Tamil News : தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார். அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கலாமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். நாளை மறுநாள் முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் அமெரிக்கா செல்வதாகத் தகவல் வெளியானது. ஆனால், குறிப்பிட்ட அந்த விமானத்தில் அவர் பயணம் செய்யவில்லை. இந்நிலையில், காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவருடைய மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அமெரிக்கா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம்
அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, பூமியிலிருந்து 408 கிலோ மீட்டருக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு சுழற்சி முறையில் ஆய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். ஆய்வு மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருள்கள் யாவும் விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை இணைந்து, ஐஸ்க்ரீம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ரோபோ கை, எறும்பு, எலுமிச்சை, அவகோடா உள்ளிட்ட 2,170 கிலோ எடையுள்ள பொருட்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளன.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம்
பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்க பதக்கம் வென்றார். இதன்மூலம், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மேலும், பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் இன்று புதியதாக 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை என்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் மரியன்னை பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் செப்.1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 68.55 மீட்டர் தூரம் வீசிய இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையில் கட்டுப்பாடுகள் அதிகரி்ப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையில் தளர்வுகள் அறிவிக்கப்பட் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளை தூய்மைபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாருக்கு பதக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டில் வினோத் தேர்ச்சி அடையாததால் பதக்கம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டுள்ளார்
பாஜகவின் ' பி ' டீம் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் உறுதிப்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். மேலும், கே.டி.ராகவன் மீதான குற்றத்திற்கு ஆதரவாக சீமான் பேசியது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அவனிக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு 2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங்கிற்கு 1 கோடியும் பரிசு அறிவித்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எத்தகைய சூழலையும் கையாள தயார் நிலையில் இந்தியா உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர். காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தக்கிய தாய் துளசிக்கு மனநல பரிசோதனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்ததால் அவருக்கு மனநலம் பாதிக்கவில்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்ய கட்டண விலக்கு வழங்கியதை எதித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் தமிழக அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தது மத்திய அரசு
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி வட்டெறிதல் போட்டியில் வெண்கலம் வென்றார் வினோத் குமார்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் தொடங்கியது. தற்போது நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலமும் வென்றுள்ளனர்.
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருடைய நினைவிடத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,763 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,19,23,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் தற்போது, 3,76,324 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.