Tamil News Highlights : தமிழகத்தில் இன்று மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 20,000 முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. 28 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா-ஒடிசா இடையே இன்று கரையைக் கடக்கிறது ’குலாப்’
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. குலாப் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த புயல், இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப் பெற்றிருக்கிறது. மேலும், இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக தனித்து போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான இடங்களும், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களும் உள்ளன. வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக – பாரதிய ஜனதா இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அக்கட்சியினர் தனித்தனியே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வேட்பு மனுவைத் திரும்பப்பெறக் கெடு முடிந்த நிலையில், இரு தரப்பிலும் யாரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், கள்ளக்குறிச்சியில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
வங்க கடலில் உருவான 'குலாப் புயல்' ஆந்திரா மற்றும் ஒடிஷா இடையே கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவித்துள்ளது
தமிழகத்தில் மேலும் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி வீரர் தீபக் சாஹர், நரைன் பந்தை அடித்து 1 ரன் பெற்றதால் சென்னை அணி ’த்ரில்’ வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியிடுகின்றனர். இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6064 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10792 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 61750 பேரும் போட்டியிடுகின்றனர்.
தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் அது தவறில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்
பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரைவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 15 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அற்புதமாக விளையாடி வருகிறது. 5 ஓவர் முடிவில் 42/0.
வங்க கடலில் உருவாகியுள்ள 'குலாப் ' புயல் 25 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியில் திரிபாதி 45, ராணா 37 மற்றும் தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தாக்கூர் மற்றும் ஹேஷல்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்துள்ளது. ராகுல் திரிபாதி அதிகப்பட்சமாக 33 ரன்கள் எடுத்துள்ளார்.
குலாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்
கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பெரும்பான்மை மக்களுக்கு பயன்தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அபதாபியில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மெக்கேவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 265 ரன்களை சேசிங் செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில், 2 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 14.58 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சார்பில் கீழடியில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன பழமையான பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு உறுப்பினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த பிடிஆர், “இந்தியா முழுமைக்கும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குலாப் புயல் கலிங்கப்பட்டினம் – கோபால்பூருக்கு இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமை செயலாளர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
குலாப் புயல் எதிரொலியாக கடலூர், சென்னை, நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 972 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 1117 ஆயுதங்கள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.