Tamil Nadu News Updates: மும்பையில் ஒருவருக்கு XE வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறியதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான மாதிரியை ஆய்வு செய்ததில் அது XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை என விளக்கமளித்துள்ளது.
அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது – நடிகர் விஜய்
அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனை செய்யக்கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது என நடிகர் விஜய் உத்தரவின்பேரில் விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்கின்றனர். புதிய அமைச்சர்கள் வரும் 11 ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். 2019இல் பதவி ஏற்றபோதே இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் என ஜேகன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல் ஒரு லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று மாற்றமில்லை.
ஐபிஎல் அப்டேட்
ஐபிஎல் கிரிக்கெட்டில் கம்மின்ஸ் தொடர் சிக்சரில், வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபடபித்துள்ளது. இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் உத்தரவு சட்ட விரோதமானது எனறும் கூறியுள்ளது.
மேலும் நாளை மறுநாள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி அதிபரை பிரதமர் வற்புறுத்த முடியாது பாகிஸ்தான் நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட தடையில்லை என கூறியுள்ளது.
ஒருநாள் முன்னதாக 'பீஸ்ட்' வெளியாவது சினிமாவுக்கு ஆரோக்கியமான நிகழ்வு ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அதற்குதான் முன்னுரிமை இருக்கும்; படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக வரவேற்பர் என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் தொழில்நுட்ப கலைஞர்கள் மிக கடினமான உழைப்பாளிகள் மற்றும் பணிவானவர்கள் தமிழ்நாட்டில் 3 வருடங்களுக்கு முன்பு நண்பர் விஷால் துணையுடன் KGF முதல் பாகம் வெளியிட்டேன் தமிழ் ரசிகர்கள் நிறைய ஆதரவு அளிக்கின்றனர் என நடிகர் யஷ் கூறியுள்ளார்.
ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது ஏப்.14ல் வெளியாகவுள்ள 'KGF CHAPTER 2’ திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது என திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்
தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்ட Hong Fu நிறுவனம் தமிழகத்தில் ₨1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; குறிப்பாக பெண்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
“சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்படும்!” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய ஏழு மாதங்கள் தேவை என பாக். தேர்தல் ஆணையம் கூறியுள்ளர்.
டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : காவல் நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வெளியில் வந்தனர் என்று முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, ஏப்ரல் 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதால் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் அனைவரும் ஜெகன் மோகன் ரெட்டியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தினார்.
அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழு துணைத் தலைவராக திமுக எம்.பி கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடி ஜாமின் தொகையை கட்டினால், சிறையில் இருந்து வெளிவரலாம் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை, பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் இன்று சந்தித்தார். சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதியளித்தார்.
நிலக்கரி பிரச்சினையில் மத்திய அரசு மீது பழி போடக் கூடாது. மின் தடை ஏற்பட்டால் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
149 சமத்துவபுரங்கள் ரூ 190 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முதல்வரின் துபாய் பயணம் வழிவகுக்கும். தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பேரவையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
தமிழக ஊரகப் பகுதிகளில் 41.76% வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய வீடுகளுக்கு 2024 மார்ச் இறுதிக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதாக குற்றச்சாட்டி, விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.
10.5% வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் துறை கைது செய்தது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உருமாற்றமடைந்த XE வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியை காக்கும் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் 3வது வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும் என்று பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகரில் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குமரன் நகர் தலைமைக்காவலர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வராத அளவிற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும், புதிதாக கட்டிடம் கட்டுவது குறித்து சிந்தித்துதான் செயல்படுவோம் எனவும் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இங்கிலாந்தில் வெளிநாட்டு பயணங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில் அங்கு கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் என்றும் புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.310 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இளங்களை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 20 நிமிடம் அதிகரித்து, 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என அறிவிப்பு. 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என விளக்கம்
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ136 அதிகரித்து ரூ38,872க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ4,859க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் XE வகை கொரோனா இதுவரை இல்லை. சர்வதேச விமான நிலையங்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களையே தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்வறை கண்காணிப்பாளர், அன்றைய பாடத்துக்கான ஆசிரியராக இருக்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. தாய்மொழி மருத்துவ கல்வி, இளைஞர்களுக்கு புது உத்வேகம் அளிக்கிறது. அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி திடீர் பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட வேலைக்காக டெல்லி சென்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்.