Tamil News Highlights: மணிப்பூர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி- 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆப்சென்ட்

மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

By: Aug 10, 2020, 10:58:25 PM

Tamil Nadu News Today : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகத்தில் 100% மாணவர்கள் இதில் தேர்ச்சியடைந்துள்ளனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு, காவல் ஆய்வாளர் பால் துரை கொரோனாவால் மரணமடைந்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தமிழக மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. அதே வேளையில் நான்கரை மாதம் கழித்து, உடற்பயிற்சி கூடங்களும் இன்று திறக்கப்படுகின்றன.

மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. மழையால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகளுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் தர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:19 (IST)10 Aug 2020
மணிப்பூர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி- 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆப்சென்ட்

மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்  தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட் ஆனதையடுத்து, முதல்வர் பைரோன்சிங் குரல் மூலம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற்றார். 

21:12 (IST)10 Aug 2020
கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.93 அடியாக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்வு.அணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கன அடி நீர் வரும் நிலையில், 10,00 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது

21:03 (IST)10 Aug 2020
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

நவீனப்படுத்திய மற்றும் அந்தஸ்து உயர்த்தப்பட்ட மையங்களையும், பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை (Ordnance Factory Board – OFB) மூலம் உருவாக்கிய புதிய கட்டமைப்பு வசதியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று இணையவழி மூலம் தொடங்கி வைத்தார்

21:00 (IST)10 Aug 2020
3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு 5,041 ஆக உயர்வு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது

18:57 (IST)10 Aug 2020
செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்தா? இந்தியன் ரயில்வே விளக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக வந்த செய்தியை இந்திய ரயில்வே நிராகரித்தது.      

18:34 (IST)10 Aug 2020
வெள்ள நிலைமை குறித்து ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு கூட்டம்

பிரதமர்  நரேந்திர மோடி இன்று அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநில முதலமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நாட்டில், தென்மேற்குப் பருவமழை தீவிரத்துக்கான முன்னேற்பாடுகள், தற்போதைய வெள்ள நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளம் குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட நிரந்தர முறையை ஏற்படுத்துவது பற்றி, அனைத்து மத்திய, மாநில முகமைகள் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை முறைக்கு புதுமையான தொழில்நுட்பங்களை விரிவான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

18:29 (IST)10 Aug 2020
நாமக்கல் மாவட்டம்: விருப்பத்திற்கு மாறாக பணிபுரிந்து வந்த 35 பேர் மீட்கப்பட்டனர்

நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் விருப்பத்திற்கு மாறாக பணிபுரிந்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 32 பெண்கள் , 3 சிறுவர் உள்ளிட்ட 35 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

18:27 (IST)10 Aug 2020
கல்வராயன் மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி வழங்கப்படும் என்றும், கல்வராயன் மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.  

17:32 (IST)10 Aug 2020
மொழி ரீதியான அவமதிப்பு, நமது தன்மானத்திற்கு விடப்படும் சவால்- எம்.பி ஜோதிமணி

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி  தனது ட்வீட் செய்தியில்,"சென்னை விமானநிலையத்தில் கனிமாெழி எம்பி க்கு நிகழ்ந்த மாெழிரீதியான அவமதிப்பு சாதாரணமானதல்ல. தமிழ்மட்டுமே அறிந்த சாதாரண குடிமக்கள் என்னபாடு படவேண்டியிருக்கும்?தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடமில்லாமல்,ஹிந்தி திணிக்கப்படுமென்றால் அது நிச்சயம் நமது தன்மானத்திற்கு விடப்படும் சவால்தான்" என்று தெரிவித்தார்.  

16:55 (IST)10 Aug 2020
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்ட ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60 சதவீத குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

16:01 (IST)10 Aug 2020
புதிய மருத்துவக் கல்லூரி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

15:29 (IST)10 Aug 2020
மதுரை அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சரவணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15:05 (IST)10 Aug 2020
தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் மரணம்

புதுப்பேட்டை, அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி. சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

14:40 (IST)10 Aug 2020
சமூக நீதி தட்டிப்பறிப்பு

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

13:57 (IST)10 Aug 2020
கோவை, தேனி உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13:30 (IST)10 Aug 2020
மாஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவர் டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா சோதனை செய்துகொள்ளவும், சுயதனிமைப்படுத்திக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

13:12 (IST)10 Aug 2020
மனித உரிமை ஆணையம் உத்தரவு

மத்திய அரசு உத்தரவை மீறி இ பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என, தமிழக தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

12:50 (IST)10 Aug 2020
ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கொச்சி என்ஐஏ நீதிமன்றம்

12:26 (IST)10 Aug 2020
தீபா, தீபக் வழக்கு விசாரணை

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணை. 

12:24 (IST)10 Aug 2020
மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் - தயாநிதி மாறன்

விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம். அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

11:57 (IST)10 Aug 2020
பிரதமருடன் முதல்வர் ஆலோசனை

பிரதமர் மோடியுடன் நாளை காலை 10:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

11:44 (IST)10 Aug 2020
கண்ணாடி இழை கேபிள் திட்டம்

சென்னை - அந்தமான் இடையே கடலுக்குள் ரூ.1,224 கோடியில் செயல்படுத்தப்பட்ட கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை, காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

11:22 (IST)10 Aug 2020
கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு

கோவை, சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோவையில் கடந்த 8 மாதங்களில் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன. 

10:57 (IST)10 Aug 2020
1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

நவி மும்பை துறைமுகத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 191 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் சிக்கின. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

10:52 (IST)10 Aug 2020
ரஷ்யாவில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Title:Tamil news today live updates sslc result 2020 covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X