Live

Tamil News : கனமழை: புதுக்கோட்டை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

சென்னையில் தொடர்ந்து 20-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.89 கோடியைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 23.42 கோடியைத் தாண்டியது.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51.82 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இருளர் போலவே தவிக்கும் காடர் பழங்குடியினர் – போராடும் மக்கள்

குறைந்த விலையில் தக்காளி

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
9:49 (IST) 25 Nov 2021
இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது; இந்திய அணி பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடந்த 20 ஓவர் போட்டியில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது. இதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பர்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு டெஸ்ட் தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலாவது டெஸ்டில் மட்டும் ஆடவில்லை. இதனால் கேப்டன் ரஹானே, துணை கேப்டன் புஜாரா ஆகியோருடன் மற்ற வீரர்கள் களமிறங்குகின்றனர்.

9:37 (IST) 25 Nov 2021
கரூர் மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் தற்கொலை!

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த மாணவி, சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்தியபோது, மாணவி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்வதாக மாணவி எழுதியிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவி பயின்ற பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாகுவதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தில் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள், மாணவர்கள் முன் அவமானமாக இருக்கிறது என்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9:12 (IST) 25 Nov 2021
போராட்டங்களுக்கு மத்தியில் இன்று வெளியானது சிம்புவின் மாநாடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் டிக்கெட் பதிவுகளும் தொடங்கியது. இதனிடையே, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. எனவே மாநாடு திரைப்படம் எதிர்பார்த்தபடி நாளை வெளியாவாது என அறிவித்தார். இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விட்டது, மாநாடு திரைப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையரங்கில் வெளியானது. பல போராட்டங்களுக்கு மத்தியில் படம் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

8:55 (IST) 25 Nov 2021
தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 40 குறைந்தது!

தமிழகத்தில் சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.20 முதல் விற்கப்பட்ட தக்காளி தொடர்மழை காரணமாக, தக்காளி வரத்து குறைந்ததால், விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஹோட்டல் உரிமையாளர்களும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 150 முதல் ரூ. 180 வரை விற்பனையானது. இந்நிலையில் இன்று கிலோவுக்கு ரூ.40 குறைந்து, 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

8:43 (IST) 25 Nov 2021
தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; இந்திய வானிலை மையம்!

தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்னும் 12 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. எனவே இன்று முதல் இன்னும் 5 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யலாம் என்பதால் தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

8:38 (IST) 25 Nov 2021
கனமழை எதிரொலி; 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று(வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை கருதி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில், கனமழை காரணமாக இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

11:25 (IST) 24 Nov 2021
கரூர் பள்ளி மாணவி பாலியல் புகார் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலை

கரூரில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9:49 (IST) 24 Nov 2021
சிதம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சேதியூர் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அசோக்குமார் என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

9:18 (IST) 24 Nov 2021
அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

8:11 (IST) 24 Nov 2021
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின்

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட மீரா ஜாக்சனுக்கு நிபந்தனையுடன் ஜாமின் அளித்துள்ளது.

6:27 (IST) 24 Nov 2021
மாநாடு வெளியீடு தேதி தள்ளிவைப்பு

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

6:22 (IST) 24 Nov 2021
பிரதமர் மோடி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

6:19 (IST) 24 Nov 2021
மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் நூலகம் அமைக்க ரூ.99 கோடி, தொழில் நுட்ப சாதனங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடி என மொத்த ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

6:18 (IST) 24 Nov 2021
மழை பாதிப்பு நிவாரணமாக ரூ.4,625.80 கோடி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழகத்தில் மழை பாதிப்பு நிவாரணமாக ரூ.4,625.80 கோடி வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உடனடி நிவாரணமாக ரூ.1,070.92 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,554.88 கோடியும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5:31 (IST) 24 Nov 2021
தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்ற திமுக முயற்சி: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

திருப்பூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசியவர், குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்டிகையை மாற்ற முயற்சி செய்கிறது. பாஜக மட்டுமே குடும்ப அரசியலுக்கு எதிரானது என பேசினார்.

5:24 (IST) 24 Nov 2021
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை மையம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

4:53 (IST) 24 Nov 2021
ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு நீட்டிப்பு!

வேலை வாங்கி தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து காவல்துறை வாதத்திற்காக வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4:24 (IST) 24 Nov 2021
கனமழை எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும், , தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், நீர் நிலைகளில் குளிக்கவோ, ஒரு செல்பி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

4:11 (IST) 24 Nov 2021
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது: நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடையாமைக்கி கடந்த அதிமுக அரசு சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரரின் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு? எனவே ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது. வேதா இல்லத்தை 3 வாரங்களுக்குள் தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும் எனஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

3:27 (IST) 24 Nov 2021
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல்

கடந்த 19-ம் தேதி மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதையடுத்து குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

2:52 (IST) 24 Nov 2021
பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க போராட்டம்

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், பள்ளி பாட புத்தகத்தில் பாலியல் கல்வி குறித்த பாடங்களை இணைந்திடவும், பாலியல் குற்றங்களை தடுக்க தனிச் சட்டம் இயற்றிடவும் வலியுறுத்தினர்.

2:41 (IST) 24 Nov 2021
ரூ.1,000 கோடி வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம்

கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பக் கோரியும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க கோரியும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2:38 (IST) 24 Nov 2021
வேதா நிலையம் அரசுடமை செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2:09 (IST) 24 Nov 2021
நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் – சசிகலா

மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மத்திய அரசு உரிய நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

1:30 (IST) 24 Nov 2021
மமதாவை சந்திக்கிறார் சுப்ரமணியன் ஸ்வாமி

பாஜக தலைவர் சுப்ரமணியன் ஸ்வாமி புதன் கிழமை அன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு 03.30 மணி அளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய நிர்வாக கமிட்டியில் இருந்து கடந்த மாதம் ஸ்வாமி நீக்கப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது

1:22 (IST) 24 Nov 2021
காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு நாளை ஆலோசனை

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நாளை காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான வியூககங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

12:53 (IST) 24 Nov 2021
மறைமுக தேர்தல் மூலமே சென்னை மேயர் தேர்வு

நகர்புற தேர்தல் பிரச்சனைகள் ஏற்படாத வகையில், 2019ம் ஆண்டு அதிமுக மேற்கொண்ட வரைமுறையின் படியே நடைபெறும் என்றும் மறைமுகமாகவே மேயர் தேர்வும் நடைபெறும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

12:43 (IST) 24 Nov 2021
நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் 4.5 கி.மீ உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். வடமேற்கு திசையை நோக்கி நகர உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

12:24 (IST) 24 Nov 2021
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம்

ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரை மாற்றக் கோரி அதிமுகவைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:19 (IST) 24 Nov 2021
ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதி

ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

12:16 (IST) 24 Nov 2021
கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

11:49 (IST) 24 Nov 2021
வடகிழக்கு பருவமழை – மாவட்ட ஆட்சியர்களுடன் பேச்சு வார்த்தை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

10:59 (IST) 24 Nov 2021
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

10:43 (IST) 24 Nov 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு!

மத்திய உள் துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழு, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

10:32 (IST) 24 Nov 2021
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்

தெற்கு வங்கக் கடலில் 5.8 கி.மீ., உயரத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றம் இல்லாமல் அதே இடத்தில் நீடிக்கிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்றிரவு உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

9:39 (IST) 24 Nov 2021
கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 437 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 10,949 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

9:02 (IST) 24 Nov 2021
வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

8:41 (IST) 24 Nov 2021
பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Web Title: Tamil news today petrol price corona count live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com