நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெரும் மசோதா
கடந்த 9-ம் தேதி போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சட்டப்பேரவைக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார். மேலும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து ஒரு மாதமாக நடந்த சட்டப்பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இந்திய சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு பேரியக்கமாக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல் வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள், செவிலியர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், செலுத்திக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்டாலின்.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வடேவ் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மோதினர். இப்போட்டியின் இறுதியில், டேனில் மெட்வடேவ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பேத்தியும், பாமக எம்.பி. அன்புமணி அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். தமிழகத்தில் இன்றுடன் ஆளுநர் தனது பணிகளை முடித்துக் கொள்கிறார்.
அரசுப் பணிகளில் மகளிஅரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது; இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இறகுப்பந்து விளையாட்டு கூடம் மற்றும் பூங்காக்கள், மழைநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை, உட்புற சாலை ஆகியவற்றை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும். என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும், 9 மாவட்டங்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும் , 2ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறும்
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ .10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். மேலும் தனுஷின் குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.1 கோடி நிதியுதவியும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . ஆஸ்கர் பெர்னாண்டஸ், கடந்த ஜூலையில் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்தபோது கீழே விழுந்ததில், லேசான காயம் ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப். 13) மதியம் உயிரிழந்தார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: “நிதி ஆதாரம் இல்லாமல் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நிதி இல்லாமல் அதிமுக திட்டங்களை அறிவித்தது. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படாத திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் திட்டங்களை அறிவித்த பின் ஆய்வு செய்து பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதையடுத்து, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாலர் ஹென்றி திபேன் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் சீல் வைத்த கவரில் அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், அதை வெளியிடுவது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இதை சுட்டிக்காட்டி ஹென்றி திபேன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியிருகிறது. அந்த அடிப்படையில், இந்த அறிக்கையின் நகலை தமிழக அரசினுடைய, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த அறிக்கையைப் பெற்ற பிறகு தமிழக அரசு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி காட்டக்கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் புலனாய்வுப் பிரிவு அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக புபேந்திர படேல் புதிய முதல்வராக பதவியேற்றார்
நீட் மசோதாவுக்கு அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்த நிலையில், +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு செய்யவுள்ளது
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன் வடிவை வரவேற்கிறோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மேலும், அண்ணாமலை பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினராக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரை சபாநாயகர் அப்பாவு நியமனம் செய்துள்ளார்.
போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என மனித வள மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது செய்ய வழி வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடும் குற்றம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
“முதல்வர், அமைச்சர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருவதை ஊடகங்கள் பாராட்டியுள்ளன. திமுக அரசின் செயல்பாட்டை பாராட்டி தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்த மூன்றாம் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் இம்மாதம் வழங்குகிறது.
அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி 700 ஆயுள் தண்டனை கைதிகள் நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்!
போலீசார் அரசு பேருந்துகளில் பயணிக்க வசதி. சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும். மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும். குறைகளைப் போக்க காவல் ஆணையம் அமைக்கப்படும். காவலர்கள் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திற்குள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். திருச்சி, மதுரையில் புதிதாக ரூ.5.49 கோடி செலவில் கணினி தடயவியல் பிரிவு தொடங்கப்படும். அரியலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4-வது நபர் ஜம்ஷீர் அலி, தனிப்படை முன் ஆஜர் ஆனதை அடுத்து உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றும் உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
போலீசார் பேருந்துகளில் பயணிக்க வசதி செய்துதரப்படும் என்றும் சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும் மற்றும் மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் காவல்துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மாணவர் தனுஷ் தற்கொலை தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.
பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வரும் 14 -ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தவறுதலாக பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இணையதள பக்கத்திலிருந்து ரேங்க் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நீக்கியது.
நீட் தேர்வால் சமூக – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதிச் சுமை இருக்கிறது எனவும் அது சமத்துவம் இன்மையை வளர்க்கிறது எனவும் நீட் தேர்வு சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம், சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினரின் அறிக்கையில் உள்ள தகவல் மசோதாவில் இவை இடம்பெறுகின்றன.
உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி புதிய வீடியோவில் தோன்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது என தெரிவித்துள்ளார்.