Advertisment

Tamil News Updadtes: இந்தியாவின் சி.ஏ.ஜி புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமனம் - நிதியமைச்சகம் அறிவிப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sanjay Murthy CAG

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் தினமும் சற்று மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 45.13% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 54.4% ; புழல் - 72.82% ; பூண்டி - 15.41% ; சோழவரம் - 10.64% ; கண்ணன்கோட்டை - 61.4%

 

 

  • Nov 19, 2024 05:22 IST
    இந்தியாவின் சி.ஏ.ஜி புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமனம் - நிதியமைச்சகம் அறிவிப்பு

    இந்திய கணக்கு தணிக்கை ஆணையத்தின் (சி.ஏ.ஜி) புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமனம் செய்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

    நவம்பர் 20-ம் தேதி ஓய்வுபெறும் தற்போதைய கிரிஷ் சந்திர முர்முவுக்குப் பிறகு சஞ்சய் மூர்த்தி பதவியேற்பார்.

    மூர்த்தி தற்போது கல்வி அமைச்சகத்தில் உயர்கல்வித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

    1989-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கே சஞ்சய் மூர்த்தி, இந்தியாவின் அடுத்த தலைமை கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி) அதிகாரியாக இருப்பார்.



  • Nov 18, 2024 21:42 IST
    விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள் - திருப்பூர் சுப்பிரமணியம்  

    திருப்பூர் சுப்பிரமணியம்: “பல கோடி ரூபாய் போட்டும் படம் எடுத்தால் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யூடியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள்; இந்தியன் 2, வேட்டையன் படங்களும், சமீபத்தில் கங்குவா படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்களை திரையரங்கு வருவது பாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.



  • Nov 18, 2024 21:32 IST
    சில்வர் பேப்பரில் உணவு பார்சல் - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

    தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக், கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல் முறை ரூ.2000, இரண்டாவது முறையாக ரூ.5000, மூன்றாவது முறையாக ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை  அறிவித்துள்ளது.



  • Nov 18, 2024 20:19 IST
    திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி 2 பேர் பலி: செல்ஃபி எடுத்தபோது ஏற்பட்ட ஆத்திரம் - வனசரக அலுவலர் விளக்கம்

    திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளித்த வனசரக அலுவலர் கவின், “பாகனின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபியால் ஆத்திரமடைந்து சிசுபாலனை யானை கால் மற்றும் துப்பிக்கையால் தாக்கியுள்ளது; சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.



  • Nov 18, 2024 19:31 IST
    நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’ - 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனாகாரியா 

    16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனாகாரியா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: “ நாட்டின் மொத்த GDP-யில் தமிழ்நாடு 8% பங்களிப்பை வழங்குகிறது. அதே அளவிலான நிதிப்பகிர்வை எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


    நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை நான், ‘மாஸ்டர் கிளாஸ்’ என்று கூறுவேன். ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் அனைத்தையும் ஒருங்கிணைத்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டும்தான் வரிப்பகிர்வை ஏன் அதிகரிக்க வேண்டும் என விளக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, 15வது நிதிக்குழுவானது நிதிப்பகிர்வு முறையை பரிந்துரைத்ததை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

    தனிநபர் ஆண்டு வருமானத்தை பெயரளவில் மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. பீகாரில் ஒரு உருளைக்கிழங்கின் விலையும் தமிழ்நாட்டில் அதன் விலையும் ஒன்றாக இல்லை. வாங்கும் திறனில் உள்ள வேறுபாட்டை நிதிக்குழு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

    இதுவரை 10 மாநிலங்களில் நிதிக்குழு ஆலோசனை மேற்கொண்டதில், தமிழ்நாடு மட்டும்தான் தனி நபர் ஆண்டு வருமானம் மற்றும் வாங்கும் திறனை குறிப்பிட்டு பரிந்துரைகள் அளித்துள்ளது

    பேரிடருக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலங்களுக்கு வளர்ச்சிக்கான நிதி தொடர்பான மாற்று வழிகள் குறித்து ஆராயப்படும்” என்று கூறினார்.



  • Nov 18, 2024 19:21 IST
    லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ. 12.41 கோடி பறிமுதல் அமலாக்கத்துறை நடவடிக்கை

    லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 22 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் ரூ.12.41 கோடி அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது.  லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 22 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • Nov 18, 2024 19:02 IST
    வாக்காளர் பட்டியல் திருத்தம்: 6,85,513 விண்ணப்பம் 

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம், மொத்தம் 6,85,513 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



  • Nov 18, 2024 19:01 IST
    8 விமானங்கள் திடீரென ரத்து

    சென்னையில் இருந்து இன்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 4 விமானங்கள் மற்றும் அங்கிருந்து வருகை தரும் 4 விமானங்கள் என 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள். 



  • Nov 18, 2024 19:00 IST
    மேட்டூர் அணை தண்ணீர் வெளியேற்றம்: 1000 கன அடியாக குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை நிலவரப்படி, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 



  • Nov 18, 2024 18:59 IST
    ஹர்ஷித் ரானா அறிமுகம்?

    பார்டர் - கவாஸ்கர் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்ஷித் ரானா அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  



  • Nov 18, 2024 18:57 IST
    ஓய்வுபெறும் பேராசிரியர்களுக்கு மறுநியமனம் நீட்டிப்பு 

    அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி ஆண்டின் இடையில் பேராசிரியர் பணி ஓய்வு பெற்று செல்லும் போது, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் ஓய்வு அளிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது



  • Nov 18, 2024 18:38 IST
    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை - ஜெயக்குமார் எச்சரிக்கை 

    தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையில் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறித்திரியும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • Nov 18, 2024 18:33 IST
    16-வது நிதிக் குழுவுக்கு அளித்த முக்கிய பரிந்துரைகள் - தமிழக அரசு வெளியீடு

    16-வது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:- 

    நகர்ப்புற வெள்ள பாதிப்புக்கு ரூ.2,500 கோடி, வறட்சி நிவாரணமாக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். 

    பரிந்துரை காலத்தில் செயல்படுத்தும் நிதி அளவுகளில் ஆண்டுகளுக்கு 5% இல் இருந்து 10% ஆக உயர்த்த வேண்டும். 

    மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27 ஆண்டில் 50%ஆக உயர்த்த வேண்டும்.

     90:10 என்ற அளவில் ஒன்றிய மற்றும் மாநில நிதிப் பங்கீட்டில் பேரிடர் மேலாண்மை நிதி வழங்க வேண்டும்.

     



  • Nov 18, 2024 18:09 IST
    கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா: விடுமுறை அறிவிப்பு 

    கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3 எம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.



  • Nov 18, 2024 18:08 IST
    யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழப்பு!

    திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயன் மற்றும் அவரது உறவிரான சிசுபாலன் உயிரிழந்தனர். 

    இந்த சம்பவத்தை ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் பேசுகையில், "பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது

    கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளார். 



  • Nov 18, 2024 17:38 IST
    வேற்று மதத்தினரை மாற்ற முடிவு 

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 



  • Nov 18, 2024 17:37 IST
    அ.தி.மு.க-வில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு

    ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கிவைத்ததால் மறுதினம் அ.தி.மு.க கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் விடுவிக்கப்பட்டார். 

    இந்த நிலையில், 40 நாட்களில் தற்போது மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகள் வழங்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 



  • Nov 18, 2024 17:00 IST
    பிளாஸ்டிக் கவர்களில் உணவுகளை பார்சல் செய்ய தடை

    உணவகம், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் பொருள்களை பார்சல் செய்ய தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் முதல் முறை ரூ. 5000 அபராதம் எனவும், அடுத்த முறை கடைக்கு தற்காலிக சீல் வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 18, 2024 16:38 IST
    டிசம்பர் 3 உள்ளூர் விடுமுறை

    டிசம்பர் 3-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூய சவேரியார் பேராலய விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.



  • Nov 18, 2024 16:12 IST
    திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

    திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்தனர். மாலை 3 மணியளவில் பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோர் யானைக்கு பழம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஆக்ரோசத்துடன் யானை தாக்கியதில், சிசு பாலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த உதயன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.



  • Nov 18, 2024 15:53 IST
    தீவிரவாதி போல் நடத்தப்படுகிறார் நடிகை கஸ்தூரி - தமிழிசை

    நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என்று தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரி தவறான கருத்துகளை கூறியதற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும், அவரை தீவிரவாதி போல் தமிழக காவல்துறை நடத்துவது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 18, 2024 15:38 IST
    மருத்துவமனையில் பிராங் வீடியோ - 2 பேர் கைது

    தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் இளைஞர்கள் கையில் அடிபட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு வீடியோ பதிவிட்டிருந்தனர். பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Nov 18, 2024 15:07 IST
    10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Nov 18, 2024 14:48 IST
    சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை மரணம்

    சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்த நிலையில், சிக்கன் ரைஸ், பர்கர் சாப்பிட்டதால் மரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா, நேற்று ம.பி.யில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயிலில் சென்னை வந்துள்ளார். ரயிலில் சிக்கன் ரைஸ், பர்கர் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில் சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ரயிலில் இருந்து இறங்கியவுடன் அண்ணா நகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எலினா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே எலினா உயிரிழந்தார்.



  • Nov 18, 2024 14:46 IST
    சென்னையில் பேருந்து நிறுத்தங்களை இடமாற்ற திட்டம்

    சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றி அமைக்கப்பட உள்ளன. சிக்னல் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது



  • Nov 18, 2024 14:44 IST
    பாலியல் புகார் - பாடகர் குருகுகன் கைது

    திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில், பாடகர் குருகுகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதாக கூறி, கட்டாயப்படுத்தி கருவை கலைத்துவிட்டு ஏமாற்றியதாக குருகுகன் மீது இளம்பெண் குற்றச்சாட்டு கூறிய நிலையில், பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்



  • Nov 18, 2024 14:18 IST
    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் முறைகேடா? - சந்தேகம் எழுப்பும் தேர்வர்கள்

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் முறைகேடு நடத்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். 5000 பேருக்கு அண்மையில் பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் நகல்களை வெளியிட்டுள்ளது. பலருக்கு மதிப்பெண்கள் முரண்பாடாக வழங்கப்பட்டு இருப்பதால், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் கூறுகின்றனர். மெயின் தேர்வு விடைத்தாளை இரண்டு மதிப்பீட்டாளர்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்வார்கள். ஒரு கேள்வியில் 12 மதிப்பெண்களுக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மார்க் கொடுத்துள்ள நிலையில், 2வது மதிப்பீட்டாளர் 0.5 மதிப்பெண் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் சுமார் 350 பேருக்கு மதிப்பெண்களில் முரண்பாடுகள் இருப்பதாக புகார் கூறப்படுகிறது.



  • Nov 18, 2024 13:57 IST
    மற்றவர்களின் கூட்டணி பற்றி எங்களுக்குத் தேவை இல்லை - சீமான்

    மற்றவர்களின் கூட்டணி பற்றி எங்களுக்குத் தேவை இல்லை என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்



  • Nov 18, 2024 13:40 IST
    வீட்டை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கார்பெண்டர் தற்கொலை

    திருவேற்காடு கோலடி பகுதியில் வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய நிலையில், வீட்டை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கார்பெண்டர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்



  • Nov 18, 2024 13:39 IST
    7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 18, 2024 13:17 IST
    புழல் சிறைக்குள் தூக்கமின்றி தவித்த நடிகை கஸ்தூரி

    புழல் சிறைக்குள் தூக்கமின்றி தவித்த நடிகை கஸ்தூரி, சிறை உணவை தவிர்த்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை எதுவும் சாப்பிடவில்லை என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன



  • Nov 18, 2024 13:16 IST
    தன் ஆட்சி சிறப்பான ஆட்சி என ஆட்சியாளர் கூறினால், அது கொடுமையான ஆட்சி என்று அர்த்தம் – சீமான்

    தன் ஆட்சி சிறப்பான ஆட்சி என ஆட்சியாளர் கூறினால், அது கொடுமையான ஆட்சி என்று அர்த்தம் ஆட்சி சிறப்பாக உள்ளது என மக்கள் கூற வேண்டும் என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • Nov 18, 2024 12:59 IST
    தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..

    திருப்பூர் ராக்கியாப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பள்ளி மாணவர்களின் பைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Nov 18, 2024 12:08 IST
    என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

    மணிப்பூரில் மீண்டும் அதிகரித்துள்ள வன்முறை தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது.



  • Nov 18, 2024 11:45 IST
    சேலார் பேனல் அமைக்க அனுமதி

    நெல்லை கங்கைகொண்டானில் சேலார் பேனல் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1260 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலமாக 3150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Nov 18, 2024 11:44 IST
    அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு

    சென்னை அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு நாள்தோறும் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளது.



  • Nov 18, 2024 11:42 IST
    சபரிமலையில் நான்காவது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.



  • Nov 18, 2024 11:39 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - குண்டர் சட்டம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிரான வழக்கில் நோட்டீஸ் - தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



  • Nov 18, 2024 11:15 IST
    இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

    இலங்கை நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்.  



  • Nov 18, 2024 11:13 IST
    பொதுக்கூட்டத்துக்கு வந்தா நாற்காலி இலவசம்

    அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு வந்தால் நாற்காலி இலவசம் என்ற அறிவிப்பால், விழா முடிந்து செல்லும்போது பொதுமக்கள் நாற்காலியை எடுத்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.



  • Nov 18, 2024 10:36 IST
    அரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடக்கம்

    தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, முன்பதிவு நடைமுறையில் மாற்றம் செய்து 60 நாட்கள் பதிலாக 90 நாட்கள் முன்னதாகவே முன்பதிவு செய்யலாம்.

     டி.என்.எஸ்.டி.சி செயலி மூலம் பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



  • Nov 18, 2024 10:18 IST
    வரி பகிர்வு குறைவால் மாநிலங்கள் அதிக பாதிப்பு - ஸ்டாலின்

    மத்திய அரசின் வரிப் பகிர்வில் 33.16% மட்டுமே மாநிலத்துக்கு வழங்குகிறது. வரி பகிர்வு குறைவால் மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது, மத்திய அரசு வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    மாநிலங்களுக்கு சமச்சீரான வரி பகிர்வு அளிக்க வேண்டும், தற்போதைய வரி பகிர்வு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. 

    சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை குறைத்து வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. 

    அதிக நிதி வழங்கிய போதும், வளர்ச்சி குன்றிய மாநிலங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை, வரிப்பகிர்வு மாநில அரசின் செயல்பாட்டை தொய்வடையும் செயலாக உள்ளது.

    இயற்கை பேரிடரை சந்திக்கும் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. மாநிலம் சார்பில் பேரிடர்களுக்கு அதிக நிதி செலவிடப்படுவதால், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை என -16வது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Nov 18, 2024 09:43 IST
    ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்

    ஆராய்ச்சி படிப்பு மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ஆராய்ச்சி மாணவர் தன்னை ஆசிரியர் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

    கல்வி சார்ந்த பணிகளை தவிர வேறு பணிகளுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. வேறு வகைகளில் மாணவர்களை பயன்படுத்தினாலோ, அலைக்கழித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என உயர்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

     



  • Nov 18, 2024 08:44 IST
    சிவகங்கையில் மழை- விடுமுறை பற்றி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம்

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். 



  • Nov 18, 2024 08:23 IST
    மணிப்பூர் கலவரம்- அமித் ஷா ஆலோசனை

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திங்கள்கிழமை உயர் அதிகாரிகளுடன் விரிவான கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் ஆலோசனை செய்கிறார். 

    Today in Politics: Shah may review Manipur situation

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் இனக்கலவரத்தால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை காணாமல் போனதாக கருதப்பட்ட மெய்தேய் இன பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் வன்முறை மீண்டும் வெடித்தது.



  • Nov 18, 2024 07:49 IST
    தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். 



  • Nov 18, 2024 07:37 IST
    Nayanthara - Beyond The Fairy Tale ஆவணப்படம் வெளியானது

    நயன்தாராவின் திரைப்பயணம், காதல் திருமணத்தை உள்ளடக்கிய ஆவணப்படம் Nayanthara - Beyond The Fairy Tale நெட்ஃபிளிக்ஸ்  ஓ.டி.டி.யில் வெளியானது. 

    நடிகர் தனுஷ் - நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நானும் ரவுடி தான், படப்பிடிப்பு காட்சிகளுடன் ஆவணப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது. 



  • Nov 18, 2024 07:34 IST
    15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்ச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment