Tamil News Highlights : திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். விருப்ப மனுக்களை திமுக மாவட்டச் செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் ஆகஸ்டு 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்காம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை http://jeemain.nta.nic.in என்கிற இணையதளத்தில் காணலாம்.
வாரம் ஒருமுறை வார விடுப்பு
கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வாரம் ஒருமுறை வார விடுப்பு வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.
பதட்டமான 277 வாக்குச்சாவடிகள்
தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 277 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:48 (IST) 15 Sep 2021கோவை தனியார் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கொரோனா
கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மாநகராட்சி கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
- 21:46 (IST) 15 Sep 2021கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு
கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்து ஞாயிறன்று இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- 19:36 (IST) 15 Sep 2021தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 1,658 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய பாதிப்பு 1591 ஆக இருந்த நிலையில் இன்று 1,658 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 18:56 (IST) 15 Sep 2021தந்தையை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி புரிகிறார்; துரைமுருகன்
தந்தையை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி புரிகிறார் என துரைமுருகன் புகழ்ந்துள்ளார். மேலும், ராஜேந்திர சோழன் அவரது தந்தையை விட சிறப்பாக ஆட்சி புரிந்தார். கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்றப் புகழை, ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுள்ளார் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
- 18:52 (IST) 15 Sep 2021தொண்டர்களால் திமுக ஆட்சி - முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது என முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 18:19 (IST) 15 Sep 2021சசிகலா உறவினர் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்
சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள சசிகலா உறவினர் வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
- 18:04 (IST) 15 Sep 2021உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 என்ற எண்களில் தெரியப்படுத்தலாம்.
- 17:36 (IST) 15 Sep 2021திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக 25 பேர் நியமனம்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக 25 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யு தலைவர் கண்ணையா உள்ளிட்டோர் திருப்பதி தேவஸ்தான் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 16:34 (IST) 15 Sep 2021ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீகரத்தில் வரும் 19-ந் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி துபாயில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியஸ் அணிகள் மோதுகின்றன.
- 15:41 (IST) 15 Sep 2021சட்டவிரோதமாக மதுவிற்பனை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக்கில் மது வாங்கி சட்டவிரோதமாக விற்று கைதானவர்கள் ஜாமின் கோரிய வழக்கில், மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
- 15:13 (IST) 15 Sep 2021திமுகவுடன் கூட்டணி தொடரும் - திருமாவளவன்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுளள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகே தொடரும் என்று அக்கட்சியில் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- 15:10 (IST) 15 Sep 2021அதிமுகவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்பாடு சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே - பாமக
அதிமுகவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்பாடு சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே என்று கூறியுள்ள பாமக வழக்கறிஞர் பாலு பாஜக தலைமையிலான தேசிய ஜனாநயக கூட்டணியில் பாமக தொடர்கிறது என்றும், அடுத்து வரும் தேர்தல்களில் பாமக நிலைபாடு குறித்து கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவெடுப்பார் என்றும் கூறிுள்ளார்.
- 15:07 (IST) 15 Sep 20219 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய மனு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல், 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கு தடை கோரிய மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:04 (IST) 15 Sep 2021நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், "விடுமுறை காலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 14:52 (IST) 15 Sep 2021உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - எதிர்கட்சி தலைவர் கடிதம்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்றும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாநில போலீஸுக்கு பதில் சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 13:50 (IST) 15 Sep 2021எய்ம்ஸ் கல்லூரி விவகாரம்
மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்ட நிதியும் ஒதுக்கவில்லை; கட்டிடமும் கட்டவில்லை. கட்டப்படாத கல்லூரிக்கு எப்படி மாணவர்கள் சேர்க்கை நடத்த முடியும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- 13:46 (IST) 15 Sep 2021அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை - பாமக
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது என்றும் அதிமுகவுடன் எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் பாமக செய்தி தொடர்பாளார் பாலு பேட்டி அளித்துள்ளார். பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம். உடனடியாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- 13:26 (IST) 15 Sep 2021பூமியை தாக்க இருக்கும் சூரியப் புயல்
அடுத்த 10 ஆண்டிற்குள் சூரியப் புயல் பூமியை தாக்குவதற்காக சாத்தியங்கள் 1.6 முதல் 12% வரை உள்ளது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. இணைய வசதிகள், மின்சாரம், டிஜிட்டல் சேவைகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:39 (IST) 15 Sep 20211 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள்
ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து வருகின்ற 30ம் தேதி அன்று முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
- 12:37 (IST) 15 Sep 2021மானியக்கோரிக்கை திட்டங்கள் - நாளை ஆலோசனை
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக நாளை முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
- 12:20 (IST) 15 Sep 2021நீட் தேர்வு அச்சம்; மேலும் ஒரு மாணவி தற்கொலை
காட்பாடி அடுத்துள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாணவி சௌந்தர்யா. நீட் தேர்வு எழுதிய இவர், தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- 12:18 (IST) 15 Sep 20219 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தேமுதிக தனித்து போட்டி
9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றூம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 16 மற்றும் 17 தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
- 12:02 (IST) 15 Sep 2021கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போல - செல்லூர் ராஜு
"கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலதான், தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
- 11:24 (IST) 15 Sep 2021முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி, இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி என அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்! pic.twitter.com/vWk0X0jpmH
— M.K.Stalin (@mkstalin) September 15, 2021 - 11:21 (IST) 15 Sep 2021நீட் மாணவர்களுக்கு ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாகவும் மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையிலும் ஆலோசனை வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- 10:45 (IST) 15 Sep 2021பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் : எதிர்கட்சி தலைவர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையிலுள்ள அவருடைய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 09:55 (IST) 15 Sep 2021பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டதையொட்டி, அண்ணா சிலை முன் உள்ள படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- 09:54 (IST) 15 Sep 2021பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,51,870 லட்சம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 1,39,033 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.
- 09:51 (IST) 15 Sep 2021தேர்வின்றி தேர்ச்சி
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் எழுத இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
- 09:47 (IST) 15 Sep 2021திருப்பூரில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.