Tamil News Live : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் இன்று காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. 2019-க்குப் பிறகு, இன்று 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், 11 வகையான கொரோனா மருந்துகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச்சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்படலாம் மற்றும் பெட்ரோல் – டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை வழங்கி வரவேற்பு
சென்னை வந்தடைந்த தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்குச் சென்று பொன்னாடை வழங்கி வரவேற்றார்.
அக்டோபரில் கொரோனா அதிகரிக்கும்
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1,500 – 1,600-க்குள் பதிவாகி வரும் நிலையில், அக்டோபர் மாதம் இந்த நிலை மேலும் மோசமாகக்கூடும் என்றும் அதனால் மக்கள் இப்போதிலிருந்தே கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இங்கே
– ஜிஎஸ்டி கவுன்சில், கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
– ஜிஎஸ்டி கவுன்சில் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் வரி விகிதங்களை 12%ல் இருந்து 5% குறைக்கப்படுகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
– டீசலுடன் கலப்பதற்கான பயோடீசலுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12%ல் இருந்து 5% குறைக்கப்பட்டது: நிதியமைச்சர்
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய,
ஜனவரி 1, 2022 முதல் காலணி மற்றும் ஜவுளி துறை மீது கடமை அமைப்பை சரிசெய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொள்கிறது.
– ஜிஎஸ்டி கவுன்சில் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) வரி விகிதம் தொடர்பான சிக்கல்களைப் பார்க்கவும், 2 மாதங்களில் பரிந்துரைகளை வழங்க வேண்டும் கூறினார்
– இ-காமர்ஸ் செயல்பாட்டாளர்களான ஸ்விகி, ஜொமோட்டோ மூலம் வழங்கப்படும் உணவக சேவைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்; ஜி.எஸ்.டி விநியோக இடத்தில் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,565 பேர் குணமடைந்த நிலையில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஆளுநராக நாளை (செப்டம்பர் 18) பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி சண்மையில் நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாளை (செப்டம்பர் 18) ஆளுநராக பதவியேற்க உள்ளார். இன்று சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 18) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என 500 பேர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை நிர்பந்திக்க கூடாது என எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார் பேட்டையில், பாஜக மீனவர் அணி சார்பில் 710 கிலோ மீன் வழங்கப்பட்டது.
ஆந்திரா – ஒடிசா எல்லையில் குங்கரி மற்றும் பத்ரி பஹத் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அதிரடி படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் சிலர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
போலீசாரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு பிறகு மாவோஸ்ட் இருந்த இடத்தை சோதனையிட்டதில் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், மருத்துவப் பொருள்கள், உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளக்காலங்களில் ஏற்படும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் தீயணைப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், ஆற்றில் விழுந்த நீச்சல் தெரியாத ஒருவரை எப்படி காப்பாற்றுவது அவர்களுக்கு எப்படி முதலுதவி செய்வது மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
பெரியார் என்றால் சமூகநீதி, சமூக நீதி என்றால் பெரியார்' என காலத்தால் அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சமூகநீதியின் வடிவமாக விளங்கினார் பெரியார் என கூறியுள்ள திருமாவளவன் எம்பி, பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, இந்த அரசு 'பெரியார் அரசு அல்லது சமூகநீதி அரசு' என்பதை உலகுக்கு உரத்து சொன்ன முதல்வருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், நியூசிலாந்து அரசு விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து போட்டித்தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம். சமூக நீதி, சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் இக்காலத்தில் அதிகமாக தேவைப்படுகிறது. என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்” என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாகவும்,
2010-11ல் ரூ.3.56 கோடி
2011-12ல் ரூ.1.12 கோடி
2012-13ல் ரூ.103.64
2013-14ல் ரூ.64.44 கோடி
2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகபட்சமாக 2004-05 நிதியாண்டில் டாஸ்மாக்கிற்கு ரூ.232.73 கோடி லாபம் கிடைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் விவகாரத்தில் நிலம் கையகப்படுத்திய அரசாணைக்கு அனுமதி தந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் புதுக்கோட்டை, மதுரை, காரைக்காலிலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 19ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மாஸ்க் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நெருக்கடியான காலத்தில் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இராணுவ மைதானத்தில் நடந்த நிகழ்வில் சமூகநீதி நாளை முன்னிட்டு 5 உறுதிமொழிகளை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உறுதிமொழியேற்பு நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி உடல்நலனுடன் நீண்ட நாள் வாழவேண்டுமென கூறி 71-வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Birthday greetings to our Hon'ble Prime Minister Thiru @narendramodi. Wishing him a long and healthy life.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2021
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதிய தீண்டாமைகளை களைத்து மக்களை காக்கவும் பெண்கள் விடுதலைக்காகவும் போராடியவர் பெரியார் எனக்கூறி எதிர்கட்சி தலைவர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதிய தீண்டாமைகளை களைந்து மக்களை காக்கவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய ்தைபெரியார் அவர்தம் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/NrqYIowMii
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 17, 2021
''பெரியாரால் பெண்ணினம் மேன்மை அடைந்தது'' என்றுகூறி தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது.அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!#hbdperiyar143 pic.twitter.com/fsfreATuTa
— M.K.Stalin (@mkstalin) September 17, 2021
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
உடல் நலக்குறைவால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா காலமானார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கொரோனா காலக்கட்டம் என்பதால் கிண்டி, ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, முதல் இரண்டு நாள்களில் 4,975 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பை 32-ஆக உயர்த்தும் அரசாணை தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதமரின் பிறந்த நாளான இன்று முதல் அவர் பெற்ற பரிசுகளை மின்னணு-ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் இந்த ஏலத்தில் உள்ளன.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிருக்கின்றனர். அந்த வரிசையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பாதையில் நம்மை அர்ப்பணிப்போம் என்றும் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது என்றும் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.