மற்றும் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியா, வட்டு எறிதலில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துனியா, உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற சரத்குமார் ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் கடிதம் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 1,657 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 % அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதம் செய்துளள நிலையில், இந்த வழக்கில் மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியின், தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டக்குள் கொண்டு வர, கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக இறந்துள்ளது. இது தொடர்பாக இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்திற்கு 3 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினராக முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை நேரில் சந்தித்துள்ள சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறித்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு” என சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021வரையில் சராசரியாக தினசரி, 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கோடநாடு வழக்கில் தொடர்புடைய முன்னாள் முதல்வர் பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வழக்கு செப்டம்பர் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவின் கே.டி ராகவன் தொடர்பான விடயத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த நிலையில், “சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.04) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் (செப்.05) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2019ல் நட்சத்திர விடுதி மேலாளர் மற்றும் தொழிலதிபரை மிரட்டியதாக நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி. தலைமையில் ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கனவே சயனிடம் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், எஸ்டேட் மேலாளராக பணியாற்றும் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி, திருச்சி, மற்றும் மதுரை நகரங்களின் காற்றின் தரத்தை மேம்படுத்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
100 மைக்கிரான்களுக்கு குறைவாக உள்ள, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியப்படும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சுற்றுச்சூழல் துறை. ப்ளாஸ்டிக் பேனர்கள், தட்டுகள், கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 75 மைக்கிரான் ப்ளாஸ்டிக் கைப்பை மற்றும் 60 மைக்ரான் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வருகின்ற 30ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் வ.உ.சி. பூங்காவில் அவருக்கு முழு உருவ சிலை வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை பாய்மர படகோட்டுதல் அகாதெமி மற்றும் பாய்மர படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் ரூ. 7 கோடி நிதியில் அமைக்கப்படும் என்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தது உயர் நீதிமன்றம். தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்று ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ளது என்பதையும் சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கெனவே பிரிட்டன் , ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வருவோர், விமானம் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த பட்டியலில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய 7 நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
டோக்கியோ பாராலிம்பிக் பெண்கள் 50மீ ரைபிள் பிரிவில் அவனி லெகரா வெண்கலம் வென்றுள்ளார். துப்பாக்கி சுடுதலில் ஏற்கெனவே லெகரா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளது.
வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீராமிதுனை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகிறது காவல்துறை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி அமைச்சர் ராமச்சந்திரன் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய பிரவீன்குமார் 2.07 மீ உயரத்தை தாண்டி வெள்ளி வென்றார். 11 பதங்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளது.