Tamil News Today updates corona : தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் செயல்படாது என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 96,99,575 ஆக அதிகரித்துள்ளது குணமடைந்தோர் எண்ணிக்கை 52,53,089 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணியை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்ய உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது.
சாத்தான்குளம் லாக்அப் மரணம் : இறுதி சடங்கு நிறைவு.. வியாபாரிகள் இன்றும் கடையடைப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3246ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Live Blog
Tamil News Today Live updates :சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,435 கன அடியில் இருந்து 787 கன அடியாக குறைந்துள்ளது அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் – 93.65 அடி. நீர் இருப்பு – 56.92 டிஎம்சி.
இந்தியாவில் ஊரடங்கிற்குப் பிறகு பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.நெல்லை ‘இருட்டுக் கடை’ உரிமையாளர் ஹரிசிங் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சமீப காலத்தில் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்வது மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
‘ஒவ்வொரு உயிரும் முக்கியமானது; இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்’
– கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட்
‘தூத்துக்குடியில் ஜெயராஜ், பெனிக்ஸுக்கு நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ – நடிகை மாளவிகா மோகனன் ட்வீட்
‘அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்’
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம்
*அணுமின் நிலைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதியில் முழு முடக்கம்
தொற்று நோய் பரவும் அபாயகரமான காலத்தில் ஒரு மருத்துவரை போல கடமை கண்ணியம் கட்டுப்பாடு மீறாமல் காவல் துறை மக்களை காக்க வேண்டும். இச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது, உயிர்களின் இழப்பு அனுமதிக்க முடியாது. எளிய மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு வழியில்லாமல் அல்லல்படும் இக்காலத்தில் அவர்களின் மனதில் ஆறாத வடுவாக இச்சம்பவம் கலங்கடிக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவேண்டும். அந்த நீதி திரும்ப இது போன்ற வன்செயல்கள் நடக்காமல் தடுக்கும்படியாக இருக்க வேண்டும்.
– இயக்குனர் சீனு ராமசாமி
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை; கொடூர தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – விஷ்ணு விஷால் ட்வீட்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிலங்களுக்கு பட்டா போட்டு தருமாறு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு!
மேற்குவங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லடாக், கார்கில் பகுதியில் நிலநடுக்கம்’
லடாக் கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
டெல்லியில் மேலும் 3,460 பேருக்கு கொரோனா”
டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு
– சுகாதாரத்துறை
* கொரோனா பாதிப்புமொத்த எண்ணிக்கை 77,240 ஆக அதிகரிப்பு
‘மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா’
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளாக 5,024 பேருக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 175 பேர் உயிரிழப்பு
-சுகாதாரத்துறை
‘டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட துணை முதல்வர் உத்தரவு’
கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவு
போலீஸ் தடை உத்தரவை மீறியதாக 6,273 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் போலீஸ் தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட பைக், ஆட்டோ உட்பட 6,273 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், ‘அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஊரடங்கு முடியும் வரை முட்டை ஒன்றின் விலை 370 காசுகளாக தொடரும் என நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அடுத்து நாமக்கல் மண்டலம் சிபாரிசு செய்யும் முட்டை விலையின் அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மதுகிரி நகர மக்கள், தங்கள் பகுதி மக்களை காப்பாற்றி கொள்ள ஏதுவாக சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சுய ஊரடங்கை மக்கள் கடைப் பிடிப்பார்கள் எனவும், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே மக்களின் தேவைக்காக திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மதுகிரி மக்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காவல்துறையினரின் இந்த மூர்க்கத்தனமான செயல் ஒரு கொடுங்குற்றம்
* பாதுகாக்கப்பட வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது பெருந்துயரம்
– சாத்தான்குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
மதுரை, தேனி மாவட்டங்களிகல் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இதுவரை 41,357 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்தது
கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் இருவரும் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் என்று இசையமைப்பாளர் இமான், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை போல தான் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
’தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்’ என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.
லாக் அப் மரணத்தில் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது என, லாக்-அப் மரணத்தில் தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்
காஞ்சிபுரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 1,573 ஆக அதிகரித்துள்ளது
‘சென்னையை விட்டுச் செல்லும் அச்சம் இனி வராது’. சென்னையை விட்டுச் சென்றுவிட வேண்டுமென்ற அச்சம் இனி மக்களுக்கு ஏற்படாது. வாழ்வாதாரத்திற்காக மக்கள் சென்னையை விட்டுச் செல்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
தென்காசியில் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவரின் மரணம் தொடர்பாக, மறு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான் குளத்தில் இறந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பதில் கூற வேண்டும் எனவும், அவர் மக்கள் மன்றத்தால் விரைவில் தண்டிக்கப்படுவார் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம் கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் கேமராக்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயம் ரவி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை -மகன் லாக்அப் மரணத்தில் தாமாகவே முன்வந்து விசாரனை தொடங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி எஸ்.பி இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதுத் தொடர்பான விசாரனை இன்று காலை தொடங்கிய நிலையில், காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கூடுதல் மன அழுத்தத்தில் இருக்கும் காவலர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேலூர் அரப்பாக்கம் பகுதியில் சோதனை சாவடியில் காவல், வருவாய்துறையினர் நடத்திய சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்பு, பேருந்தில் பயணித்த அனைவரும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாத்தான்குளத்தில் லாக்அப் மரணம் அடைந்த வியாபாரிகள் ஜெயராஜின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்திற்கும், நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவதற்கான பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.
3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் அளிக்கப்படும். 1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. நோய்த் தொற்றை தடுக்க மண்டலம் வாரியாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அனைவரது எதிர்பார்ப்பும், கொரோனா தொற்று பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்ற ஒற்றை எதிர்பார்ப்பிலேயே உள்ளது
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தந்தை ஜெயராஜ், மகன் பென்னீஸ் மரணத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்று தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.