Tamil Nadu News Updates: பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிவைக்கிறார். டோக்கன் முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் அபராதம்
சென்னையில் மாஸ்க் அணியாமல் இருந்த 1,022 பேரிடமிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 2,18,300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் இன்று வரை 2603 பேரிடம் இருந்து 5,45,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 61-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ. 91.43-க்கும் விற்பனையாகிறது
“பிரதமர் மோடி திமிர் பிடித்தவர்” – மேகாலயா ஆளுநர் சத்தியபால்
40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி
15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடுமுழுவதும் தொடங்கியது. முதல் நாளில் இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்
உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.83 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,017 பேர் உயிரிந்துள்ளனர். அமெரிக்கா 2.97 லட்சம் பேரும், பிரிட்டனில் 1.57 லட்சமும், ஸ்பெயினில் 93 ஆயிரமும், இத்தாலியில் 68 ஆயிரமும், பிரான்ஸில் 67 ஆயிரமும் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 , ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியாவில்கோவிட்19 தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 2021-22 சீசனுக்கான ரஞ்சி டிராபி, கர்னல் சி கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகியவற்றை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
ஜெ.வின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,728ஆக இருந்த நிலையில் 2,731 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. ஆனால், மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 3 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில், ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது கோவை தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.
புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ரகுபதி சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் ரகுபதி ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நாளை முதல் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வழித்தட எண்கள் 4, 4M, 8B, 8B Extn., 38A, 38H, 38H, 38G 44, 44C, 44 Cut, 57D, 57H, 57J, 57M மற்றும் 57F ஆகிய பேருந்துகளும் நாளை முதல் பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்ததுபோல் நாடகமாடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரயில்வே ஊழியர் டீக்கா ராமனை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரேனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ – பேருந்துகளில் 100% அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50% மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலால் தற்போது இந்த உத்தரவை வாபஸ் பெற்றது டெல்லி அரசு
முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை 'புல்லி பாய்' செயலி மூலம் ஏலம்விட்ட விவகாரத்தில் பொறியியல் மாணவர் விஷால் குமாருக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை போலீஸ் காவல் அளித்தது மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தென்காசியில் ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பம் வசித்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தெருவிற்கு சீல் வைத்து, தடுப்புகள் வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார பின்னடைவு என்பது ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்தது. தற்போது முக்கிய வர்த்தக பாதையாக திரிபுரா மாறியுள்ளது என்று திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார்
சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தொலைதூர கல்வியில் பயின்றவர்களுக்கும் டான்ஜெட்கோவில் பணி வழங்கலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் பெரிய அளவில் பதட்டம் அடைய வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்
டெல்லியில் ஒரேநாளில் 5,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
ஆண்டுதோறும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் வெளியிடும். அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
புதுக்கோட்டை நார்த்தாமலையில், குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உடலுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினர்
தஞ்சையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சிறுவன் புகழேந்தியின் உடலை, போலீசார் நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்து சென்று, புதைக்க முற்பட்டதால் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் உடலுக்கு உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த கட்டடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்
அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்- முதல்வர்!
தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்புகையில், சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன்.அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்!தடுப்பூசி- முகக்கவசம்- கிருமிநாசினி- தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பீர்! pic.twitter.com/Xex4Nk9jh5
— M.K.Stalin (@mkstalin) January 4, 2022
பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இந்நிலையில், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை ரூ.48,154 கோடி நஷ்டத்தில் செல்வதாகவும், 3 வருடங்களுக்கு முன்னால் நடைபெற வேண்டிய தொழிற்சங்க கூட்டங்கள் தற்போதுதான் நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பம் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திலிருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்துசென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!
தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் வரும் 20ஆம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த வேண்டும். செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ. 225 கட்டணம் மற்றும் செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளாது.
சென்னையில் 256 தெருக்களில், 3-4 பேருக்கும், 51 தெருக்களில், 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிம் ஸ்வப் முறையில் நவீன மோசடியில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் இயற்றப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் 2021ஐ எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது, இந்தச் சட்டத்தின் விதிகள், எல்லைக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந்துள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலுமாக மறுக்கும் என்று கூறியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து 6 வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் வீட்டு வசதித்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல், திங்கள் கிழமை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதியளித்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில், படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்ற வந்த முனியாண்டி (34) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் ரூ. 4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடமே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ. 33 ஆக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும் என வணிகவரி அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்
13ம் தேதி வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று படத்தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் வர உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கடைகளுக்கான நேரக் கட்டுபாடுகளும், இரவு நேர ஊரடங்கும், வழிபாட்டுத்தளங்கள் செயல்படவும் பல்வேறு தடைகளை முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவும் பரிந்துரை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி திமுக எம்.பி. ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். ஜனவரி 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்தே கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்வோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்காகவும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காகவும் தான் அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது அந்த மருத்துவ அலகுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து தற்போது தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழக காவல்துறை பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.