Tamil News Live : சேலம், தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று வாழப்பாடியில், "வரும்முன் காப்போம்" மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களையும், மருத்துவப் பிரிவுகளையும் திறந்துவைக்கிறார் . மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் ஆய்வு செய்கிறார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகாலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்
பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் நவராத்திரி, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா தடுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் திருவிழாக்கள், கூட்டங்கள், மத நிகழ்வுகள் போன்றவை மூலம் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம் கோரி நள்ளிரவு வரை போராட்டம்
கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற செவிலியர்களை, கொரோனா காலத்தில் 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசுப் பணி நியமனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, கொரோனா 2-வது அலை பரவல், 3-வது அலை எச்சரிக்கை காரணமாக அவர்களுக்குப் பணி நீடிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, போராடியவர்களை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் பூத்சிலிப் இல்லை எனத் திருப்பி அனுப்பக்கூடாது
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், வாக்காளரை எளிதாக அடையாளம் காண அளிக்கப்படும் பூத் சிலிப் இல்லையென வாக்காளரைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அவர்களின் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:26 (IST) 29 Sep 2021கொரோனா தொற்றுக்கு இன்று 24 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 24 பேர் பலியாகியுள்ளனர். இதில் நேற்று 17 பேர் பலியாகினர். இன்று ஒரே நாளில் 1639 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
- 19:01 (IST) 29 Sep 2021உள்துறை அமைச்சர் அமித்ஷா - கேப்டன் அமரீந்தர் சந்திப்பு
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
- 18:28 (IST) 29 Sep 202112 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
சித்தேரி மலைபகுதியை சேர்ந்த 12 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது கிராமத்தில் செல்போன் டவர் ஏற்படுத்தி தர வேண்டி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.
- 18:25 (IST) 29 Sep 2021திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும் - கே.எஸ். அழகிரி
தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
- 17:24 (IST) 29 Sep 2021அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்திய அரசாணைக்கு தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:06 (IST) 29 Sep 2021பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்
இதன் மூலம் 11 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தகவல்
ஏற்றுமதியாளர், வங்கிகளுக்கு ஆதரவளிக்க ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகத்தில் ரூ.4400 கோடி முதலீடு
- 16:04 (IST) 29 Sep 2021சிங்கார சென்னை 2.0 - விரிவான வழிக்காட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை ஏற்படுத்த சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பழமையான கட்டிடங்கள், நகர்புற நில மேம்பாடு, உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- 16:01 (IST) 29 Sep 2021தடை செய்யப்பட்ட ரசாயனம்: பட்டாசு ஆலைகள் மீது சிபிஐ ஏன் வழக்குப்பதிவு செய்யக் கூடாது? - நீதிபதிகள்
"சிவகாசியில் 4க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்திய பட்டாசு ஆலைகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? பட்டாசு உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக ஏன் சிபிஐ வழக்குப்பதிவு செய்யக் கூடாது?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- 15:21 (IST) 29 Sep 20212 அடுக்காக மதுரவாயல் பறக்கும் சாலை
இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் அமைய உள்ளதாகவும், சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதத்தில் நிறைவடையும் என நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என்றார்.
- 14:51 (IST) 29 Sep 2021முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை பராமரிக்க அரசு பாராமுகமாக நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
- 14:50 (IST) 29 Sep 2021திருவாரூரில் இனி பொது இடங்களில் மது அருந்த தடை: மாவட்ட எஸ்.பி
திருவாரூர் மாவட்டத்தில் இனி பொதுஇடங்களில் மது அருந்த தடை விதித்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் மது அருந்துவது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
- 14:25 (IST) 29 Sep 2021ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெ. போலவே ஸ்டாலினும் செயல்படுகிறார்
ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலவே, முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
- 13:29 (IST) 29 Sep 2021ஜப்பானின் அடுத்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா
ஜப்பானின் அடுத்த பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 13:04 (IST) 29 Sep 2021தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 12:51 (IST) 29 Sep 2021அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு மாரடைப்பு
ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சுவாச பிரச்சினை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 12:41 (IST) 29 Sep 2021ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபுவுக்கு 5 ஆண்டு சிறை
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.
- 11:51 (IST) 29 Sep 2021முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1991-96ல் அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- 11:42 (IST) 29 Sep 2021ரூ.500 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ரூ.500 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- 11:34 (IST) 29 Sep 2021சேலத்தில் வருமுன் காப்போம் திட்டம் தொடக்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
- 11:09 (IST) 29 Sep 2021சாமி தரிசனம் செய்யவும் அனுமதியளிக்க வேண்டும் - அண்ணாமலை
கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றும் டாஸ்மாக், பள்ளிகளை திறக்க அனுமதியளித்த அரசு சாமி தரிசனம் செய்யவும் அனுமதியளிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
- 11:07 (IST) 29 Sep 2021ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் வீட்டில் சோதனை
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், முருகானந்தத்தின் சகோதரர்களான ஒப்பந்ததாரர் பழனிவேல், அரசு ஊழியர் ரவிச்சந்திரனின் வீடுகளிலும் போலீஸ் சோதனை மேற்கொண்டனர்.
- 11:04 (IST) 29 Sep 2021வக்பு வாரிய சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய தடை
வக்பு வாரிய சொத்துகள் பொதுச்சொத்துகள் என்பதால் அதனை பத்திரப் பதிவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தடையில்லா சான்றிதல் பெற்றிருந்தாலும் கூட வக்பு வாரிய சொத்துகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் பத்திரப் பதிவுத்துறை தலைவருக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது.
- 10:42 (IST) 29 Sep 2021கர்நாடகா தமிழ்நாடு இடையே பிரச்னையும் இல்லை - ஈஸ்வரப்பா
கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்னையும் இல்லை என்றும் கர்நாடக மக்களும் தமிழ்நாடு மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர் என்றும் மதுரையில் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டியளித்துள்ளார்.
- 10:41 (IST) 29 Sep 2021கர்நாடகா தமிழ்நாடு இடையே பிரச்னையும் இல்லை - சேகர் பாபு
இருதய விழிப்புணர்வு மருத்துவம் முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்னையும் இல்லை என்றும் கர்நாடக மக்களும் தமிழ்நாடு மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர் என்றும் கூறினார்.
- 10:38 (IST) 29 Sep 2021மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான் – அண்ணாமலை
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான், மாநில அரசுடையது அல்ல என்றும் உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி படை பலம், பண பலத்தை தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.