Tamil Nadu News Updates: சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ100.18க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.09க்கும் விற்பனையாகிறது. கடந்த 15 நாள்களில் பெட்ரோல் விலை ரூ8.69க்கும், டீசல் விலை ரூ8.75வும் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொடங்குகிறது மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, இன்று காலை 10.30 மணி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 14ஆம் தேதியும், திருத்தேரோட்டம் 15ஆம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 16ம் தேதியும் நடைபெறவுள்ளது.
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக போராட்டம்
ஏப்ரல் 9 மாநகராட்சி பட்ஜெட்
சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்ய உள்ளார்.
கொரோனா அப்டேட்
உலகம் முழுவதும் 49.22 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42.74 கோடி பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், 61.78 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐபிஎல்: லக்னோ அணி வெற்றி
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ரஷ்ய துருப்புக்களின் நடவடிக்கைகள் “டேஷ் போன்ற பிற பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல” என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி யுஎன்எஸ்சியிடம் கூறினார், தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
“அவர்கள் இன மற்றும் மத வேறுபாட்டை அழிப்பதில் ஒரு நிலையான கொள்கையைப் பின்பற்றினர், பின்னர் போர்களைத் தூண்டிவிட்டு, பல வழக்கமான பொதுமக்களைக் கொல்லும் வகையில் வேண்டுமென்றே அவர்களை வழிநடத்தினர். அவர்களில் சிலர் தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் கிணறுகளில் வீசப்பட்டனர், அதனால் அவர்கள் இறக்கின்றனர். அவர்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் குடியிருப்புகளில் கொல்லப்பட்டனர், வீடுகள் கையெறி குண்டுகளால் தகர்க்கப்பட்டன, ”என்று அவர் கூறினார்.
“பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக நடுரோட்டில் தங்கள் கார்களில் அமர்ந்திருந்தபோது டாங்கிகளால் நசுக்கப்பட்டனர். கைகால்களை வெட்டி, தொண்டையை அறுத்தார்கள். குழந்தைகள் முன்னிலையில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின் கொடூரமான குற்றங்கள் ”என்று அவர் மேலும் கூறினார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 66“ திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீக்குச்சிகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி குச்சிகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
பால் பண்ணை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள் பணியில் இல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்
தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார்
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்றும், ரஷ்ய மருத்துவ கல்லூரிகளில், இந்திய மாணவர்கள் படிப்பை தொடர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., திருமாவளவன் கூறியுள்ளார்
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய அரவிந்த்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. பெண்கள் மீதான தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்கு மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது. மனுதாரர்கள் டாஸ்மாக் பார்களை மூட கோரிக்கை விடுக்காத நிலையில், தடைவிதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டதையடுத்து, தனி நீதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி கொள்கை உருவாக்கப்படும். தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா விஜய் நடிக்கும் “தளபதி 66“ திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் ராஷ்மிகாவுக்கு இது பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது அதிமுக என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
செனனை நத்தம்பாக்கம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.
நெதர்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துலிப் மலர்க் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரதட்சணைக்கு ஆதரவாக பாடநூல் வெளியிட்ட பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை தேவை. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை செயலாளர் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கயில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் பழங்கள், காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளது.
பீஸ்ட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
திண்டுக்கல், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான வாகன கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டண முறையே தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு பாராட்டுகள் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
தமிழ்நாட்டுக்கு என தோல் மற்றும் காலணி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 97% முதல் டோஸ் மற்றும் 85% இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார்.
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 27 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தோன்றாமல் இருந்திருந்தால் தமிழ் சமூகம் முன்னேறி இருக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உடன் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சந்தித்துப் பேசினார்.
இலங்கை நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அலி சப்ரி. இலங்கையின் புதிய நிதியமைச்சராக நேற்று பதவியேற்ற நிலையில் இன்று ராஜினாமா
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் நேரு அறிவித்துள்ளார். ஏழை மக்கள் பாதிக்காதவாறு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பேச்சு.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.
நீட் முதுநிலை தேர்வுக்கான உள்ளுறை பயிற்சியை முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆண்ணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் தவபழனி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜர்
திண்டிவனம், பெலாக்குப்பம் அருகே சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ₨500 கோடி மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறாமல் இருந்த மதுரை மீனாட்சி கோவிலின் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது . தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த குறையும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்பதற்கு சமத்துவபுரம் கிடப்பில் போடப்பட்டதே சாட்சின என விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரதமர் ராஜபக்சே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஜீவன் தொண்டமான், சமூதாய உட்கட்டமைப்பு இணையமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 1,208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 12 ஆயிரத்து 54 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்களிடம் இன்று முதல் மறுவிசாரணை செய்கிறது. 9 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம்.
விழுப்புரம் வானூர் அருகே கொழுவாரியில் புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தேனி பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 4,000 டன் அளவிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதம்
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் பங்கேற்கவுள்ளனர்.