வழக்கறிஞர்கள் குழு நியமனம்
காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாட தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் இறுதி அல்லது நவம்பர் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள், நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், சிக்கலான தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றும் உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாகத் திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார் மோடி. விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கமலாவிடம் அழைப்பு விடுத்தார்.
புதிதாக 5,12,822 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 5,12,822 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,13,56,228 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 47,41,625 பேர் உயிரிழந்துள்ளனர். 20,80,27,975 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 1,85,86,628 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
வெள்ளை மாளிகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன் மற்றும் சீமா அகர்வால் ஆகிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு டிஜிபியாக பதவி உயர்வு அளித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கும் வேளச்சேரி, பள்ளிக்கரனை போன்ற இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கால்வாய்கள் தூர்வாருதல், சீரமைப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்கிறார்.
பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும்” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் தென்காசி மாவட்ட அதிமுக வேட்பாளர்களுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த 2003-ம் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கண்ணகி முருகேசன் தொடர்பாக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கிய நிதிபதி ஜாதி கவுரவத்திற்காக தமிழ் மண்ணில் கண்ணகி எரித்து கொலை செய்யப்பட்டதே கடைசியாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி மற்றும் ஹரியானாவில் பிரபல ரவுடியான ஜித்தேந்தர் கோகி ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வழங்கறிஞர் வேடத்தில் வந்த சில மர்மநபர்கள் நடத்திய தூப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்.
பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி ரோஹிணி கீழமை நீதிமன்றத்தில் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தனி நபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் பற்றி அறிக்கை தர அரசுக்கு அக்டோபர் வரை அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் திட்டங்களை அரசு செயல்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மையை மறைத்து பொய் பிரச்சாரம் செய்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்தார் கடலூர் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தமராஜா.
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று புதுவையில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாபிகள் அனைவரும் என்னுடைய சகோதரர்கள். அவர்களிடம் இருந்து என்னை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் தனியாக பாதுகாப்பு படையினர் தனக்கு வேண்டாம் என்று பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கன்னட மொழி கட்டாயம் என்ற சட்டம் உள்ளது. இதனை எதிர்த்து நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சுவார்த்தை
நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரி அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்து பதில் அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அழும் பிள்ளைக்கு மட்டும் அல்ல, அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக இருந்து திமுக செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரக ஊராட்சி தேர்தல் செயல்பாடுகளுக்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், நலத் திட்டங்களை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்த கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளாவின் சில பகுதிகளில் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வதாக கூறினார். மேலும், அங்கு போதுமான சிகிச்சை பெறாதவர்கள் யாரும் இல்லை என்றும் சுகாதார ஊழியர்களை தாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்குவதற்கு சமம் என்றும் கூறினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையிலுள்ள பழைய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட சதிஷன் மற்றும் பிஜின்குட்டி ஆகியோரிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும் நாளை 3-வது குற்றவாளி திபு மற்றும் 10-வது குற்றவாளி ஜித்தின் ஜாய் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் சுமார் 4 கோடியே 38 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்களில், 7 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்தன.
கொரோனா காலத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொண்டு வந்ததில், கப்பல் துறையின் பங்கு முக்கியமானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.