Tamil Nadu News Updates: அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து நேற்றிரவு மச்சிபட்டினம், நார்சாபூர் இடையே கரையைக் கடந்தது. வடகிழக்கு மாநிலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால், வரும் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 36வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை
திராக் வெள்ளை நிற வைரம் ஏலம்
உலகின் மிகப்பெரிய 228.31 காரட் எடையுள்ள தி ராக் என்ற வெள்ளை நிற வைரம் ஏலம்.169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக சுவிஸ் ஏல நிறுவனம் அறிவிப்பு
இலங்கை மக்களுக்கு விசிக நிதியுதவி
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், விசிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் ரூ10 லட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்
ஐபிஎல்: டெல்லி அணி வெற்றி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி. 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொழும்புவில் இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி: இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன்; அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும்.” என்று கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் இலங்கை அரசு தளர்வு அறிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன் ஸ்டாலின் என்று அச்சிடப்பட்ட பைகளில், இலங்கை மக்களுக்கு அரிசி, பால் பவுடர் பொருட்களை அனுப்ப தயாராகி வருகிறது. வரும் 22ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ரணில் விக்கிரமசிங்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பொறுப்பை பெற்று கொண்டார். ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 26வது பிரதமராக பதவியேற்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: “ஆசிரியர்களிடம் மாணவர்கள் இனி தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு எல்லை மீறும் மானவர்களுக்கு TC வழங்கப்படும். ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் – ஆம்பூரில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவிழாவை ஒத்திவைத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகளில், முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தலே பத்தலே' என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது
ஏர் இந்தியாவின் நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக கேம்பெல் வில்சன் நியமனம் செய்யப்படுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021-22 நிதியாண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை. சுமார் 1.94 லட்சம் பேர் ரூ.1,000க்கும் கீழ் வரி செலுத்தியுள்ளனர். வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டால் வட்டி மற்றும் தண்டத்தொகை வசூலிக்கப்படும் என தமிழ்நாடு வணிகவரித் துறை அறிவித்துள்ளது
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறக்க கோரியும், தாஜ்மஹாலின் வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை உருவாக்க கோரியும் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
இலங்கையில் ஆட்சியமைக்க தயார் என அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, 4 நிபந்தனைகளுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் கடிதம் எழுதியுள்ளார். அதிபர் பதவி விலகினால், புதிய அரசாங்கத்தை அமைக்க தயார் என சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்துள்ளார்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்கு புரிய வைப்பது நீதி வழங்கல் துறையின் கடமை. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
நானும், தந்தையும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படும் என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். TANCET தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக வருகிற 16ம் தேதி நேபாளம் பயணம் செய்யவுள்ளார். புத்தா பூர்ணிமா நிகழ்வை முன்னிட்டு நேபாளம் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான சென்னை மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தட திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் நூல் விலையினைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர். அவ்வகையில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 1.30 கோடிக்கான காசோலையை வழங்கினார்
“இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது. இந்தியாவின் மூலம் வெளி நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது” என்று இந்தியா அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணையில், அரிசியை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதாக வழக்கு தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது. இந்தியாவின் மூலம் வெளி நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியறுத்தியுள்ளார்.
எல்லாம் வல்ல இறைவன், நல்ல ஆரோக்கியத்தை நல்கிட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைபாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக அளிக்கப்பட்டுள்ளது. அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ₨1.30 கோடிக்கான காசோலையை வழங்கினார்
நூல் விலையினைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
திருச்சி, தொட்டியம் பகுதியில் மாட்டுவண்டிப் பந்தயம், குதிரை வண்டி பந்தயம், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த அனுமதி கோரி கொடுக்கப்பட்ட மனுவுக்கு தொட்டியம் காவல் ஆய்வாளரிடம் புதிதாக மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
கருத்துச் சுதந்திரத்தை தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதித்து பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது என்று காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிடங்கில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயமானதை தொடர்ந்து கிடங்கு கண்காணிப்பாளர்கள் கெளரிசங்கர், சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெரியசாமி(20) என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் தொடங்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். வேளாண்மைக்கு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இறைவனின் அருளால், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்திருக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டமுன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
இலங்கை நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ518.17 கோடி மதிப்பீட்டில், 21 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்
பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற மதுரை பள்ளி மாணவி ஜெர்லின் தங்கம் வென்று சாதனை
அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு 19,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகொரியா நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வடகொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையை கண்காணிக்க அதிபர் உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி மறுத்தவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்த சென்றபோது தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
மே 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
கடலூர் அருகே போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது. பெரியகுப்பம் பகுதியில் இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது தாக்குதல் நடைபெற்றது.