பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா வரும் இலங்கை அதிபர்
3 நாள் அரசுமுறை பயணமாக இன்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 15, 2024 22:27 IST
தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் மரணம்
பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.
-
Dec 15, 2024 21:59 IST
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் டிச. 16 வழக்கம்போல் இயங்கும் - கலெக்டர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைப்பொழிவு தற்போது முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை (டிசம்பர் 16) பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட உள்ளன. தாமிரபரணி கரையோர கிராமங்களில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தொடர்புடைய உள்ளாட்சியைச் சார்ந்த அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ உடனடியாக முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Dec 15, 2024 21:55 IST
ஆதவ் அர்ஜுனா விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை - திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா விலகலுக்குப் பின், வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி: “ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை; எவ்வளவு ஆற்றல் பெற்றவராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 15, 2024 21:52 IST
ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக இருந்தது - திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா விலகலுக்குப் பின், வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி: “இடைநீக்கம் செய்யப்பட்ட அன்றே ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக இருந்தது. மக்கள் நலனுக்காக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே இயங்கியிருக்க வேண்டும்” என்ற கூறினார்.
-
Dec 15, 2024 20:57 IST
எவ்வளவு பெரிய பாதிப்பு, இழப்பு ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ளும் சக்தியாக வி.சி.க இருக்கும் - திருமா
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “வி.சி.க எப்போதும் சனாதனத்திற்கு எதிராகத்தான் இருக்கும்; அதனால், எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும், பேரிழப்பு ஏற்பட்டாலும் அதனை தாங்கிக்கொள்ளும் சக்தியாக வி.சி.க இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 15, 2024 20:13 IST
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வருகை; எல்.முருகன் வரவேற்பு
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக அரசாங்க ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்.
-
Dec 15, 2024 17:48 IST
"ஒரே ஒரு தீர்மானத்திற்கு மட்டும் என் ஆதரவு": எ.வ. வேலு
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு அ.தி.மு.க தீர்மானத்தை மட்டும் தான் ஆதரிப்பதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
-
Dec 15, 2024 17:25 IST
தி.மு.க.வை அழிக்கும் முயற்சி - திருமாவளவன்
தி.மு.க.வை அழிக்க என்னை தூதாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக தான் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை விமர்சிப்பவர்களின் உண்மையான குறி தி.மு.க தான் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 15, 2024 16:44 IST
"ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை தேவையற்றது": சீமான் விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை தேவையற்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், மத்திய அரசிடமிருந்து நிதியை மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Dec 15, 2024 16:18 IST
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாடிக்கு 6 ஆயிரத்தில் இருந்து, 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
Dec 15, 2024 15:56 IST
அ.தி.மு.க தீர்மானம் - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
அ.தி.மு.க தீர்மானங்களில் கூட பா.ஜ.க.வுக்கு வலிக்காத வகையில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்துள்ளார். தீர்மானங்களில் பா.ஜ.க.வை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Dec 15, 2024 15:29 IST
இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக புகாரளித்த 2 பேருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் டிசம்பர் 24ம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Dec 15, 2024 15:10 IST
ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் எச்சரிக்கை
மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமானால், ஆதவ் அர்ஜுனா அமைதியாக இருக்க வேண்டும் என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும், தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை ஆதவ் அர்ஜுனா பேசி வருவதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Dec 15, 2024 14:54 IST
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் – இ.பி.எஸ்
ஜனவரி மாதம் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க 200 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
-
Dec 15, 2024 14:38 IST
3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது
-
Dec 15, 2024 14:33 IST
கருணாநிதி குடும்பம், மன்னர் குடும்பமா?- இ.பி.எஸ்
கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? குடும்ப ஆட்சிக்கு அ.தி.மு.க முற்றுப்புள்ளி வைக்கும். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் பேசியுள்ளார்
-
Dec 15, 2024 14:10 IST
இறுமாப்புடன் சொல்கிறேன், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற தி.மு.க.,வின் கனவு பலிக்காது – இ.பி.எஸ்
இறுமாப்புடன் சொல்கிறேன், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற தி.மு.க.,வின் கனவு பலிக்காது. அ.தி.மு.க.,வின் எழுச்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியும், 200 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெறும். மக்கள் பிரச்சினைகளை தி.மு.க கூட்டணி கண்டுகொள்வதில்லை. தி.மு.க கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை என்றால், தி.மு.க.,வில் இணைந்துவிட வேண்டியது தானே? உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான் தி.மு.க.,வின் சாதனை என எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் கூறியுள்ளார்.
-
Dec 15, 2024 13:47 IST
மக்களை ஏமாற்றிய கட்சி தி.மு.க தான் - எடப்பாடி பழனிசாமி
500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி தி.மு.க தான் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பேசியுள்ளார்
-
Dec 15, 2024 13:45 IST
கூட்டணி வரும் போகும், அ.தி.மு.க.,வின் கொள்கை நிலையானது – பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கூட்டணி என்பது அவ்வப்போது வரும் போகும், ஆனால் அ.தி.மு.க.,வின் கொள்கை நிலையானது என அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
-
Dec 15, 2024 13:22 IST
ஸ்டாலின் தனது ஆட்சியை நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார் - கே.பி.முனுசாமி
ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பங்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் கடுமையாக உழைத்தால், தி.மு.க கூட்டணி கட்சியினர் நம்மை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதமே உள்ளது, களத்தில் வெற்றி கனியை பறிக்க தயாராக வேண்டும். நிர்வாகிகளுக்கு பொருளாதார வசதி இல்லை என்றால், கடன் வாங்கியாவது அ.தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்
-
Dec 15, 2024 12:58 IST
இந்தியா என்பது கோட்சேவின் மண்ணோ, சாவர்க்கரின் மண்ணோ அல்ல - துரை வைகோ
இந்தியா என்பது கோட்சேவின் மண்ணோ, சாவர்க்கரின் மண்ணோ அல்ல; இது மகாத்மாவின் மண் என மக்களவையில் மதிமுக எம்.பி. துரை வைகோ கூறினார்
-
Dec 15, 2024 12:47 IST
அ.தி.மு.க.,வில் கருத்து வேறுபாடு எங்கே இருக்கிறது? - பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் ஆவேசம்
அ.தி.மு.க.,வில் எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? எங்கே இருக்கிறது சலசலப்பு? என பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்
-
Dec 15, 2024 12:27 IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
-
Dec 15, 2024 12:17 IST
இளையராஜாவின் பயோ-பிக் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்
இளையராஜாவின் பயோ-பிக் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என படம் கைவிடப்படுவதாக வெளியான தகவலுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளனர்
-
Dec 15, 2024 12:02 IST
அதிமுக பொதுக் குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்க்க வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம். மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்.
ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம். தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம். 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
Dec 15, 2024 11:39 IST
வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
Dec 15, 2024 11:38 IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு ஸ்டாலின் இறுதி அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.
-
Dec 15, 2024 11:09 IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் இல்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படவில்லை. 16-ம் தேதிக்கான நிகழ்ச்சி நிரலில் முன்னர் இம்மசோதா இடம்பெற்றிருந்த நிலையில் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெற வில்லை.
-
Dec 15, 2024 10:31 IST
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை உடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என தமிழ்நாடு அரசு புகழாரம் கூறியுள்ளது.
-
Dec 15, 2024 10:06 IST
ஈ.வி.கே.எஸ் உடலுக்கு திருமா அஞ்சலி
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
-
Dec 15, 2024 10:03 IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரியில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
-
Dec 15, 2024 08:39 IST
புழல் சிறைக்கு மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Dec 15, 2024 07:44 IST
அதிமுகவினர், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு
சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. காலை முதலே கூட்ட அரங்கிற்கு தொண்டர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பொதுக்குழு அரங்க நுழைவு வாயிலில் அதிமுகவினர், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதி சீட்டு இல்லாததால் உள்ளே விட பவுன்சர்கள் மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
-
Dec 15, 2024 07:42 IST
இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில், சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால், அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதிமுக உட்கட்சி தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.