Tamil News Highlights : மெட்ரோ ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், டோக்கனுக்குப் பதிலாக கியூ ஆர் கோடு பொறித்த காகித டிக்கெட் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலைங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் இந்த டிக்கெட்டை பயன்படுத்தலாம். இதன் மூலம் டோக்கன்களைப் போல, ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.
சமையல் எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்
இந்தியாவில் பண்டிகைக் காலத்தையொட்டி சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய்களின் விலை கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சமையல் எண்ணெய் வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதிய மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்சூ பாண்டே, சமையல் எண்ணெய் வகைகளின் விலை, கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து உயர் ஆணையர் இன்று சென்னை வருகை
இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் அலெக்சாண்டர் எல்லிஸ் இன்று சென்னை வருகிறார். தனது இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மற்றும் ஒரு சில வணிக நிறுவனங்களைப் பார்வையிடுவது போன்றவை உயர் ஆணையர் மேற்கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்திய வீரர் முகமது ஷமி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முகமது ஷமிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு இரு புது அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்
நவம்பர் 1 முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்தின் 2 ஆவது பாடல் தலைக்கோதும் இளங்காற்று சேதி கொண்டு வரும் என்ற பாடல் வெளியாகி உள்ளது
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்திய வீரர் முகமது ஷமி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம்; சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தகுத்தேர்வை வட்டார மொழிகளில் நடத்த வேண்டும். இந்தி, ஆங்கிலம் தெரியாது என்பதற்காக ஒருவரது அறிவியல் திறமையை மறுக்க இயலாது என கருத்து தெரிவித்த நீதிபதி, நவம்பர் 7இல் நடைபெறவிருந்த தகுதித்தேர்வை ஒத்திவைக்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2021 கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கல்லூரிகளுக்கும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றதிடம் இருந்து விளக்கம் பெற்ற பிறகு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2021 கலந்தாய்வு பற்றி அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று தொடங்கவிருந்த நீட் முதுகலை கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் முதுகலை கலந்தாய்வில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வரும்வரை கவுன்சிலிங் நடைபெறாது என எம்சிசி தெரிவித்துள்ளது.
பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவையற்றது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு வாதிட்டுள்ளது. நுழைவு வரி தொடர்பான மற்ற வழக்குகளில் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தனக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு வாதிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.32.30 லட்சம் வரிபாக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்பது பெரும் சவாலாக உள்ளது; வங்கிகள், அரசுடன் கை கோர்க்க வேண்டும். நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மக்களைக் காக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நண்பர் ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்” வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்களை ஏற்படுதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்று கூறியுள்ளார் ஓ.பி.எஸ். மேலும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு மேற்கொள்வாரக்ள் என்றும் அவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திராவில் இன்று வடகிழக்கு பருவமழை துவங்கியது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அசுரன் திரைப்படத்திற்காக பெற்றுக் கொண்டார் நடிகர் தனுஷ். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்றுள்ளது. ஏற்கனவே இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்திற்கும் சிறந்த நடிகர் விருதை தனுஷ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர் சிவாஜிக்கு பிறகு தமிழ்த் திரைத்துறையில் இந்த விருதைப் பெறுகிறார் நடிகர் ரஜினி காந்த்.
திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். திரைவானின் சூரியன் ரஜினி உலகளவில் பல விருதுகளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
அக்டோபர் 24ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெற இருந்த நீட் பி.ஜி. கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், உயர் சாதி ஏழைகள் மற்றும் ஓ.பி.சி. இட ஒதுகீடு குறித்த வழக்கு முடியும் வரை கலந்தாய்வுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்று அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நிச்சயம் வேரூன்றி நிற்கும் என்று தெரிவித்த அவர், கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அசுரன் படத்திற்கான சிறந்த தமிழ் திரைப்பட விருதை வழங்கினார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.
67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
குளித்தலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜய பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் மட்டும் நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதல் 2 வாரங்கள் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக, பொறியியல் படிப்பு குறித்த அறிமுகம் மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்க, இன்று அங்கு மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
திட்டமிட்டப்படி நவம்பர் ஒன்றாம் தேதி 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் உறுதியளித்துள்ளார். தீபாவளிக்கு பிறகு வர நினைக்கும் மாணவர்களை முன்கூட்டியே வர கட்டாயப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் மோதல் போக்கு நீடிக்கும் சூழலில், கண்காணிப்பை பலப்படுத்த முடிவு செய்து எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றியது சீன அரசு.
இந்தியா முழுவதும் ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இது, இந்தி பேசாத மாநில ஊழியர்களின் உரிமைக்கு கிடைத்த வெற்றி என்றும் தனது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என்றும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக 14.4% இடங்கள் நிரம்பிய நிலையில் 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தலில் வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா முழுமையாக முடிந்தவுடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.