Tamil News Highlights: ஜம்மு காஷ்மீரில் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை மேலும் நீட்டித்துள்ள அமித் ஷா இரவுப் பொழுதை புல்வாமாவில் உள்ள சிஆர்.பி.எஃப் முகாமில் கழித்தார். அப்போது பாதுகாப்புப் படையினரிடையே பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரடைந்து வருவதாகக் கூறினார். மேலும், அமைதியான ஜம்மு காஷ்மீரை சாத்தியப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமின்றி, மத்திய அரசு பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் ஜம்மு காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்புவரை திருப்தி கொள்ளக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
24 கோடியே 47 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,22,924 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,47,91,658 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 49,69,721 பேர் உயிரிழந்துள்ளனர். 22,19,18,464 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,79,03,473 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை – கேரள முதல்வர் பினராயி விஜயன்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், அணையின் உறுதித் தன்மை கேரளாவைச் சேர்ந்த பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையற்ற அச்சத்தைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், மழை தொடர்ந்தால், நிலையான கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.104.52-க்கும் டீசல், லிட்டர் ரூ.100.59-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
என்னை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
'காவல் கோட்டம்' புத்தகம் ஆங்கிலத்தில் 'The Bastion' என்ற பெயரில் சாகித்ய அகாடெமியால் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
திண்டிவனத்தில் சொத்துக்காக 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ல் திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி மீது பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு, ஏசி வெடித்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கோவர்த்தனன், மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
2வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அக்டோபர் 30ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதில் உயர்கல்வித்துறை, மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை செயலாளர்களும் பங்கேற்கின்றனர்
மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை தொடர்ந்து ஏற்காட்டிலேயே நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அக்டோபர் 2 ஆம் தேதி நடத்திய சோதனையைத் தொடர்ந்து உல்லாசக் கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமீன் மனுவை எதிர்த்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) செவ்வாயன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்திய மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவில் மும்பை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை க்ரூஸ் ஷிப் போதைப்பொருள் வழக்கில் ஆஜரானார். மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்கள் இரண்டும் ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்து, ஆர்யன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி உள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), அக்டோபர் 2 ம் தேதி மும்பையிலிருந்து கோவா செல்லும் பயணக் கப்பலைச் சோதனை செய்த பிறகு, ஆர்யனைக் காவலில் எடுத்து அக்டோபர் 3ம் தேதி கைது செய்தது. NCB பிரிவு 8(c), 20 (b), 27, 28, 29 மற்றும் 35 போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) சட்டத்தின் கீழ் ஆர்யன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்யன் அக்டோபர் 4ம் தேதி வரை NCB காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அக்டோபர் 7 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் உடனடியாக ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றார்.
இதனிடையே, நடிகை அனன்யா பாண்டே ஆர்யன் கானுடன் வாட்ஸ்அப் அரட்டைகள் செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக என்சிபி முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
NCB மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க NCB இன் 3 பேர் கொண்ட குழு இன்று டெல்லியில் இருந்து மும்பை செல்கிறது. இந்தக் குழுவில் டிடிஜி என்சிபி ஞானேஷ்வர் சிங் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.
திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல .
அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரா டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? எனறும் – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது வரம்புகளை மீறி, உள்நோக்கத்துடன் செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தலைவர் ரஜினிகாந்த், ஒவ்வொரு முறையும் தனது திரைப்படம் வெளியாகும் போது அதிர்வலைகளை ஏற்படுத்தி, ரசிகர்களை கவரக்கூடியவர் -என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழகத்தில் முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடிகால்களை தூர்வார வேண்டும்; அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
2021-22 ம் கல்வியாண்டில் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களையும் பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவம் உத்தரவிடப்பட்டுள்ளது.
வானிலை குறித்த முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள், மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோம் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தற்காலிக பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, ஆணையத்தின் முன்பாக மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை. அரசு கூறியதால்தான் சிசிடிவி கேமராக்கள் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டன என உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதுகுறித்து சமூக வலைதளங்களில் பீதி கிளப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
வரும் அக்டோபர் 30 ஆம் தேதி(சனிக்கிழமை) 7 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் 2-ம் நாளாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜரானார்.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தீபாவளி பண்டிகைக்கு ஊழியர்களுக்கு வழங்க ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருக்கிறார்.
வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டகளுக்கு இன்று முதல் ஒருவாரத்திற்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சசிகலா. மேலும், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்திக்க சசிகலா திட்டமிட்டிருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கி 11 மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டியும் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்ய வலியுறுத்தியும் விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்துள்ளார்.