/indian-express-tamil/media/media_files/2025/09/12/shseel-2025-09-12-20-25-14.jpg)
Today Latest Live News Update in Tamil 12 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்குa விற்பனையாகிறது.
- Sep 12, 2025 21:38 IST
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இந்தியா ஆதரவு
ஐநாவில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரும் 'நியூயார்க் பிரகடனத்திற்கு' ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளதாகவும், பிரகடனத்திற்கு ஆதரவாக 142 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்த நிலையில், தீர்மானம் நிறைவேறியது.
- Sep 12, 2025 20:23 IST
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,தற்போதைய நாடாளுமன்ற அவை கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 12, 2025 20:21 IST
வர்த்தக பேச்சுவார்த்தை: இந்தியா வரும் அமெரிக்க வர்த்தக குழு
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தக குழு அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இரு நாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- Sep 12, 2025 20:18 IST
பி.சி.சி.ஐ பா.ஜ.க இணைந்து நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது: சிவசேனா கண்டனம்
பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்து பி.சி.சி.ஐ பா.ஜ.க இணைந்து நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது. போட்டி நடைபெறும் செப்டம்பர் 14-ந் தேதி எனது சித்தூர் எனது நாடு என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளதாக சிவசேனா கட்சியின் உத்தவ் தாரே கூறியுள்ளார்.
- Sep 12, 2025 20:14 IST
நல்ல தத்துவம் மட்டுமே தானாக வெற்றி பெற்றுவிடாது: ஆ.ராசா எம்.பி.
நல்ல தத்துவம் மட்டுமே தானாக வெற்றி பெற்றுவிடாது. அதற்கு ஒரு நல்ல தலைவன் வேண்டும். நல்ல தலைவன் கிடைத்து தத்துவத்தை தவறாக பயன்படுத்தினால் அதுவும் தவறாக முடிந்துவிடும். இந்தியாவில் தலைவனும், தத்துவமும் ஒன்றாகிப் போகிற வரலாறு உண்டு என்றால் அது திராவிட இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு என திமுக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியுள்ளார்.
- Sep 12, 2025 19:28 IST
ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்: 75 பயணிகளும் பத்திரமாக மீட்பு
குஜராத்தில் இருந்து 75 பயணிகளுடன் கண்ட்லாவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர்களில் ஒன்று கழன்றது. டயர் கீழே விழுந்த நிலையில் விமானம் பத்திரமாக மும்பையில் தரையிறங்கியது; 75 பயணிகளும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது,
- Sep 12, 2025 18:29 IST
ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏ.ஐ அமைச்சர்: அல்பேனியாவில் நியமனம்
உலகிலேயே முதன் முறையாக அல்பேனியா நாட்டில் AI கதாபாத்திரம் ஒன்று அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது. டையல்லா (Diella) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பெண் ஏ.ஐ. அமைச்சர், ஊழல் குறித்த புகார்களை பெற்று அதனை அடியோடு ஒழிக்க சேவையாற்றுவார். சீக்கிரமே இந்த டையல்லா அல்பேனியாவின் பிரதமராக கூட பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஐ கதாபாத்திரம் ஒன்று அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது.
- Sep 12, 2025 17:08 IST
நேர்மைக்கு சான்றான மாணவர்கள்
பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தொலைத்த விலை உயர்ந்த வைரக்கல் மோதிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு. மாணவர்கள் சம்சுதீன், ஷாநவாஸ் இருவருக்கும் காலை ப்ரேயரில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
- Sep 12, 2025 16:52 IST
அமெரிக்காவின் புதிய மசோதா - இந்திய IT துறைக்கு ஆபத்து
வெளிநாடுகளில் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றம்| (HIRE) சட்டம் அமெரிக்க செனட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நிறைவேறினால் அவுட்சோர்சிங் கொடுப்பவர்களுக்கு 25% வரி விதிக்கப்படும். இது ரூ.22,039 கோடி மதிப்புள்ள இந்திய IT துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும், மேலும் தனது மொத்த வருவாயில் 50 முதல் 65% வரை இழக்கக் கூடும்.
- Sep 12, 2025 16:51 IST
நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக இந்தியா திரும்பினர் - தமிழ்நாடு அரசு அறிக்கை
நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sep 12, 2025 16:51 IST
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.
- Sep 12, 2025 16:24 IST
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சுரங்கத் திட்டத்தில் மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு தரும் முடிவை கைவிட பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். செப்.8ஆம் தேதியிட்ட குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். கருத்துக் கேட்பை மறுப்பது, உள்ளூர் மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் ஒன்றிய அரசின் இந்த குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளை எழுப்புகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுபோன்ற குறிப்பாணைகளை முன்பே ரத்து செய்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
- Sep 12, 2025 16:10 IST
ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த தகராறில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து மெரினா கடற்கரை காவல் நிலைய போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
- Sep 12, 2025 15:25 IST
ஆயுள் கைதிக்கு தண்டனை குறைப்புகோர உரிமை - சுப்ரீம் கோர்ட்
ஆயுள் சிறை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்ட கைதியும் தண்டனை குறைப்புகோர உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் 376 DA, 376DB பிரிவுப்படி ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்க தீர்ப்பு அளிக்க முடியும். 376 DA, 376DB பிரிவுகளின்படி தண்டிக்கப்பட்டவரும் தண்டனையை குறைக்க கோர முடியும். தண்டனையை குறைக்க கோருவது அரசியல் சட்டம் அளித்துள்ள சட்டபூர்வ உரிமை. 16 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்வது 376 DA. 12 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்வது 376 DB என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
- Sep 12, 2025 14:09 IST
தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி உற்பத்தியினை அதிகரிக்க தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்!
தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கவும், முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ”தமிழ்நாடு முந்திரி வாரியம்” என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
- Sep 12, 2025 14:08 IST
செல்போனுக்கு வாங்கிய கடனை கட்டத் தவறினால் செல்போன் முடக்கம்... ரிசர்வ் வங்கி திட்டம்!
கடனை திருப்பி செலுத்தாதவரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் கடனில் பெரும்பகுதி வகிக்கும் செல்போன் விற்பனையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாராக்கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரின் செல்போனை முடக்கும் நடவடிக்கை எடுக்க நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
அளிக்க உள்ளதாக தெரிகிறது. கடனை கட்டத் தவறினால், செல்போன் செயலிழக்கச் செய்யப்படும் என்று தெரிகிறது. - Sep 12, 2025 13:45 IST
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகம் யாருக்கு? ராமதாஸ் - அன்புமணி அணியினர் இடையே மோதல்
திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் தரப்பினர் பூட்டியதால், அன்புமணி தரப்பினர் - ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான செந்தில், அன்புமணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- Sep 12, 2025 13:39 IST
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரிய சீமானின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சீமான் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார்.
சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டதுடன், சீமான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப். 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- Sep 12, 2025 13:28 IST
என்.எல்.சி-க்கு நிலம் எடுப்பதை எதிர்த்து வயலில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் எறும்பூரில், என்.எல்.சி 3-வது சுரங்கத்திற்கு நிலம் எடுப்பதை கைவிடக் கோரி வயலில் இறங்கி அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
- Sep 12, 2025 13:24 IST
இந்தோனேசிய ராணுவ விமானம் திடீரென தரையிறங்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் இந்தோனேசிய ராணுவ விமானம் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானிகளின் ஓய்வுக்காக சென்னையில் தரையிறங்கியதாகவும் விமானிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 12, 2025 13:04 IST
மாணவர் சிறப்புப் பேருந்து திட்டம் வெற்றி: ஸ்டாலின் பெருமிதம்
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் மாணவர் சிறப்புப் பேருந்து திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தத் திட்டம் மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான் 1989-இல் எம்.எல்.ஏ.வாக எனது முதல் உரையாக இருந்தது. நாட்டுக்கே வழிகாட்டிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் செயல்படுத்திய இந்தத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதாகவும், இதன் செயல்பாடுகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- Sep 12, 2025 12:33 IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி - கிருஷ்ணசாமி உறுதி
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கட்சியோடு கூட்டணி வைப்போம். ஆட்சி அதிகாரத்தில் விஜய் பக்கு தந்தால், அவருடன் கூட்டணி சேர்வது பற்றி பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
- Sep 12, 2025 12:30 IST
‘மக்கள்தான் கடவுள்!’ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நடிகர் வடிவேலு நன்றி
“மக்கள்தான் கடவுள்.. உங்க வாழ்த்து எனக்கு என்னைக்குமே வேணும்” என்று கூறிய நடிகர் வடிவேலு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
- Sep 12, 2025 12:27 IST
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மோடி வாழ்த்து
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் “சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அர்ப்பணிப்புள்ள பொது ஊழியரான அவர், தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக சேவை மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அவரது துணை ஜனாதிபதி பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
- Sep 12, 2025 12:20 IST
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு வாகன வசதி: புதிய துணை நிறுவனம் தொடங்க திட்டம்
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, முதற்கட்டமாக 150 புதிய இணைப்பு வாகனங்களை வாங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கடைசி மைல் (last-mile) பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ நிலையங்களில் இருந்து பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு எளிதாகச் செல்ல இந்த வாகனங்கள் உதவும். இதன் மூலம், பயணிகள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
- Sep 12, 2025 12:14 IST
திண்டிவனத்தில் ராமதாஸ் - அன்புமணி அணியினர் இடையே மோதல்; போலீஸ் பாதுகாப்பு
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்தை பயன்படுத்துவது தொடர்பாக ராமதாஸ் - அன்புமணி அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. வன்னியர் சங்க அலுவலகத்து ராமதாஸ் அணியினர் பூட்டு போட்டனர். ராமதாஸ் - அன்புமணி அணியினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- Sep 12, 2025 11:46 IST
மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்ப கோளாறு
வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே சி.எம்.ஆர்.எல் ஆப், பேடிஎம், போன்பே மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
- Sep 12, 2025 11:16 IST
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஜெகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்
- Sep 12, 2025 11:08 IST
சென்னையில் திருடப்பட்ட அரசு பேருந்து நெல்லூரில் மீட்பு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது
- Sep 12, 2025 11:03 IST
நேபாள ஜனாதிபதி வீட்டில் முக்கிய ஆலோசனை
நேபாளத்தில் இடைக்கால தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக, ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்
- Sep 12, 2025 10:46 IST
சபரீசன் தந்தை உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி
சென்னையில் நேற்று காலமான தனது சம்பந்தியும் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
- Sep 12, 2025 10:37 IST
அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை
அமெரிக்காவின் டெக்சாஸின் கிழக்கு டல்லாஸில் புதன்கிழமை கர்நாடகாவைச் சேர்ந்த 50 வயது இந்தியர் ஒருவர் தனது பணியிடத்தில், உடைந்த சலவை இயந்திரம் தொடர்பான தகராறில் சக ஊழியர் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
- Sep 12, 2025 10:20 IST
இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
- Sep 12, 2025 10:05 IST
கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு
கோயம்பேடு பணிமனையில் திருப்பதி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து காணாமல்போனதாக மேலாளர் ராமசிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை நடத்திய விசாரணையில், திருடப்பட்ட பேருந்து ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை திருடி சென்ற காது கேளாத, வாய் பேசமுடியாத ஞானராஜன் சவுரவு (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
- Sep 12, 2025 10:03 IST
காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் இம் மாதத்திற்குள் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
-இந்திய வானிலை ஆய்வு மையம்
- Sep 12, 2025 09:56 IST
நிர்மலா சீதாராமன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
நிர்மலா சீதாராமன், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்திய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
- Sep 12, 2025 09:55 IST
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து
துணை குடியரசு தலைவராக பதவியேற்க உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
- Sep 12, 2025 09:46 IST
போத்தீஸ் கடைகளில் வருமான வரி சோதனை
கோவை, நெல்லை மற்றும் மதுரையில் உள்ள போத்தீஸ் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது; சென்னை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளர்களின் இரு மகன்கள் வீடுகளிலும், கோவையில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் பகுதி மற்றும் மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் துணிக்கடைகளில் சோதனை நடந்து வருகிறது.
- Sep 12, 2025 09:25 IST
சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை- உரிமையாளர் வீட்டில் ஐ.டி.ரெய்டு
சென்னை ஜி.என்.செட்டி சாலையிலுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள போத்தீஸ் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
- Sep 12, 2025 09:08 IST
ஆசிய கோப்பை - பாகிஸ்தான் VS ஓமன்
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாயில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- Sep 12, 2025 08:46 IST
சிக்னல் போஸ்ட் மீது மோதி லாரி விபத்து
பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்து சிக்னல் போஸ்ட் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. 2 கி.மீ. தூரத்திற்கு கடும் நெரிசல் நீடித்த நிலையில் பாதிப்பு சரி செய்யப்ப்பட்டு தற்போது வாகன போக்குவரத்து சீரானது.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் சென்டர் மீடியனில் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Sep 12, 2025 08:46 IST
புதிய ஆசிரியர்களுக்கு செப்.20ம் தேதி முதல்வர் வாழ்த்துரை
புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்துரை வழங்கும் விழா சென்னையில் செப்.20ம் தேதி நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2,511 பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டனர்.
- Sep 12, 2025 08:45 IST
செப்.15 முதல் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு 10 லட்சமாக உயர்வு
செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த முடியும்.
தனிநபர் யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு, ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக மாற்றமின்றி தொடர்கிறது.
- Sep 12, 2025 08:45 IST
சீமானின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- Sep 12, 2025 08:45 IST
போத்தீஸ் உரிமையாளரின் மகன்களின் வீடுகளில் ஐடி ரெய்டு
போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.
- Sep 12, 2025 08:39 IST
உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் - தஞ்சாவூர் 'உழவன் எக்ஸ்பிரஸ்' மற்றும் எழும்பூர் - கொல்லம் 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' ரயில்கள் செப். 17 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்
- தெற்கு ரயில்வே அறிவிப்பு.
- Sep 12, 2025 08:05 IST
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: இன்று விசாரணை
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமின் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- Sep 12, 2025 07:59 IST
மணிப்பூர் செல்கிறார் மோடி
2023-ல் இனமோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக செல்கிறார் பிரதமர் மோடி. ரூ.8500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- Sep 12, 2025 07:59 IST
விஜய் பரப்புரை - இடமாற்றம்
பெரம்பலூர்: காவல் துறையினர் கூறியதை அடுத்து, செப். 13ம் தேதி வானொலி திடல் விஜய் பரப்புரை மேற்கொள்ள தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். முன்னதாக ஆதார் சாலையிலுள்ள காமராஜர் வளைவு பகுதியில் விஜயின் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- Sep 12, 2025 07:31 IST
எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார்
ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் விசாரணை நடத்த கோரி மனுவில் ஒரு வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.