Tamil News Highlights : வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைத்தள பக்கங்களும் திடீரென்று முடங்கின. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சேவை முடங்கியதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் பேஸ்புக் அறிவித்தது. விரைவில் சேவை துவங்கும் என்றும் விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 8 மணி நேரம் வரை முடங்கிய இந்த வலைத்தள பக்கங்கள் இன்று காலை 5 மணியளவில் மீண்டும் இயங்கத் துவங்கின. இதனால், சமூகவலைத்தள பயனாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பண்டோராஸ் பேப்பர்ஸ்: பலதுறை குழு விசாரிக்கும்
பண்டோராஸ் பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ள ஒவ்வொரு இந்தியரின் பெயரும் விசாரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதிசார் உளவுத்துறை என பலதுறையினரும் இணைந்த குழுவினர் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கோரி பெறப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
1500-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா தொற்று
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,467-ஆக குறைந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,666-ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 16,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236,112,863 ஆக உயர்ந்திருக்கிறது. 4,821,925 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 213,166,171-ஆக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.100.23-க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.95.59-க்கும் விற்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உத்திரபிரதேசத்தில் வன்முறை நடந்த லக்கிம்பூர் பகுதிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் குழு நாளை செல்ல உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், பொது நல வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனுவில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் வீரர் சாம் கரண், காயம் காரணமாக விலகியுள்ளதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்காக நாளையும், 9ஆம் தேதியும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார்.
கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சென்னை, வேப்பேரியில் கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுயுகுரோ மனாபே, க்ளாஸ் ஹாசெல்மென், ஜார்ஜியா பாரிசி ஆகிய 3 பேருக்கு 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் விருது பருவநிலை மாற்றம், அதற்கான காரணங்கள், அதற்கான வடிவமைப்புகள் ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது உத்தர பிரதேசம் ஹர்கான் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உ.பி.யில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். இவ்விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரித்தால் உண்மை வெளியே வராது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆம் நாள், இனி ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச் சென்ற சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 மணி நேரம் முடங்கியதால், அந்நிறுவனங்களின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூபாய் 52 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனி பிரிவிற்கு நேரில் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
நீலகிரியில் தேடப்பட்டு வரும் டி23 புலியை கொல்லவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், புலியை கொல்லும் திட்டம் இல்லை என்ற தமிழக வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி 5ம் முகாம் அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 297 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று ஒரே தொற்று பாதிப்பும் குறைந்து நேற்று 8 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 28 மணி நேரமாக உரிய உத்தரவின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்னை சிறைவைத்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரபிரதேசம், சிதாபூரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராடிய போது அவர்கள் மீது கார்கள் வரிசையாக ஏறிச்செல்லும் அதிர்ச்சி வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ப்ரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற காங்கிரஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் அருகே அனுமதியின்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும், டாஸ்மாக், பெட்டி கடைகள் அருகே மது அருந்த அனுமதித்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 மணி நேரமாக உரிய உத்தரவின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்னை சிறைவைத்துள்ளனர் என்று உத்தரபிரதேசம், சிதாபூரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.