இத்தாலி, ஸ்காட்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இந்தியா திரும்பினார் பிரமதர் மோடி. அவரை மேளதாளங்களுடன் வழியனுப்பி வைத்த ஸ்காட்லாந்து வாழ் இந்தியர்கள்
கேல் ரத்னா,அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு
விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு தங்க மகன் நீரஜ் சோப்ரா உட்பட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும். அதே போல, அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவான், பவானி தேவி உள்பட 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 106.66 ரூபாய், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.82 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 22.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:57 (IST) 03 Nov 2021இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- 20:45 (IST) 03 Nov 2021பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.10 விலை குறைகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101, டீசல் விலை ரூ.92க்கு விற்பனையாக வாய்ப்பு.
- 17:55 (IST) 03 Nov 2021கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க இனி சிக்கல் இல்லை
- 15:36 (IST) 03 Nov 2021தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை அன்று விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை என அறிவித்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது
- 14:42 (IST) 03 Nov 2021தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்பாடு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையையொட்டி 12 படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் 10 வார்டுகள் தயார் நிலையில் உள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 14:41 (IST) 03 Nov 2021வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தலாம் - பிரதமர் மோடி
தடுப்பூசி செலுத்தும் பணியில் 20, 25 பேர் குழுக்களாக சேர்ந்து பணியாற்றலாம் என்றும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தலாம் என்றும் முதல்வர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
- 14:35 (IST) 03 Nov 2021வீடு கட்ட வைத்திருந்த பணத்தை மாணவர்களுக்கு கொடுக்கும் விஷால்
வீடு கட்ட வைத்திருந்த பணத்தை புனித் ராஜ்குமார் படிக்க வைத்த மாணவர்களின் கல்விச் செலவுக்கு கொடுக்கவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
- 14:29 (IST) 03 Nov 2021ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற கோராசன்
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
- 13:58 (IST) 03 Nov 2021மழைக்கால பராமரிப்பு பணிகள்
மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
- 13:55 (IST) 03 Nov 2021டிசம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வரும் டிசம்பர் 8-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- 13:54 (IST) 03 Nov 2021காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 12:27 (IST) 03 Nov 2021டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை,சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- 12:21 (IST) 03 Nov 2021உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் பொன்முடி
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
- 11:52 (IST) 03 Nov 2021உள் இடஒதுக்கீடு ரத்து கவலை அளிக்கிறது - ஜி.கே மணி
வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை தமிழக அரசு முறையாக கையாளும் என்றும், மேல் முறையீடு செய்யவும் பாமக கோரிக்கை விடுத்துள்ளது என்று முதல்வர் சந்திப்பிற்கு பிறகு ஜி.கே. மணி அறிவித்துள்ளார்
- 11:31 (IST) 03 Nov 2021பருவமழையை எதிர்க் கொள்ள தயார்நிலை - அமைச்சர் அறிவிப்பு
பருவமழையால் மக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என முதல்வர் கூறியுள்ளார். டிசம்பர் மாத இறுதி வரை பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- 10:54 (IST) 03 Nov 2021மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை - பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித நிறுவனத்தில் வர்த்தக பிரிவில் துணை மேலாளராக மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 10:15 (IST) 03 Nov 2021தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856 க்கு விற்பனையாகிறது. அதே போல், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து, ரூ.4,482-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, ரூ.67.60க்கு விற்பனையாகிறது
- 10:12 (IST) 03 Nov 2021கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 311 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 14,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 09:37 (IST) 03 Nov 2021டெங்கு பாதிப்பு: 9 மாநிலங்களுக்கு விரைந்த ஆய்வு குழு
டெங்கு பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப்,ஹரியானா, ராஜாஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 08:58 (IST) 03 Nov 2021பழனி சூரசம்ஹார திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
பழனி முருகன் கோயிலில் உற்சவ நிகழ்வு, சூரசம்ஹார திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.