Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
அமலுக்கு வந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு :
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கை, தளர்வுகளற்ற முழு ஊரடங்காக தமிழக அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பால், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். மருத்துவ தேவைகளுக்காக மாவட்டங்களுக்குள் இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் எனவும், இறப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாவட்டங்களுக்கு இடையே செல்வோர்க்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீது, வழக்குப்பதிவு செய்யவும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறையினர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு நிலவரம் :
மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி முழுவதும் 320 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்தால்,, வாகனம் பறிமுதல்செய்யப்படும் உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகர மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம் :
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் 2635 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிதொடங்கி வைத்துள்ளார். கோவையில், அனைத்து வார்டுகளிலும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய 50 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு :
தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அளவை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 30 வரையிலான காலகட்டத்திற்கு இது வரை வழங்கப்பட்டு வந்த 3.5 லட்சத்தில் இருந்து 5.6 லட்சமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:11 (IST) 24 May 2021‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரியல் சர்ச்சை; இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. விளக்கம்
‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் குறித்து, அத்தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. விளக்கம் அளித்துள்ளனர். அதில், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாசாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பையும் மரியாதையையும் தவிர வேறு எதுவும் இல்லை. நிகழ்ச்சியை வெளியிடும்போது அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
- 23:08 (IST) 24 May 2021‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரியல் சர்ச்சை; இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. விளக்கம்
‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் குறித்து, அத்தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. விளக்கம் அளித்துள்ளனர். அதில், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாசாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பையும் மரியாதையையும் தவிர வேறு எதுவும் இல்லை. நிகழ்ச்சியை வெளியிடும்போது அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
- 22:25 (IST) 24 May 2021மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் கைது!
ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் மூலம் புகாரளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள், ரகசியம் காக்கப்படும். எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என சென்னை காவல்துரை உத்தரவாதம் அளித்துள்ளது.
- 21:05 (IST) 24 May 2021‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், “ஈழத் தமிழர்கள், தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது” என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 19:58 (IST) 24 May 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா; 402 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 402 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 19:26 (IST) 24 May 2021ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- 18:45 (IST) 24 May 2021மே 23 வரை தமிழகத்திற்கு 18 ரயில்களில் 1024.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மே 14ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை தமிழகத்திற்கு 18 ரயில்களில் 1024.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 17:45 (IST) 24 May 20212011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ஜூன் 21 முதல் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி
உயர்க் கல்வி அமைச்சர் பொன்முடி, “2011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21ம் தேதி முதல் நடைபெறும். இன்று முதல் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- 17:04 (IST) 24 May 2021என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்- கமல்ஹாசன்
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் எனவும் அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
- 16:39 (IST) 24 May 2021ரூ.4000 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது என்றும் ரூ.4000 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- 16:24 (IST) 24 May 2021தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி ஒதுக்கீட்டு அளவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- 15:56 (IST) 24 May 2021மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ராஜகோபாலனை பிடித்து போலீசார் விசாரணை
மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ராஜகோபாலனை சுற்றி வளைத்த போலீசார், அவரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர். விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை குற்றச்சாட்டு.
- 15:26 (IST) 24 May 2021இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பாதிப்பு
இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் மஞ்சள் பூஞ்சை பாதித்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பு, வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஆபத்தானது என மருத்துவர்கள் தகவல்.
- 15:07 (IST) 24 May 2021நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
யாஸ் புயல் காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- 14:53 (IST) 24 May 20212000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது பிசிசிஐ
இந்தியாவிற்கு கொரோனா நிவாரணமாக 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்குகிறது.
- 14:51 (IST) 24 May 2021கொரோனாவால் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.
- 14:33 (IST) 24 May 2021ப்ளஸ் 2 தேர்வு குறித்து நாளைக்குள் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
ப்ளஸ் 2 தேர்வை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- 13:49 (IST) 24 May 2021விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தனியார் மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 13:23 (IST) 24 May 2021ராஜஸ்தானில் ஜூன் 8 வரை முழு பொது முடக்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை நீட்டித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
- 13:22 (IST) 24 May 2021உழவர் சந்தை விலையில் 106 வகையான காய்கறிகள்
கோவையில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உழவர் சந்தை விலையில் 106 வகையான காய்கறிகள் வழங்குவதாகவும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
- 12:33 (IST) 24 May 2021தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ!
கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
- 11:30 (IST) 24 May 2021சட்டமன்ற தொகுதிகளில் துணை மருத்துவமனைகள்; அமைச்சர் சேகர் பாபு!
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் துணை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
- 11:21 (IST) 24 May 2021வீடுகளுக்கு உள்ளேயே இருங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுவதுமாக கடைபிடித்தால், கொரோனா பரவல் உறுதியாக கட்டுக்குள் வந்துவிடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரவல் சங்கிலியை உடைத்து விட்டால் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்து விடலாம். அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஊரடங்கை முறையாக பொது மக்கள் கடைப்பிடிக்க கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
- 11:13 (IST) 24 May 20219 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்பு!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்த காரணத்தால் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்த அமைச்சர்கள் மதிவேந்தன், சிவசங்கர் மற்றும் எம்.எல்.ஏக்கள் காந்திராஜன், வரலட்சுமி, வைத்திலிங்கம், இசக்கி சுப்பையா, கடம்பூர் ராஜூ உள்பட 9 பேர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
- 11:05 (IST) 24 May 2021முதல்வர் காப்பீட்டு திட்டம்; 890 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை!
தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 890 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 37 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
- 10:07 (IST) 24 May 2021Zero Delay வார்டு; சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.பேட்டி!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கப்படும் என சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 10:06 (IST) 24 May 2021தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. தற்போது, அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கால் தான் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்க மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
- 10:03 (IST) 24 May 2021யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்!
யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.