scorecardresearch

Tamil News Highlights: பெட்ரோலை தொடர்ந்து, டீசல் விலையும் ரூ100-ஐ தாண்டியது!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 4 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Updates: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா. புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

பெட்ரோல் லீட்டருக்கு 0.38 காசும், டீசல் 0.38 காசும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 109.34 ரூபாய்க்கும், டீசல் 99.42 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்படவுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்திவைத்து மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஹாட்ரிக் தோல்வி

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருப்பதால், ரசிகர்கள் ஏமாற்றம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:41 (IST) 4 Apr 2022
கோத்தபய ராஜபக்சேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; டிரெண்டாகும் ‘GotaGoHome’ ஹேஷ்டாக்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக 'GotaGoHome' என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.

20:52 (IST) 4 Apr 2022
மனித உரிமை குறித்து கவலைப்பட வேண்டியது அரசின் கடமை; மக்களவையில் அமித்ஷா பேச்சு

குற்றவியல் சட்டத்தை அடுத்த யுகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனித உரிமை என்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன ; மனித உரிமையை ஒரே கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டு வாழுகின்ற நபர்களின் மனித உரிமை குறித்து கவலைப்பட வேண்டியது அரசின் கடமை என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

20:39 (IST) 4 Apr 2022
கும்பகோணம்: குருமாவில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்

கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், சூடாக இருந்த பானிபூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தைக்கு தஞ்சாவூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி குழந்தை உயிரிழந்துள்ளது

20:26 (IST) 4 Apr 2022
சீமைக் கருவேல மரங்களை அகற்றி விளைநிலங்களாக மாற்றுக – விஜயகாந்த்

பயனற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றி விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்

20:01 (IST) 4 Apr 2022
திருவாரூர் ; காவல் நிலையத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காவல் நிலையத்தில் தீக்குளித்த சுதாகர் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தீக்குளித்த நிலையில், சுதாகர் இன்று உயிரிழந்துள்ளார்

19:51 (IST) 4 Apr 2022
மத்திய அரசை காரணம் காட்டி சொத்து வரியை உயர்த்துவதா? – சீமான்

மத்திய அரசை காரணம் காட்டி சொத்து வரியை உயர்த்துவதா என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நிதியாதாரத்துக்கு மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்துக்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

19:44 (IST) 4 Apr 2022
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு; 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய ‌இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1, 2, 5 ஆகிய யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

19:29 (IST) 4 Apr 2022
தென்மாவட்டங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே

தென்மாவட்டங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக நெல்லை – தாம்பரம் ஆகிய இடங்களுக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும்.

19:12 (IST) 4 Apr 2022
ஜெ.மரண வழக்கு; அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த 9 மருத்துவர்களிடமும், ஏப்ரல் 5, 6, 7 ஆகிய 3 நாட்கள் மறுவிசாரணை நடைபெற உள்ளது

18:28 (IST) 4 Apr 2022
கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இசையில் உயரிய விருதான கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் சிறந்த நியூ ஏஜ் ஆல்பமான 'டிவைன் டைட்ஸ்'-க்காக கிராமிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

18:17 (IST) 4 Apr 2022
புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

தற்போது நேபாளத்திற்கான இந்திய தூதராக உள்ள வினய் மோகன் குவாத்ரா புதிய வெளியுறவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

18:16 (IST) 4 Apr 2022
சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக அப்புறப்படுத்த தமிழக அரசு திட்டம்

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் அறிவித்துள்ள தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் இருப்பதை கண்காணிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

18:15 (IST) 4 Apr 2022
பங்குனி பொங்கல் திருவிழாவில் கிடா முட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி

மதுரை கல்புளிச்சாம்பட்டியில் ஏப்.10ம் தேதி கிடா முட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது. பங்குனி பொங்கல் திருவிழாவில் கிடா முட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்க்கது.

17:36 (IST) 4 Apr 2022
காமராஜர் சிலை வைக்க அனுமதி கோரியது குறித்து ஆட்சியர் பரசீலிக்க உத்தரவு

நெல்லை மாவடி பகுதியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 3 அடி உயர சிலை வைக்க அனுமதி கோரி மனு மாவட்ட ஆட்சியர் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

17:34 (IST) 4 Apr 2022
விருதுநகர் பாலியல் வழக்கு : கைதான 4 பேருக்கும் நீதிமன்ற காவல்

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 4 பேரையும் வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து்ளளார்

17:28 (IST) 4 Apr 2022
குழந்தை திருமணம் : சிறுமி அளித்த புகாரில் பெற்றோர் மீது போக்சோ

சிவகங்கை, மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், கணவன் உட்பட 5 பேர்‌ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

17:26 (IST) 4 Apr 2022
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு

இலங்கையில் நிலவி வரும் அசாதாரன சூழல் மற்றும் மக்கள் போராட்டத்தை கருத்தில் கொண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், இடைக்கால அரசு அமைப்பதற்கான அதிபரின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17:25 (IST) 4 Apr 2022
காபந்து பிரதமராக முன்னாள் நீதிபதியை கைகாட்டும் இம்ரான்கான்

பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், காபந்து பிரதமராக முன்னாள் நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16:22 (IST) 4 Apr 2022
சிறையில் தண்டனை கைதிகளை விட 75% விசாரணைக் கைதிகளே அதிகம் – மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு: நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனை கைதிகளை விட 75% விசாரணைக் கைதிகளே அதிகமாக உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் லாக்-அப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நீரவ் மோதி, லலித் மோதி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை திரும்பக் கொண்டு வர மத்திய அரசு என்ன சட்டங்களை வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

16:04 (IST) 4 Apr 2022
அமெரிக்கா, தென்கொரியா நாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு

அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளன. சுற்றுப் பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

16:02 (IST) 4 Apr 2022
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணை முடிந்து 4 பேரை நீதிமன்றத்தில் செய்தது சிபிசிஐடி

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி 6 நாட்கள் விசாரணை முடித்து 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

15:36 (IST) 4 Apr 2022
தமிழகத்தில் 60 கி.மீ-க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை – தமிழச்சி தங்கபாண்டியன்

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்: சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 60 கி.மீ-க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

15:33 (IST) 4 Apr 2022
தமிழகத்தில் ரூ.5,200 கோடி நகைக்கடன் தள்ளுபடி; 97.5% கடன்கள் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் ரூ.5,200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5% கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 12.19 லட்சம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

15:31 (IST) 4 Apr 2022
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான ஸ்ரீதரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான ஸ்ரீதரின் ஜாமின் மனு வழக்கு விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

14:55 (IST) 4 Apr 2022
சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்த வழக்குகள் ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.

14:46 (IST) 4 Apr 2022
தாது மணல்கள் பதுக்கல் தொடர்பான வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி நம்பியாறு ஆற்றுப்படுகையில் தாது மணல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் சிபிசிஐடி மற்றும் சிபிஐ பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

14:38 (IST) 4 Apr 2022
சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாட்களுக்கு நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

14:26 (IST) 4 Apr 2022
மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பினர்.

14:13 (IST) 4 Apr 2022
முன்னாள் மனைவி மோனிகா மீது இசையமைப்பாளர் டி.இமான் புகார்

முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் புகார் அளித்துள்ளார். குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றதாக டி.இமான் புகார் அளித்துள்ளார். இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:10 (IST) 4 Apr 2022
எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனம் இணைப்பு

எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைக்கப்பட்டுள்ளது எச்.டி.எஃப்.சியின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13:51 (IST) 4 Apr 2022
பீஸ்ட் பட அப்டேட்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமதி ஹபீபோ பாடலின் லிரிக் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தியில் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13:41 (IST) 4 Apr 2022
இலங்கையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர்.

13:34 (IST) 4 Apr 2022
காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்-அதிபர் ஆரிப் அல்வி

பாகிஸ்தானில் புதிய அரசு அமையும்வரை, காபந்து பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் அல்வி தெரிவித்தார்.

13:22 (IST) 4 Apr 2022
எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு – திருச்சி சிவா

உயர்ந்துகொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அரசு எந்தவித பதிலும் கூறுவதில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.

13:07 (IST) 4 Apr 2022
எச்.டி.எஃப்.சி. வங்கி உடன் எச்.டி.எஃப்.சி லிமிடேட் இணைப்பு

எச்.டி.எஃப்.சியின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12:56 (IST) 4 Apr 2022
தேர்தலை போன்று, பொதுத்தேர்வையும் பாதுகாப்புடன் நடத்த நடவடிக்கை

வினாத்தாளை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநில அளவில் கல்விக்கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12:53 (IST) 4 Apr 2022
மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் செய்ததால் ஒத்திவைப்பு.

12:52 (IST) 4 Apr 2022
இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவு

நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வித்துறை அமைச்சராக தினேஷ்ஹ் குணவர்தனயும் நியமனம் செய்துள்ளார் அதிபர். அதே போன்று வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

12:50 (IST) 4 Apr 2022
செவிலியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் முறையாக அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

12:09 (IST) 4 Apr 2022
இளையராஜா மேல்முறையீடு – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பட தயாரிப்பாளர்கள் காப்புரிமை பெற்றுள்ளதால், 20 தமிழ் திரைப்படங்களின் இசையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் காப்புரிமை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு உள்ளது, இசை பணிகளுக்கு உரிமை கிடையாது என்று கூறிய இளையராஜா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:53 (IST) 4 Apr 2022
மாநில அரசுகளின் இலவச திட்டங்களால், இலங்கை போன்ற நிலை ஏற்படலாம்

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் இலங்கை போன்ற நிலை இந்தியாவில் ஏற்படலாம் என்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை

11:18 (IST) 4 Apr 2022
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது அமர்வு துவங்கியது. இரு அவைகளின் இன்றைய அலுவல்கள் துவங்கிய நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் முழக்கம்.

10:50 (IST) 4 Apr 2022
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு இலவச பட்டா வழங்கிய முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சுமார் 2.35 லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கும், 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இலவச பட்டா வழங்கப்படுகிறது

10:48 (IST) 4 Apr 2022
6,033 அரசு பள்ளிகளில் 8,228 பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளது – ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள 6,033 அரசு பள்ளிகளில் உள்ள 8,228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது; மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த எந்த கட்டிடத்திலும் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10:37 (IST) 4 Apr 2022
எஸ்.பி.வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் – தமிழக அரசு

வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்பி வேலுமணி தாக்கல் செய்துள்ளார். தவறான வழியிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10:32 (IST) 4 Apr 2022
ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாகியுள்ளது. புதிய மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஆந்திராவில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

10:24 (IST) 4 Apr 2022
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ176 குறைந்து, ரூபாய் 38 ஆயிரத்து 424க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ22 குறைந்து ரூ4,803க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:22 (IST) 4 Apr 2022
அறநிலையத்துறை அலுவலர்களுக்கு 69 புதிய வாகனங்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கான புதிய வாகனங்களை பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ5.8 கோடி மதிப்பீட்டில் 69 புதிய வாகனங்களை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

09:56 (IST) 4 Apr 2022
கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில், கட்டப்பட்டுள்ள விடுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ரூ8.74 கோடியில் கட்டப்பட்டுள்ள குளிர்சாதன வசதி கொண்ட வகுப்பறைகளையும் திறந்து வைத்தார்

09:36 (IST) 4 Apr 2022
இந்தியாவில் மேலும் 913 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,316 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 13 பேர் உயிரிழந்தனர்.

Web Title: Tamil news today petrol diesel srilanka crisis live updates