scorecardresearch
Live

Tamil News: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 174 ஆக உயர்வு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 20th december 2021 தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Updates: மகாராஷ்டிராவில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 45 நாளுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா

கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும், 18-ம் தேதி 90,418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் 82,886 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். ஐந்து நாளில் 4.30 லட்சம் பேருக்கு பாதிப்பு அடைந்துள்ளது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்றார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த். இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் கியானிடம் போராடித் தோல்வி அடைந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:11 (IST) 20 Dec 2021
5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 மாதங்களில் செய்துள்ளோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 மாதங்களில் செய்துள்ளோம். 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்” என்று கூறினார்.

20:45 (IST) 20 Dec 2021
மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை சமமாக நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து அவர்களை மற்ற விளையாட்டு வீரர்களுக்கு சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

20:12 (IST) 20 Dec 2021
கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில், “No.1 CM OF TAMILNADU” என்ற நினைவுப் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள். கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கத்தை சேர்ந்தவரை எம்.எல்.ஏ ஆக்கி இருக்கிறோம். இனிகோ பிரபாகர் இப்போது எம்.எல்.ஏ நாளை எப்படி இருப்பார் என தெரியாது. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

19:35 (IST) 20 Dec 2021
முன்னாள் அமைச்சர் தங்கமணி இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பு வெளியிட்டுள்ளது.

சோதனையில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹர்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

19:09 (IST) 20 Dec 2021
யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த துயரம்; கணவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழைந்தை உயிரிழந்தது. இதையடுத்து கணவன் லோகநாதன் கைது செய்யப்பட்டார். இயற்கை ஆர்வலரான லோகநாதன் மரச்செக்கு எண்ணெய் நிறுவனம் நடத்தி வருகிறார்.

18:42 (IST) 20 Dec 2021
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள்

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். தற்போது மேலும் 2 தனிப்படைகள் அமைத்து திருப்பதி மற்றும் புதுக்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18:39 (IST) 20 Dec 2021
சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாம சுந்தரி சமேதமாக சித்சபைக்கு செல்லும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனது. இந்த விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குறிக்கப்பட்டிருந்த நிலையில்,காலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மகாபிஷேகம் நடந்தது தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது

18:36 (IST) 20 Dec 2021
யூடியூபர் மாரிதாஸுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

போலி இமெயில் மூலம் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட வழக்கு யூடியூபர் மாரிதாஸுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:57 (IST) 20 Dec 2021
நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

17:55 (IST) 20 Dec 2021
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16768 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13-ந் தேதி வரை இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் இருந்து 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

17:53 (IST) 20 Dec 2021
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ நிபுணர்கள் குழு அமைக்க உத்தரவு

ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ நிபுணர்கள் கொண்டு குழுவை டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

17:17 (IST) 20 Dec 2021
இந்தியாவில் இதுவரை 170 பேருக்கு ‘ஒமிக்ரான்’ தொற்று

தென்ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றின் ஒரு மாறிய தொற்றான ஒமிக்ரான் தொற்று இந்தியா உட்பட 89 நாடுகளில் பரவியுள்ள நிலையில். இந்தியாவில் இதுவரை 170 பேருக்கு 'ஒமிக்ரான்' வகை மாறுபாடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

17:15 (IST) 20 Dec 2021
பேருந்தை சேஸ் செய்தபோது விபத்து : மருத்துவர் பலி

மதுரை மாவட்டம் கப்பலூர் சுற்றுச் சாலையில் காரை உரசிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை விரட்டிப்பிடிக்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

16:49 (IST) 20 Dec 2021
மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லியில், மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார்.

16:35 (IST) 20 Dec 2021
ஆஷஸ் 2வது டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டில் இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2வது இன்னிங்சில் 467 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது.

16:25 (IST) 20 Dec 2021
சென்னை பள்ளி மாணவி தற்கொலை – கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை

சென்னை, மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

16:12 (IST) 20 Dec 2021
குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15:59 (IST) 20 Dec 2021
இந்தியாவில் 88% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

இந்தியாவில் 88% பேருக்கு முதல் தவணையும், 58% பேருக்கு 2வது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 161 பேருக்கு 'ஒமிக்ரான்' வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்

15:57 (IST) 20 Dec 2021
பாலமேட்டில் ஜனவரி 15ல் ஜல்லிக்கட்டு – தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஜல்லிகட்டு கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

15:36 (IST) 20 Dec 2021
வேதா இல்ல வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? – தமிழக அரசு விளக்கம்

வேதா நிலைய வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்ற நீதிபதிகளின் உத்தரவை ஏற்ற மேல்முறையீடு செய்யவில்லை. தனி நீதிபதி ஷேஷாயி உத்தரவை ஏற்று, வேதா இல்ல சாவிகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

15:32 (IST) 20 Dec 2021
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் ‘தேர்தல் சட்டத் திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் 'தேர்தல் சட்டத் திருத்த மசோதா' எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளலாம் என மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்

15:11 (IST) 20 Dec 2021
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்

14:59 (IST) 20 Dec 2021
நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்!

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பான பனாமா பேப்பர் கசிந்த விவகாரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

14:55 (IST) 20 Dec 2021
திமுக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கிறது: ஈபிஎஸ்!

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதையும், அவர்களின் உறவினர்களை துன்புறுத்துவதம் கண்டிக்கத்தக்கது. திமுக அரசு, புனையப்பட்ட வழக்குகளின் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

14:37 (IST) 20 Dec 2021
பெட்ரோல், டீசல் வரியை குறைத்ததால் அரசுக்கு கூடுதல் செலவு: நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் துணை மானிய கோரிக்கை’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து இருப்பதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கி கடனை திரும்பிக் கட்டாமல் நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோரின் ரூ.13,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்கப்பட்டு, நிதி பொதுத்துறை வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்று பேசினார்!

14:19 (IST) 20 Dec 2021
பொள்ளாட்சி அருகே 6 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

பொள்ளாட்சி அருகே உள்ள சேரிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இதுவரை 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

14:08 (IST) 20 Dec 2021
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

14:00 (IST) 20 Dec 2021
டெல்லியில் வேகமெடுக்கும் ஓமிக்ரான் பரவல்!

டெல்லியில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து இனி டெல்லியில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அனைவரது மாதிரிகளும் ஓமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

13:46 (IST) 20 Dec 2021
ஒமிக்ரான் பரவல் எதிரொலி.. எதற்கும் தயாராக இருங்கள்: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

இந்தியாவில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், எதற்கும் தயாராக இருக்கவும், திடீர் தாக்குதலுக்கு உள்ளாவதை விட தயாராக இருப்பது நல்லது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13:35 (IST) 20 Dec 2021
சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

13:31 (IST) 20 Dec 2021
மு.க.ஸ்டாலின் சக்திவாய்ந்த முதல்வராக இருக்கிறார்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்!

சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கெளரவித்தார். விழாவில் பேசிய அவர், இந்தியாவிலே சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னனியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் சக்திவாய்ந்த முதல்வராக இருக்கிறார் என்று கூறினார்.

13:20 (IST) 20 Dec 2021
திருவாரூரில் டிசம்பர் 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு!

திருவாரூரில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வரும் டிசம்பர் 26ஆம் தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13:11 (IST) 20 Dec 2021
வேலூர் நகைக் கடையில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்பு!

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. நகைகள் உருக்கப்பட்டு ஒடுக்கத்தூர் அருகே சுடுகாட்டில் மறைக்கப்பட்டிருந்ததாகவும், அவை தற்போது மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையின் தொடர்புடைய ஒருவன் கைதாகிய நிலையில், மேலும் 9 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12:53 (IST) 20 Dec 2021
நெல்லை பள்ளி விபத்து – ஆய்வறிக்கை தாக்கல்

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோட்டாச்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

12:52 (IST) 20 Dec 2021
கள்ள ஓட்டுகளை தடுக்க முயற்சி

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ள ஓட்டுகளை தடுக்க முயற்சியாகவும் நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.

12:49 (IST) 20 Dec 2021
திருந்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டும் சொன்ன குட்டிக்கதை

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில், “தவறு செய்தவர்கள் திருந்தினால், அதை தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஓ.பி.எஸ் கூறினார்.

11:34 (IST) 20 Dec 2021
தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் – ஜெயக்குமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி அதிமுக ஜெயக்குமார் தொடுத்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:33 (IST) 20 Dec 2021
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் என தகவல் வெளியாகியுள்ளது.

11:32 (IST) 20 Dec 2021
மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

11:29 (IST) 20 Dec 2021
மாணவி தற்கொலை வழக்கில் மாணவர் கைது

சென்னை, மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவியிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

11:27 (IST) 20 Dec 2021
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணை தீவிரம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியது தனிப்படை. மதுரையில் ஆவின் முன்னாள் மேலாளரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியது. மேலும், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது.

10:41 (IST) 20 Dec 2021
ஆபரணத் தங்கத்தின் விலை விவரம்

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,728-க்கு விற்பனையாகிறது.

10:27 (IST) 20 Dec 2021
நமக்கு நாமே திட்டத்திற்கு 100கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய். 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டது. ஊரகப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

09:58 (IST) 20 Dec 2021
சிலி நாட்டின் இளம் குடியரசுத் தலைவர்

சிலி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் போரிக் 55.73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 35 வயதான அவர், நாட்டின் இளம் குடியரசுத் தலைவர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

09:39 (IST) 20 Dec 2021
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6563 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருந்து 8077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 82,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்

09:31 (IST) 20 Dec 2021
யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் – குழந்தை பலி

ராணிப்பேட்டை அரக்கோணத்தில் நெடும்புலி கிராமத்தை சேர்ந்த லோகநாதன், தனது மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தில், குழந்தை உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

09:20 (IST) 20 Dec 2021
கூடங்குளத்தில் முற்றுகைப் போராட்டம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

09:18 (IST) 20 Dec 2021
கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான்

கர்நாடகாவில் வெளிநாட்டு பயணம் எதுவும் இல்லாத 5 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 19ஆக உயர்ந்துள்ளது.

Web Title: Tamil news today omicron india corona virus england live updates