Chennai News Live Updates: ‘தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்

Tamil Nadu Latest Live News Update in Tamil 15 August 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 15 August 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nainar nagendran (2)

Today Latest Live News Update in Tamil 15 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

  • Aug 15, 2025 12:54 IST

    கொட்டும் மழையில் தேசிய கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை

    டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கொட்டும் மழையில் நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே தேசிய கொடியை ஏற்றினார்.



  • Aug 15, 2025 12:45 IST

    புதிய திட்டங்கள் அறிவிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்

    தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதற்கு தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.



  • Advertisment
  • Aug 15, 2025 12:22 IST

    கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை - அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன்

    அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி: “இது சந்தோஷமான தருணம், ரொம்ப பெருமையா நினைக்கிறேன். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ககன்யான் திட்டம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.



  • Aug 15, 2025 12:16 IST

    ‘தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்; தி.மு.க ஆட்சியில் போதைப் பொருள் நடமாட்டம் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 15, 2025 11:55 IST

    50 ஆண்டு கால திரையுலகப் பயணம்; வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

    50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • Aug 15, 2025 11:40 IST

    அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு மோடி பதிலடி

    நமது விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் எதிர்த்து நான் ஒரு தடுப்பு சுவராக நிற்கிறேன். பாரதம் அதன் விவசாயிகளுடன் ஒருபோதும் சமரசம் செய்யாது என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 



  • Aug 15, 2025 11:15 IST

    கிருஷ்ணரின் சுதர்சன சக்ரா திட்டம் செயல்படுத்தப்படும் - மோடி

    எதிரிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க 'சுதர்சன சக்ரா திட்டம்' செயல்படுத்தப்படும். மகாபாரதத்தில், கிருஷ்ணர் சூரியனின் கதிர்களை மழுங்கடிக்க சுதர்சன சக்ராவைப் பயன்படுத்தினார் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் போல, சுதர்சன சக்ரா திட்டம் எதிரிகளை அழித்து மக்களை பாதுகாக்கும் என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்



  • Aug 15, 2025 10:52 IST

    நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட சட்டபூர்வமான நடவடிக்கையே ஒரே தீர்வு - ஸ்டாலின்

    நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்



  • Aug 15, 2025 10:30 IST

    பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு மாநில இளைஞர் விருது

    சுதந்திர தின விழாவில் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



  • Aug 15, 2025 10:01 IST

    காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை, ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் ஆகியவற்றை  மு.க.ஸ்டாலின் வழங்கினார். இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது செல்வி, துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.



  • Aug 15, 2025 09:59 IST

    சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்

    *விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு..  *மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம்

    சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்

    Video: Sun News



  • Aug 15, 2025 09:34 IST

    செங்கோட்டையில் இருந்து புறப்பட்டார் மோடி

    டெல்லி: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.



  • Aug 15, 2025 09:27 IST

    ஆர்.எஸ்.எஸ் 100 ஆண்டுகள் சேவை: பிரதமர் மோடி

    இன்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு அமைப்பை - ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) - பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். தேசத்திற்கு 100 ஆண்டுகள் சேவை என்பது ஒரு பெருமைக்குரிய, பொன்னான அத்தியாயம். (தனிநபரை உருவாக்குவதன் மூலம் தேசத்தை உருவாக்குதல்) என்ற உறுதியுடன், பாரத தாயின் நலன் என்ற இலக்குடன், ஸ்வயம்சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். ஒரு வகையில், ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பு ஆகும். இதற்கு 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாறு உண்டு. வறுமை என்றால் என்ன என்பதை நான் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை, அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் அரசாங்கத்திலும் சேவை செய்திருக்கிறேன், அதனால்தான் அரசாங்கம் கோப்புகளுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், குடிமக்களின் வாழ்க்கையைச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். ஒரு காலத்தில், ஏழைகள், விளிம்புநிலையினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக, ஒரு அரசு அலுவலகத்திலிருந்து இன்னொரு அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிந்து தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இன்று, அரசாங்கம் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து, திட்டங்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை



  • Aug 15, 2025 09:25 IST

    இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்

    எதிர்காலத்தில், பெரும் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200வது பிறந்தநாள் வர இருக்கிறது. அந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளை நாம் தொடங்க உள்ளோம். மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் கொடுத்த மந்திரங்களில், பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது நமக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து, மாற்றத்தின் உச்சத்தை நாம் எட்ட விரும்புகிறோம். என் நாட்டின் இளைஞர்களே, இன்று ஆகஸ்ட் 15, இந்த நல்ல நாளில் நமது நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை நாம் தொடங்குகிறோம். இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.15,000 கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா, இளைஞர்களுக்கு கிட்டத்தட்ட 3.5 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 

    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை



  • Aug 15, 2025 09:20 IST

    விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: ஸ்டாலின்

    விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும்

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் ஸ்டாலின் அறிவிப்பு 



  • Aug 15, 2025 09:08 IST

    தேசியக் கொடி ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     



  • Aug 15, 2025 09:02 IST

    ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

    தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா அவர்களை அமரவைத்து காலை உணவு பரிமாறினர். 

    Video: Sun News



  • Aug 15, 2025 08:59 IST

    முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் ஸ்டாலின்

    79வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றார் மு.க.ஸ்டாலின்.

    Video: Sun News



  • Aug 15, 2025 08:53 IST

    தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது- பிரதமர் மோடி

    இந்த தீபாவளியை, உங்களுக்காக இரட்டை மகிழ்ச்சியாக மாற்றப் போகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச் சுமையைக் குறைக்கும். கடந்த பத்தாண்டுகளாக, இந்தியா சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற மூன்று நிலைகளைக் கடந்துள்ளது. இப்போது, நாம் மேலும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டும். அண்மையில், அந்நிய நேரடி முதலீடு (FDI), காப்பீட்டுத் துறை மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது போன்ற பல சீர்திருத்தங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம்.

    பிறருடைய கோட்டைச் சிறிதாக்க, நம் ஆற்றலை நாம் வீணடிக்கக் கூடாது. நம்முடைய கோட்டை முழு ஆற்றலுடன் நீளமாக்க வேண்டும்'. அப்படி நாம் செய்தால், உலகம் நம் வலிமையை ஏற்றுக்கொள்ளும். இன்றைய உலகச் சூழலில், பொருளாதாரத் சுயநலம் அதிகரித்து வரும் நிலையில், நாம் அந்த நெருக்கடிகளைப் பற்றி அழுது கொண்டிருக்காமல், துணிச்சலுடன் நம் கோட்டை நீளமாக்க வேண்டும். இந்த வழியை நாம் பின்பற்றினால், எந்தவொரு சுயநலமும் நம்மை சிக்க வைக்க முடியாது.



  • Aug 15, 2025 08:51 IST

    பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

    நாம் இப்போது 'சமுத்திர மந்தன்' என்ற இலக்கை நோக்கிச் செல்கிறோம். இதை முன்னெடுத்து, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், ஒரு இயக்கமாக (Mission Mode) செயல்பட இருக்கிறோம். இதற்காக, இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வு இயக்கத்தை (National Deep Water Exploration Mission) தொடங்க இருக்கிறது.

    #ஆபரேஷன்சிந்தூர்-ல், 'மேட் இன் இந்தியா' சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. எதிரிகளின் ஆயுதங்கள் சில நொடிகளில் அழிக்கப்பட்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாம் தற்சார்புடன் இல்லையென்றால், இத்தகைய சாதனையை செய்திருக்க முடியுமா? கடந்த 10 ஆண்டுகளில், தற்காப்புத் துறையில் தற்சார்பு அடைவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டதன் பலனை இன்று காண்கிறோம்.

    விண்வெளித் துறையில் நமது சாதனைகள் நம் அனைவருக்கும் பெருமையைத் தருகின்றன. விண்கல வீரர் (Group Captain) சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) திரும்பி, இன்னும் சில நாட்களில் இந்தியா வரவுள்ளார். தற்சார்பு பாரதத்தின் ஒரு பகுதியாக, நாம் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருகிறோம். மேலும், நம் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். விண்வெளித் துறையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழுத் திறமையுடன் இதில் ஈடுபட்டுள்ளனர். இது நம் நாட்டின் இளைஞர்கள் மீது நமக்குள்ள நம்பிக்கை மற்றும் அவர்களின் வலிமை.



  • Aug 15, 2025 08:23 IST

    இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சிப் சந்தையில் கிடைக்கும்

    பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் பேசும்போது, செமிகண்டக்டர்கள் குறித்த ஒரு உதாரணத்தின்பால் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். எந்த ஒரு அரசையும் விமர்சிப்பதற்காக நான் செங்கோட்டையில் இல்லை; அதை நான் செய்ய விரும்பவில்லை. ஆனால், நாட்டின் இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். செமிகண்டக்டர்களுக்கான கோப்பு வேலைகள் 50-60 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் தொடங்கப்பட்டன. செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கான யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. செமிகண்டக்டர் குறித்த இந்த யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பே கருவிலேயே அழிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நாம் 50-60 ஆண்டுகளை இழந்துவிட்டோம். நாங்கள் தற்போது செமிகண்டக்டர்கள் குறித்து இயங்குமுறை (Mission Mode) அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்... இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சில்லுகள் சந்தையில் கிடைக்கும். எண்ணற்ற மக்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர், தங்கள் இளமையை சிறைகளில் கழித்தனர், அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இன்று, நான் இளம் விஞ்ஞானிகள், திறமையான இளைஞர்கள், பொறியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து துறையினரையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நமது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களுக்கு நம்முடைய சொந்த ஜெட் என்ஜின்கள் இருக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை



  • Aug 15, 2025 08:10 IST

    என் சொந்த நாட்டின் நிலமும் தாகத்தில் தவித்து வருகின்றது- மோடி

    நாட்டு மக்கள் சிந்து நதி ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது, ஒருதலைப்பட்சமானது என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வரும் நிலையில், என் சொந்த நாட்டின் விவசாயிகளும், நிலமும் தண்ணீர் இல்லாமல் தாகத்தில் தவித்து வருகின்றது. கடந்த ஏழு தசாப்தங்களாக என் நாட்டு விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இனி தண்ணீரின் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உண்டு. 

    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை



  • Aug 15, 2025 08:07 IST

    சிறந்த மாநகராட்சி விருது

    சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுகளில் சிறந்த மாநகராட்சிகளுக்கான பட்டியலில், ஆவடி, நாமக்கள் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
    ஆவடி மேயர் ஜி.உதயகுமார், நாமக்கல் மேயர் டி.கலாநிதி ஆகியோரிடம் விருதுகள் வழங்கப்படும்!



  • Aug 15, 2025 08:05 IST

    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை

    கடந்த 75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கலங்கரை விளக்கம் போல வழிகாட்டுகிறது. 


    என் அன்புக்குரிய இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர திருவிழா 140 கோடி மக்களின் தீர்மானங்களின் திருவிழா. இது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று 140 கோடி குடிமக்களும் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் மூழ்கியுள்ளனர். இன்று செங்கோட்டையில் இருந்து, நாட்டுக்கு வழிகாட்டி, நாட்டுக்கு திசை காட்டிய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு எனது மரியாதையான வணக்கத்தை செலுத்துகிறேன். இன்று டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் மாமனிதர். அரசியலமைப்பிற்காக தியாகம் செய்தவர். ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை 370-வது பிரிவின் சுவரை இடித்து உயிர்ப்பித்தபோது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்.


    இன்று செங்கோட்டையில் பல சிறப்பு பிரமுகர்கள் உள்ளனர். தொலைதூர கிராமங்களில் இருந்து பஞ்சாயத்து உறுப்பினர்கள், ட்ரோன் தீதி பிரதிநிதிகள், லட்சாதிபதி தீதி பிரதிநிதிகள், விளையாட்டு உலகைச் சேர்ந்தவர்கள், நாட்டிற்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒன்றைக் கொடுத்த சிறந்த மக்கள் இங்கே உள்ளனர். ஒரு வகையில், ஒரு மினியேச்சர் இந்தியாவை என் கண்களுக்கு முன்னால் இங்கே பார்க்கிறேன். இன்றும், செங்கோட்டை தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, நாம் இயற்கை பேரிடர்கள், நிலச்சரிவுகள், மேக வெடிப்பு மற்றும் பல துயரங்களை எதிர்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் அனுதாபங்கள். மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் முழு பலத்துடன் செயல்பட்டு வருகின்றன.


    இன்று செங்கோட்டையில் இருந்து, ஆபரேஷன் சிந்துரின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த படுகொலையால் ஒட்டுமொத்த இந்தியாவும் கொதிப்படைந்தது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆபரேஷன் சிந்துர் அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். 22-ம் தேதிக்குப் பிறகு, எங்கள் ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். அவர்களே வியூகம், இலக்கு மற்றும் நேரத்தை தீர்மானிக்கிறார்கள். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. எதிரி மண்ணில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம். பாகிஸ்தானில் ஏற்பட்ட அழிவு மிகவும் பெரியது. 
     
    பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரை

     



  • Aug 15, 2025 07:43 IST

    செங்கோட்டைக்கு மேல் பறந்து மலர்களைத் தூவிய ஹெலிகாப்டர்கள்

    டெல்லி: இந்திய விமானப்படையின் இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டைக்கு மேல் பறந்து மலர்களைத் தூவின. ஒரு ஹெலிகாப்டர் மூவர்ணக் கொடியுடன் பறக்க, மற்றொன்று 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பதாகையைக் காண்பித்தது.

    காணொலி: டிடி



  • Aug 15, 2025 07:41 IST

    140 கோடி மக்களின் சங்கல்பங்களின் திருவிழா- பிரதமர் மோடி

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 79-வது சுதந்திர தின உரையைத் தொடங்கினார். இந்த மகத்தான சுதந்திரப் பெருவிழா 140 கோடி மக்களின் சங்கல்பங்களின் திருவிழா- பிரதமர் மோடி

    (காணொளி ஆதாரம்: டிடி)



  • Aug 15, 2025 07:38 IST

    செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

    டெல்லி: செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

    (காணொளி ஆதாரம்: டிடி)



  • Aug 15, 2025 07:34 IST

    ஸ்டாலின் சுதந்திர தின நல்வாழ்த்து

    இந்த இனிய நாளில், ஜனநாயகம் பாதுகாக்கப்படும், ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் மதிக்கப்படும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு நமது மிகப்பெரிய பலமாகப் போற்றப்படும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    உண்மையான சுதந்திரம் என்பது வெறுப்புணர்வை நிராகரிப்பது, பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது, விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட சமத்துவம், கண்ணியம், மரியாதை ஆகிய விழுமியங்களைப் பேணிக்காத்து, ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக வாழ வகைசெய்வதே உண்மையான சுதந்திரம்.

    X பக்கத்தில் ஸ்டாலின் சுதந்திர தின நல்வாழ்த்து



  • Aug 15, 2025 07:31 IST

    செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி

    சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்க பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார்.

    காணொளி: டிடி



  • Aug 15, 2025 07:26 IST

    மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

    (காணொளி: டி.டி)



  • Aug 15, 2025 07:26 IST

    தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

    சுதந்திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி சு.லட்சுமி ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள் 21 பேருக்கு வழங்கப்படுகின்றன



  • Aug 15, 2025 07:25 IST

    இந்தியாவின் 79வது சுதந்திர தினம் கொண்டாட்டம்

    இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி. 
        
    அதேபோல முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். 



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: