இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. அதில், பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் ட்வீட் செய்தனர். சிறிது நேரத்தில் கணக்கு மீட்கப்பட்டு அந்த பதிவுகள் டெலிட் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 38 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
கொரோனா அப்டேட்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.99 கோடியைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 24.26 கோடியைத் தாண்டியது.வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “IRCTC ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகளோடு ‘திவ்யாங்’ என்று சமஸ்கிருதத்தில் இருக்கும். 8 கோடி பேர் பேசும் மொழிக்கு இடமில்லை. 14,000 பேர் பேசும் மொழிக்கு இடமுண்டு. அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? #irctc ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகளோடு“திவ்யாங்” என்று ஒரு தெரிவு இருக்கும். 8கோடி பேர் பேசும் மொழிக்கு இடமில்லை. 14 000 பேர் பேசும் மொழிக்கு இடமுண்டு. pic.twitter.com/Di18Qw8sPz
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 12, 2021
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகர் மற்றும் புறநக பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, சாந்தோம், வடபழனி, ஆழ்வார்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கனமழை பெய்தது. ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து கேரளாவிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பையில் சண்டிகர் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதமடித்த வெங்கடேஷ் ஐயர் அதனை நடிகர் ரஜினிகாந்த்திற்கு சமர்பிக்கும் வகையில் அவரது ஸ்டைலில் கொண்டாடிய வீடியொ வைரலாகி வருகிறது.
அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்களுடைய சொத்து விவரங்களை ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவை வரவேற்கிறேன். இதுபோன்ற செயல் வெளிப்படைத் தன்மையையும் ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் உருவாக்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு 37 ஆக உயர்ந்துள்ளது
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ பிரார்த்திக்கிறேன் என சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்
நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ். என்கிற ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தால் ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்
கலைப்பேரொளி' ரஜினிகாந்துக்கு எமது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என பதிவிட்டு ரஜினிகாந்துக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷமாகவும் வாழ பிரார்த்திக்கிறேன் என்றும் அந்த பதிவில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அவரது மகள் சுனிதாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் தாமாக முன்வந்து அனுமதி அளித்தால் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள் . வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றினால், இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலா பயணிகளே சுற்றிப்பார்க்க ஆர்வம் காட்டுவர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை, ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 40 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குன்னுர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரி சாய் தேஜா உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வழி நெடுகிலும் கையில் தேசிய கொடியுடன் மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் இன்று மாலை உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கோவையில் பள்ளி மாணவன் இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததால் ஆசிரியர் தாக்கிய விவகாரத்தில், மாணவனை தாக்கிய பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது:
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால்தான் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது கோயில் நிர்வாகம். மேலும், வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளன.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் பரவி வரும் நிலையில் ஆந்திராவில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர் அயர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்தவர் என ஆந்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந்நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 34ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3 உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முகமாக வலம் வரும் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்த, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்:
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
அன்புசகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன்.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நடிகர் ரஜினி நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ எனது பிரார்த்தனைகள். தனது திறமையான நடிப்பின் மூலம், மக்களை ஈர்த்து ஊக்கமளிக்க ரஜினிக்கு வாழ்த்து என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,464 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிப்பால் 306 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
14ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 7 கோடியே 74 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.