Tamil News Today : நேற்று எதிர்பாராதவிதமாக கனமழை பெய்த காரணத்தினால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மெரினா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல தடை
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால், பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி – மீண்டும் ஒரு வாய்ப்பு
குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஐ. பெரியசாமி தெரிவித்திருக்கிறார். மேலும், குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையெனக் கூறி நகைக்கடன்கள் தள்ளுபடி சலுகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 56-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னையில் கனமழை காரணமாக அதிக அளவில் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்துள்ள நிலையில் நள்ளிரவு 12 மணி வரை சேவை நீட்டிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் தனிப்பட்ட காரணம் மற்றும் தொழிலில் கவனம் செலுத்த இருப்பதால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தலைச்சிறந்த தமிழக கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பணியாற்றியது பெருமையளிக்கிறது என்று ரூபா குருநாத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.28.24 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தரைத் தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும் 11 கடைகளும் முதல் தளத்தில் 17 கடைகள், காவல் உதவி மையங்கள் உள்ளன.
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் இரவில் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கம் – 12 செ.மீ., நந்தனம் – 12 செ.மீ., மீனம்பாக்கம் – 10 செ.மீ. மழைபொழிவு பதிவாகியுள்ளது.
சென்னையில் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால்,
மெட்ரோவில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான் மோசடி வழக்கில் அவரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் தேடிவரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளைத் தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்பு படை அமைத்துள்ளது. தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நீட் ரத்து மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க கோரி உள்துறை அமைச்சகத்தில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மனு அளித்தனர்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அரசியலமைப்பு சட்டப்படி எங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளோம் என டி.ஆர். பாலு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொம்மானி மலையில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டபோது, சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து படுகாயம் அடைந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தலையில் இருந்த துப்பாக்கி தோட்டா அகற்றப்பட்டது.
புத்தாண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ சேவை தொடரும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்துள்ளதாக – மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 305 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆந்திராவில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து விற்பனை செய்ததாக 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் முருகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளர். 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கடும் கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்குவங்கத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீதிமன்றம் மூலம் தான் நிரபராதி என முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறியுள்ளார். மேலும் காவல்றை விசாரணைக்கு பின் பேசிய அவர், ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற புத்தகத்திற்காக அம்பை சி.எஸ் லட்சுமிக்கு 2021-ம் ஆண்டுக்கான் சாகித்ய அகாமமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.10,335 குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது என்று தமிழக அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டில் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்படும் 20 ஒழுங்கு விற்பனை கூடங்களை அணுகி தென்னை விவசாயிகள் பயன்பெறலாம் எனவும் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்
உத்தரகாண்டில் ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
சென்னையில் இன்று முதல் கொரோனா பரிசோதனையை 25 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் நடவடிக்கை
மீண்டும் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. அப்படி மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தால் கடந்த 2 ஆண்டுகளைப் போன்று பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என்று மமதா பானர்ஜி பேச்சு
சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் 46% பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சமூக பரவலாக மாறும் கவலையை இது அதிகரித்துள்ளது
புதுக்கோட்டை, அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்த நிலையில் நார்த்தாமலை கிராமத்தில் உள்ள சிறுவன் வீட்டில் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர், எம்.ஆர்.சி. மயிலாப்பூர் ஆகிய இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது
தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.
மும்பையில் இன்று முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தஞ்சாவூரில் ரூபாய் 894 கோடி மதிப்பிலான 134 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 98.77 கோடியில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை, அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு தாக்கி புகழேந்தி(11) என்ற சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் .சாமி தரிசனத்திற்கு தடை இல்லை என்றும் தனி மனித இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம் என்று இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் சுமார் ஆயிரத்து 230 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் திருச்சியில் ரூ.1,085 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கும் இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961-ஆக அதிகரித்துள்ளது. டெல்லி – 263, மகாராஷ்டிரா – 252, குஜராத் – 97, கேரளா – 65, தெலங்கானா – 62, ராஜஸ்தான் – 69, கர்நாடகா – 34, தமிழ்நாடு – 45, அரியானா – 12, மேற்கு வங்கம் – 11, மத்திய பிரதேசம் – 9, ஒடிசா – 9, ஆந்திரா – 16, உத்தரகாண்ட் – 4, சண்டிகர் – 3, காஷ்மீர் – 3, உத்தரபிரதேசம் – 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், பஞ்சாப், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல், மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பிரிவுக்கு மேலும் 3 ஆண்டுகள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் வரும் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 1.10 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசிகள், ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக செயல்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.