Tamil Nadu News Updates: தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வு பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கொரோனா அப்டேட்
உலகளவில் இதுவரை 38.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பிரான்சில் 4.16 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக அமெரிக்கா – 2.54 லட்சம், ஜெர்மனி – 1.83 லட்சம், பிரேசில் – 1.71 லட்சம், இந்தியா – 1.58 லட்சம், ரஷ்யா – 1.25 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று முதல் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் மோடி பதில் உரையாற்றுகிறார்
பெட்ரோல், டீசல் அப்டேட்
கடந்த 3 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. பொறுப்பாக விளையாடிய கேப்டன் யாஷ் துல் 110 ரன்களும், ரஷீத் 94 ரன்களும், எடுத்தனர். தொடர்ந்து 291 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.
டெல்லியில் 10 அடி தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு என ஒரு உணவகம் அறிவித்துள்ளது. இந்த தோசையை சுட பிரத்யேகமாக 10 அடி நீள அடுப்பை வாங்கியுள்ளார் உரிமையாளர் இதுவரை சுமார் 25 பேர் போட்டியில் பங்கேற்ற நிலையில் யாரும் வெற்றி பெறவில்லை
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது. இந்த 5 மாதமாக ஆளுநர் புதிய மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று திமுக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 24,576 பேர் டிஸ்சார்ஜ் – 1.77 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் சென்னையில் மேலும் 2,054 பேருக்கு கொரோனா தொற்று – 10 பேர் மரணம். கோவையில் மேலும் 1,696 பேருக்கு கொரோனா தொற்று – 3 பேர் மரணம். செங்கல்பட்டில் மேலும் 1,198 பேருக்கு கொரோனா தொற்று – 4 பேர் மரணம்
பணமோசடி தடுப்பு சட்டம் கீழ் பி.எம்.எல்.ஏ., 2002 இன் கீழ் தமிழ்நாடு மீன்பிடி-மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 6.5 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூப்பர் ஹீரோவாக இடம்பெறும் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை 4வது வார்டு – ஜெயராமன்
41 வது வார்டு – விமலா
123 வது வார்டு – சரஸ்வதி
148 வது வார்டு – வெள்ளைசாமி
98 வார்டு – இன்னும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் மேலிட தேர்தல் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா: “திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடிவடைந்தது. வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் வெளியாகும். எங்களது எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் நாங்கள் கூட்டணி அடிப்படையிலான கொள்கை முடிவுகளை பின்பற்றி பயணிக்கிறோம். பாஜக தனித்து நின்றாலும் கூட்டணியாக நின்றாலும் வெற்றி பெற வாய்ப்பில்லை” என்று கூறினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில், திமுக கேட்ட இடங்களை தரவில்லை என்பதால் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் சீமைக் கருவை மரங்களை அகற்ற 2 வாரத்தில் திட்டம் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நூல் விலை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எனக்கூறி 7 சிலைகளை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் எடப்பாடி அருகே மலை அடிவாரத்தில் கைப்பற்றப்பட்ட 7 சிலைகளை 5 கோடிக்கு விற்க முயன்ற காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகாரின் அடிப்படையில், விழுப்புரம் கனிமவள மண்டல இணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்
துணை ராணுவப் படையில் கிளீனர், டேபிள் பாய் உள்ளிட்ட பணிகளுக்கு நடைபெறும் தேர்வுக்கூட ஹிந்தியில் தான் நடைபெறுகிறது. எனவே 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும் என திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் விவகாரங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா கூறியுள்ளார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்காக பணியாற்றுவதை மறந்துவிட்டது. ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. 5 மாநிலத் தேர்தலை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா கடுமையாக பேசினார்..
கால்நடை மருந்துவம் மற்றும் பராமரிப்பு இளநிலை தொழில்நுட்ப பட்டயப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டம் 370 ரத்து செய்த பிறகு, நடந்த 541 பயங்கரவாத தாக்குதலில்’ 98 பேர் உயிரிழந்ததாக’ நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில், திமுக சார்பில் 49 வயது திருநங்கை கங்கா போட்டியிடுகிறார்.
கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மனுவை திரும்பப் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
வன்னியர் இடஒதுக்கீடு: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரி' பாமக, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ரூ. 1 லட்சம் அபராதத்துடன், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இனிவரும் காவலர் பணிக்கான தேர்வில் தமிழ் தாள், பொது அறிவு தாள் என 2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் முக்கிய தேர்வு தாள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலையில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் தங்களாஇ தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 7 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகளின் பிள்ளைகளே விளையாட்டில் ஈடுபட்டு தேசத்தை பெருமைப்படுத்துகின்றனர் என்று மோடி பேச்சு.
15 முதல் 18 வயதுடைய சிறார்கள் 28 நாட்கள் இடைவெளியில் 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சிறார்கள் விரைவில் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தாக்கம் குறைய துவங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த அலையின் போது 4% பேருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவை என்று சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியா மிளிர வேண்டும் என்று மோடி பேச்சு. பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் ஜிடிபி தற்போது ₨2.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
டோங்காவில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் மௌன அஞ்சலி செய்யப்பட்டது. டோங்கா நாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவிப்பு
இந்தியாவில் சைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விநியோகம் துவங்கியுள்ளது என்று சைடஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் ரூ. 265க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 742 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவையில் தற்போது 6,852 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்
கொரோனா காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிராச்சாரத்திற்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டையுடன் மத்திய, மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,81,109 பேர் குணமடைந்துள்ளனர். 1,733 பேர் உயிரிழந்துள்ளனர். 16.21 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்
தேர்வர்கள் நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ91 குறைந்து ரூ2,040க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை
நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக உரையாற்றுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார்