Tamil Nadu News Updates: கொரோனா பரவல் அதிகரிக்கும் காரணத்தால், தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு நேர ஊரடங்கில் தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி. விமானம், ரயில், பேருந்து நிலையங்கள் செல்ல வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் ரூ.4.83 லட்சம் அபராதம்
சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் ரூ.4.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்படுள்ளது. டிச. 31ம் தேதி முதல் தற்போது வரை ரூ.12.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் நேரலை செய்யப்படுகிறது. அதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு
விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. தீக்காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனியசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பெட்ரோல்,டீசல் அப்டேட்
63ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னையில் 18 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறுகிறது. அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தல் மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 312 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறி இருப்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மேலும் 79 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் செலவு தொகை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் செலவு தொகை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செலவு உச்சவரம்பு தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும் என மத்திய சட்டத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் எருது விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு விள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்ல பெருங்களத்தூரில் பஸ் நிலையத்தில் மாணவர்கள் குவிந்தனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 13 பேர் உயிரிழந்தனர்.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வை
உடனடியாக நடத்தக்கோரி குறித்த வழக்கில், தேர்வுகள் துறை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்ரு 6,983 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 721 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 3759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சென்னையில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கொரோனா பாதிப்புக்கு 11,494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தற்போது 25,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஜனவரி 31ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படும் நாட்களில் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 13ம் தேதி வெளியாக இருந்த அஜித்குமாரின் வலிமை திரைப்பட ரிலீஸ் கொரொனா தொற்று பரவல் காரனமாக ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக பிரதமர் மோடி பங்கேற் இருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகினறனர். அந்த வகையில் தற்போது மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியாந்தராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்திக்கொண்ட அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ண வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான கணேஷுக்கு மதுரைக்கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 20க்கு பிறகுதான் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும், தொற்று அதிகரித்தால் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை ரேபிட் – ஆண்டிஜென் பரிசோதனைக்கு பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் வல்லவன் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் உரை காற்று போன பலூன் எந்த விதமான மக்கள் நலத்திட்டங்களும் இல்லை. வாசனை இல்லாத காகித பூ போல ஆளுநர் உரை அமைந்துள்ளது எனறு – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மாநிலங்களுக்கிடையிலான ரூ.12,031 கோடி மத்தியில், பசுமை எரிசக்தி, 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டப்பேரவையில் பேசிய போது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தார்.
தமிழக கோயில்களில் இருந்த சாமி சிலைகளை வெளிநாடுகளில் காட்சி பொருளாக வைத்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் திரையரங்கு, உணவகங்கள், பூங்கா, பார்கள், மால்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வியாழக்கிழமை ஒரே நாளில் 90,928 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 325 இறப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி நேர்மறை விகிதம் 6.43% ஆக உள்ளது. நாட்டில் செயலில் உள்ள கொரொனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,85,401 ஐ எட்டியது, அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டனர்.
ஜனவரி 8,9 தேதிகளில் நடக்க இருந்த கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய தேர்வுகள் எந்த மாற்றமுமில்லாமல் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அம்மா உணவகத்தை மூடுவது குறித்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் எழுப்பிய விவாதத்துக்கு, பதிலளித்த துரைமுருகன் அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்.
அனைத்து இடங்களிலும் அரசு மருத்துவமனைகள் இருக்கும்போது, அம்மா கிளினிக்குகள் தேவையில்லை என்பதால்தான் மூடினோம் என பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்..
பிரபல நடிகரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடி செய்த வழக்கில், முன்னாள் அதிமுக ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் இருந்து அமிர்தசரஸ் வந்த, ஏர் இந்தியா விமானத்தில் 179 பேர் பயணித்த நிலையில், 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, துரைப்பாக்கம் தனியார் கல்லூரியில், இன்று திடீரென மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னை டி.நகரில் மழை நீர் தேங்கியது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை நடத்த, குழு அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வருவாய் இழப்பை ஈடுசெய்யும் திட்டத்தின் கீழ், மொத்தம் 17 மாநிலங்களுக்கு ரூ. 9871 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்துக்கு தமிழகத்துக்கு ரூ.183. 67 கோடி விடுத்துள்ளது.
பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக வெங்கையா நாயுடு கவலை தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் நிறுத்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதம். 240 ரன்கள் இலக்கை துரத்தும் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 122 ரன்கள் தேவை.
டெல்லி ராஷ்டிரபதி மாளிகையில் குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக குடியரசு தலைவரிடம் எடுத்துரைக்கிறார் பிரதமர் மோடி.
'புல்லி பாய்' எனும் செயலி மூலம் முஸ்லீம் பெண்களை ஏலமிட்ட விவகாரத்தில் 21 வயதான நீரஜ் பிஷ்னோயை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது டெல்லி காவல்துறை.
மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தால், உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவுடன் அதிமுகவும் இணைந்து போராட தயார் என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவளிக்கும் என்றும் அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது. சிறுமியின் சம்மதத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கருவை கலைக்க அனுமதி என நீதிபதி தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கான வரும் ஞாயிறன்று, கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என்று வியாபாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார். மதுக்கடைகளால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் அதனையும் மூட வேண்டும் என்று பேரவையில் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
தாம்பரம் தனியார் கல்லூரி விடுதி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விடுதியில் இதுவரை 22 பேருக்கு தொறு ஏற்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது
மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் முதல் அமைச்சர் முக ஸ்டாலின், எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.