Tamil News: நாடு தழுவிய அளவில் இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

உலகமெங்கும் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த வைரசால் மருத்துவமனை சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும். மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது; இதுவரை கண்டறியவேபடாத அதிகமான நாடுகளில் கூட ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு – 69 இடங்களில் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் கடந்த 40 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் ரூபாய் 101.40-க்கும், டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
9:59 (IST) 15 Dec 2021
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது உடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

டாக்காவில் வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது உடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசினர்.

9:55 (IST) 15 Dec 2021
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணிக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு s என்ற மரபணு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9:36 (IST) 15 Dec 2021
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல், கட்சிகளின் அடிப்படையிலேயே நடைபெறும். கட்சி அடிப்படையில் தான் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்

8:21 (IST) 15 Dec 2021
மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 32 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 32 ஆக உயர்ந்துள்ளது

8:03 (IST) 15 Dec 2021
கூடங்குளம் 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023-ல் நிறைவடையும் – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

கூடங்குளம் அணுமின் நிலைய 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023-ல் நிறைவடையும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

7:54 (IST) 15 Dec 2021
பொட்டாஷ் உரத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

பொட்டாஷ் உரத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொட்டாஷ் உரம் மூட்டை ரூ.1040 க்கு விற்கப்படுகிறதா என கவனித்து விவசாயிகள் வாங்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

7:29 (IST) 15 Dec 2021
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி

புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது

7:11 (IST) 15 Dec 2021
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

7:10 (IST) 15 Dec 2021
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1.80 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

வங்கி ஒழுங்குமுறை சட்டம் மீறல் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1.80 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகை வழிகாட்டுதல்களுக்கு இணங்காததான் காரணமாக ஒரு தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது

6:29 (IST) 15 Dec 2021
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரூ 2.16 கோடி பணம் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், ரூ. 2.16 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், தங்கமணி வீட்டில் இருந்து 1 கிலோ 130 கிராம் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையில் தெரிவிகப்பட்டுள்ளது.

5:34 (IST) 15 Dec 2021
சென்னையில் தங்கமணிக்கு சொந்தமான 4 இடங்களில் நடந்த சோதனை நிறைவு

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 4 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது.

5:11 (IST) 15 Dec 2021
தக்காளி விலை குறையவில்லை – ஐகோர்ட் கவலை

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், தக்காளி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனமழையால் தென் மாநிலங்களில் விளைச்சல் இல்லை; சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

5:00 (IST) 15 Dec 2021
சூரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்கை; தமிழக அரசின் நிலை என்ன? நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

4:47 (IST) 15 Dec 2021
திமுக நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டுள்ளது: ஈபிஎஸ்

ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாமல் திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டுள்ளது. திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, உறவினர் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சோதனை நடத்துகிறது. இது கண்டித்தக்கது என்று கூறினார்.

4:32 (IST) 15 Dec 2021
மேற்கு வங்கத்தில் 7 வயது சிறுவனக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக 7 வயது சிறுவனக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த சிறுவன் சமீபத்தில் தான் அபுதாபியில் இருந்து திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஓமிக்ரான் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

4:28 (IST) 15 Dec 2021
முல்லை பெரியாறு விவகாரம்; கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

முல்லை பெரியாறு அணையில் நீரை திறப்பது பற்றி அடிக்கடி இடைக்கால மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எப்போது நீரை திறந்துவிட வேண்டும் என்பது கண்கானிப்புக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கவும் கூறியுள்ளது.

4:20 (IST) 15 Dec 2021
பொட்டாஷ் விலையை குறைக்க வேண்டும்- விஜயகாந்த கோரிக்கை!

பொட்டாஷ் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. விலையை குறைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார்.

4:05 (IST) 15 Dec 2021
வருமான வரி சோதனை; அதிகாரிகள் சென்ற வாகனத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகை!

முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், உறவினரது வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதையறிந்த அதிமுக தொண்டர்கள், நாமக்கல், ஆலாம்பாளையத்தில் தங்கமணியின் வீட்டின் முன் குவிந்தனர். அப்போது அதிகாரிகள் சென்ற வாகனத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

3:59 (IST) 15 Dec 2021
செமி கண்டக்டர் சிப், உதிரி பாகங்கள் தயாரிக்க ரூ.76 ஆயிரம் கோடி நிதி!

அடுத்த ஆறு ஆண்டுகளில் செமி கண்டக்டர் சிப் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்க ரூ.76 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

3:51 (IST) 15 Dec 2021
வரும் 17-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

வரும் 17-ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3:48 (IST) 15 Dec 2021
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 26, 344 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு செய்துள்ளது.

3:40 (IST) 15 Dec 2021
போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஆர்யன்கான் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இனி ஆர்யன் கான் போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை எனவும், டெல்லி சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3:30 (IST) 15 Dec 2021
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நீதிமன்றம் கேள்வி!

போலி ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

3:22 (IST) 15 Dec 2021
வேதா நிலையம் கையகப்படுத்துதலை ரத்து செய்த தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி அதிமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2:53 (IST) 15 Dec 2021
கடும் அமளி : மக்களவை ஒத்திவைப்பு

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்: மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2:51 (IST) 15 Dec 2021
குன்னூர் விபத்து : நிவாரணம் அறிவித்த கேரளா அரசு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேரள விமானப்படை வீரர் பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

2:29 (IST) 15 Dec 2021
முதல்வர்களுடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு பிரார்த்தனை

உத்திரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது உத்திரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ராமரின் ஜென்மபூமியான அயோத்தியில் முதல்வர்ளுடன் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

2:18 (IST) 15 Dec 2021
கட்சி தாவுதல் பாமகவின் வாடிக்கை எடப்பாடி பழனிச்சாமி

தேர்தல் நேரத்தி்ல் கட்சி தாவுவது பாமகவின் வாடிக்கை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

2:13 (IST) 15 Dec 2021
ஒடிடி தளத்தை உறுதி செய்த அன்பறிவு

ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வரும் அன்பறிவு படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1:41 (IST) 15 Dec 2021
வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள்” – விராட்கோலி காட்டம்

“கேப்டனாக இல்லாமல் அணி வீரராக விளையாட தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன் என்று கூறியுள்ள முன்னாள் கேப்டன் விராட்கோலி, “வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

1:23 (IST) 15 Dec 2021
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எதிர்க்கொள்ளும் இந்தியா

2022ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களம் இறங்குகிறது இந்திய அணி.

12:53 (IST) 15 Dec 2021
வருண் சிங் மரணம்

கடந்த 8ம் தேதி அன்று குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 நபர்கள் உயிரிழந்த நிலையில் க்ரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்தார். அவர் மேற்படி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

12:48 (IST) 15 Dec 2021
குரூப் கேப்டன் வருண் சிங் மரணம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

12:45 (IST) 15 Dec 2021
முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை – அதிமுக தலைமை கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12:27 (IST) 15 Dec 2021
ஐதராபாத்தில் இருவருக்கு ஒமிக்ரான் உறுதி

ஐதராபாத்தில் இரண்டு நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

12:26 (IST) 15 Dec 2021
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளாது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.

12:04 (IST) 15 Dec 2021
தடுப்பூசி இல்லை என்றால் வேலையை விட்டு செல்லலாம் – கூகுள் எச்சரிக்கை

தங்களின் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி குறித்த தங்களின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட வேண்டும் என்றும் நிறுவனத்தில் அதனை அறிவிக்க மறுத்தால் தங்களின் பணியை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

12:02 (IST) 15 Dec 2021
லக்கீம்பூர் விவகாரம்: அஜய் மிஸ்ரா பதவி விலகக்கோரி மக்களவையில் கடும் அமளி; அவை ஒத்திவைப்பு

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்தியது திட்டமிட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

11:57 (IST) 15 Dec 2021
நடமாடும் தேநீர் வண்டி சேவைகள் – கொடியசைத்து துவங்கி வைத்தார் முதல்வர்

20 நடமாடும் தேநீர் வண்டிகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார். ஒவ்வொரு வண்டியின் விலையும் ரூ. 15 லட்சம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான, கலப்படமற்ற தேநீர் சேவையை மக்களுக்கு வழங்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 10 வண்டிகளும், கோவையில் 4 வண்டிகளும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா 3 வண்டிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11:21 (IST) 15 Dec 2021
போயஸ் இல்லம் – அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி

ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேல்முறையீடு செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

10:43 (IST) 15 Dec 2021
அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10:37 (IST) 15 Dec 2021
தேநீர் வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்

தமிழகம் முழுவதும் 3 கோடி ரூபாய் செலவில் 20 நடமாடும் தேநீர் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

10:21 (IST) 15 Dec 2021
அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

3 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடந்துவரும் நிலையில், ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10:13 (IST) 15 Dec 2021
கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 8,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

9:46 (IST) 15 Dec 2021
வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட்டுககு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று தொடங்குகிறது . வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

8:51 (IST) 15 Dec 2021
தென் ஆப்ரிக்கா தொடரில் கோலி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Web Title: Tamil news today omicron who warning thangamani dvac raid live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express