Tamil news Highlights : உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.70 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,460 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் – 1.75 லட்சம், பிரிட்டனில் – 98,515, ஸ்பெயினில் – 53,654, பிரான்ஸில் – 30,383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உலகம் முழுவதும் கொரோனாவால் 28.16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25.08 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 54.22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கான்பூர் செல்லும் மோடி
உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் மெட்ரோ ரயில், பினா – பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கான்பூர் செல்கிறார். மேலும், கான்பூர் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.
பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சென்னையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். பாலியல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்களின் விவரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 54-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கிழக்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக, கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 29ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 30-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் டிசம்பர் 30ல் நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்கிறார்
கேரளாவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை தாமதப்படுத்துவதை கண்டித்து டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தற்போது 20,400 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் புலிகள் அச்சம் அடையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்காலிக பாதை திறக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தற்காலிக பாதையை திறந்து வைத்தனர். தற்காலிக பாதை மூலம் மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலியில் அமர்ந்து கடல் அலையை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 45ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 11 பேரில் 4 பேர் ஆபத்தான நாடுகளில் இருந்து வந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராடும் மருத்துவர்கள் மீதான போலீசாரின் நடவடிக்கைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 11 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் போராடி வரும் மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை, ஏற்க வேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் பகுதியில், எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-இல் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளை அடிக்கும் முயற்சியின் போது, அபாய ஒலி அடித்ததால் பயந்த திருடன், முயற்சியை கைவிட்டு பாதியிலேயே கைவிட்டு தப்பியோட்டம்.
பல்கலை., வளர்ச்சி, ஆராய்ச்சி, புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை., துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் ரிவிஷன் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புக்கு ஜனவரி 19 முதல் 27ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புக்கு ஜனவரி 20 முதல் 28ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை. மருத்துவரின் ஆலோசனை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சி, டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ. 1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களின் அகவிலைப்படி, 17%-லிருந்து, 31% ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அரசாணை ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி அதிகரிக்கும் நிலையில், பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மெட்ரோ, உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தனர்.
விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். FEMA எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சவுரவ் கங்குலி நலமாக உள்ளார் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தினசரி பாதிப்பு 0.5 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் வயதினருக்கு ஜனவரி 3ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் சிறார்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த பயிற்சி அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரத்யேக மையங்களை நிறுவலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் திங்கள் கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தப்படுவதாக நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள் கிழமை முதல் (ஜனவரி 3 முதல்) மறு உத்தரவு பிறப்பிக்ககும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை ஆரம்பமாக உள்ளது
உ.பி,, கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகியுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்
புதுச்சேரியில் 80 வயது முதியவருக்கும், 20 வயதுடையவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான திருத்தி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியாகியுள்ளது.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவோவாக்ஸ் மற்றும் கார்பெவாக்ஸ் தடுப்பூசிகள் மற்றும் மால்னுபிரவிர் ஆகிய மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் பிடிபட்டார்.
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சவ்ரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று. தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653-ஆக அதிகரித்துள்ளது. நேற்று 578-ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 653 ஆக அதிகரிப்பு.