Advertisment

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா?

ஜோதிமணி பேசியதற்காக தமிழகத்தில் பாஜக அணியில் இருக்கும் ஒரு கட்சிகூட எம்பிக் குதிக்கவில்லையே? இது கூட்டணி தர்மமா? எனக் கேட்கிறார்கள் பாஜக.வினர்.

author-image
WebDesk
May 21, 2020 08:01 IST
New Update
வாகனங்களைப் பயன்படுத்தினால் பறிமுதல், 2 கிமீ தாண்டி செல்லத் தடை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

'அரட்டை’ அரங்கசாமி... இவருக்கு அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், சமூகப் போராளிகள் என பலரது சகவாசம் உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் கடந்து போகும் செய்திகளின் மறு பரிணாமத்தை இந்த ‘ஆன்லைன் அரட்டை’ பகுதியில் நம் முன் வைக்கிறார் அரங்கசாமி.

Advertisment

வாங்க அரட்டையாரே!

‘வணக்கமுங்க! மெயில் பொட்டியில கவனமா இருங்க! எந்த நேரமும் முக்கிய அதிகாரிகள் சிலரது இடமாற்றம் பற்றிய அறிவிப்பு வரலாம்!’

நாங்களும் கேள்விப்பட்டோம்... சென்னை சிட்டி போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட இருப்பதாக?

‘சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இந்தப் பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். சென்சிட்டிவான இந்தப் பதவியில் இவ்வளவு காலம் ஒரு அதிகாரி நீடித்தது சாதனைதான்! பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையோ, வேறு குற்ற நிகழ்வுகளோ இல்லாமல் சென்னையை இவர் கவனித்துக் கொண்டதால், அரசுக்கு தலைவலி இல்லாமல் இருந்தது. எனவே 3 ஆண்டுகள் நிறைவடைந்தாலும்கூட, இவரை மாற்ற வேண்டுமா? என முதல்வர் அலுவலகம் யோசிக்கிறது.’

publive-image கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா?

அடடே... அப்போ தொடருவாரா?

‘எனக்குக் கிடைத்த தகவல் அது! தேர்தலுக்கு ஓராண்டே இருக்கும் சூழலில் இன்னொரு அதிகாரி வந்து சென்னையை படிப்பதற்குள் சட்டம் ஒழுங்கு அல்லது அரசியல் ரீதியாக சில பல குழப்பங்கள் உருவானால் சமாளிப்பது கடினம். அது தேர்தலிலும் தாக்கத்தை உருவாக்கக்கூடும். அதனால் தேவையில்லாமல் தேன் கூட்டில் ஏன் கை வைக்கவேண்டும்/ என முதல்வர் பழனிசாமியும் நினைக்கிறாருங்க!’

‘ஜெயந்த் முரளின்னு ஒரு அதிகாரி சென்னை கமிஷனர் ஆகப் போறதா செய்தி பார்த்தோமே?’

‘தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யான ஜெயந்த் முரளி, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அதிகாரிதான். அவர் சென்னை ஆணையர் பதவியை விரும்புவதாக தகவல்கள் வருவதும் நிஜம். தமிழக டிஜிபி பதவிக்கு நிகராக சொல்லப்படும் சென்னை கமிஷனர் பதவியை யார்தான் விரும்பமாட்டார்கள்? இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியவர், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’

உளவுத்துறை உயர் பதவியிடமும் காலியாகிறதாமே?

‘யெஸ்! உளவுப் பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஈஸ்வரமூர்த்தி ஏற்கனவே சிபிஐ-யிலும், தமிழக உளவுப் பிரிவிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்தான்’

வேறு மாற்றங்கள்?

‘அண்மையில் சர்ச்சைக்குள்ளான தலைமைச் செயலாளர் சண்முகமும் பணி ஓய்வை எதிர் நோக்கியிருக்கிறார். எனவே தலைமைச் செயலாளர் பதவிக்கு சீனியர் ஐஏஎஸ்-களில் மீனாட்சி ராஜகோபால் உள்ளிட்ட சிலரின் பெயர் அடிபடுகிறது. எனினும் சண்முகத்தை ஏதோவொரு பதவியில் கோட்டையில் உட்கார வைக்க அரசு விரும்புவதாக சொல்கிறார்கள்’

பணி நீட்டிப்பா?

‘ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், ஓய்வு பெற்றதும் அரசு ஆலோசகராக நியமிக்கப் பட்டார். அதே நடைமுறை குறித்து ஆலோசனைகள் நடக்கின்றன. உளவுப் பிரிவு ஐஐ, தலைமைச் செயலாளர் நியமனம் ஆகியவற்றுடன் தமிழக அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் வட்டாரத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.’

ஜோதிமணி எம்.பி. விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதே?

‘திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பது, ஜோதிமணிக்கு ஒரு ஆறுதல். மொத்தக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிக்கை கொடுக்கும் பொறுப்பை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவிடம் விட்டார்கள். அவரும், ‘இனி குறிப்பிட்ட சேனலில் பாஜக.வினர் பங்கேற்கும் விவாதங்களில் எங்கள் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கலந்து கொள்ளமாட்டோம்’ என ஒரு அறிக்கை விட்டார். இதிலும் ஒரு பிரச்னை!’

‘இதில் என்ன பிரச்னை?’

‘பொதுவாக கூட்டணிக் கட்சிகளின் பொது மேடைகள், கூட்டு அறிக்கைகள் ஆகியவற்றுக்கு ஒரு மரபு உண்டு. கட்சிகள் அல்லது தலைவர்களை வரிசைப்படுத்துவதில் ஒரு புரொட்டகால் வைத்திருப்பார்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி என்கிற விதமாக அந்த வரிசையை ‘மெயின்டெயின்’ செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கோபண்ணா இந்த வரிசையை மாற்றிவிட்டார்’

‘கோபண்ணாவின் வரிசையை சொல்லுமய்யா!’

‘திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என நீள்கிறது கோபண்ணாவின் பட்டியல்! தேசியக் கட்சிகளை முதலில் பட்டியலிட்டோம் என்றும் கூற முடியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பின்னால் வருகிறது. விசிக-வை விட மதிமுக சீனியர் கட்சி. சட்டக் கல்லூரி மாணவராக இருந்த திருமாவளவன் அழைப்பின் பேரில் சட்டக் கல்லூரி விடுதியில் சென்று உரை நிகழ்த்தியவர் வைகோ. அந்த சீனியாரிட்டியை தவற விட்டதில் மதிமுக.வினருக்கு ஏக வருத்தம்!’

publive-image கோபண்ணாவின் வரிசை

கூட்டணி என்றால், கொஞ்சம் அப்படி இப்படி இருந்துதானே ஆகவேண்டும்?

‘அப்படி இருக்க முடியாது என்கிறார்களே பாஜக.வினர்! ஜோதிமணிக்காக திமுக மொத்தக் கூட்டணிக் கட்சிகளும் வரிந்து கட்டியிருக்கின்றன. அதே விவாதத்தில் பிரதமர் பற்றி ஜோதிமணி பேசியதற்காக தமிழகத்தில் பாஜக அணியில் இருக்கும் ஒரு கட்சிகூட எம்பிக் குதிக்கவில்லையே? இது கூட்டணி தர்மமா? எனக் கேட்கிறார்கள் பாஜக.வினர்.’

‘மாநில ஆளும்கட்சியைச் சொல்கிறார்களோ?’

‘அதே! ‘எதிர்க்கட்சியினர் மட்டும் களத்தில் பணியாற்றியிருக்கவில்லை என்றால், பிரதமரை மக்களே கல்லால் அடித்திருப்பார்கள்’ என ஜோதிமணி பேசியது எந்த வகையில் நியாயம்? குறைந்தபட்சம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓபிஎஸ் இதற்கு அறிக்கை விட்டிருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பும் நிர்வாகிகள் சிலர், இதை அகில இந்திய பாஜக தலைவர் நட்டாவின் கவனத்திற்கும் கொண்டு போயிருக்கிறார்கள்.’

இது கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா?

‘அதிமுக.வைப் பொறுத்தவரை, பாஜக.வை வேண்டா விருந்தாளியாகப் பார்க்கிறார்கள். எனவே இதற்காக அதிமுக அலட்டிக்கொள்ளவில்லை. பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை, இந்த ஒரு விஷயத்தை வைத்து கூட்டணியை முடிவு செய்ய மாட்டார்கள். கூட்டணியை முடிவு செய்வது, தேர்தல் நேரச் சூழல்தான்!’

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் ஏதோ பிரச்னை என்கிறார்களே?

‘இந்த கொரோனா காலத்தில் திமுக.வுக்கு பெரிதும் கை கொடுத்தது, தகவல் தொழில்நுட்ப அணிதான். ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் சென்னையில் இருந்து பிரசாந்த் கிஷோர் டீம் கொடுக்கும் அஸைன்மென்ட்களை ஒன்றியம், நகரம், ஊராட்சி அளவில் பிரித்து கொண்டு சேர்த்திருக்கிறது ஐ.டி அணி. சில மாவட்டங்களில் மட்டும், மாவட்டச் செயலாளர்கள் தங்களது டைரக்‌ஷனில் முழு வேலைகளையும் செய்தார்கள்!’

‘இதில் என்ன பிரச்னை?’

‘திமுக.வில் ஐ.டி. அணி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 8 மண்டலங்களுக்கும் தலா ஒரு செயலாளர் இருக்கிறார். சென்னையில் இருந்து அஸைன்மென்ட் கொடுப்பவர்கள் ஐ.டி. அணியின் மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பி.தியாகராஜனையோ, மண்டலச் செயலாளர்களையோ கண்டு கொள்வதில்லை. நேரடியாக மாவட்டச் செயலாளர்கள் மூலமாக ஐடி அணி மாவட்ட பொறுப்பாளர்களை பயன்படுத்துகிறார்கள். இதுதான் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற ஐடி அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் வீடியோ கான்ஃபரன்ஸிலும் குமுறலாக வெளிப்பட்டிருக்கிறது’

ஓஹோ!

‘தவிர, மொத்த ஒன்றிணைவோம் வா நிகழ்வும் கட்சித் தலைமையிடம் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் குழுவின் பணியாக சித்தரிக்கப்படுகிறதே தவிர, ஐடி அணி பற்றி பேசப்படவில்லை என்பதாகவும் பொறுமியிருக்கிறார்கள். இதெல்ல்லாம் அடுத்தடுத்த கட்டங்களில் சரி செய்யப்படலாம்.’

அதிமுக.விலும் ஐ.டி அணியில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதே?

‘திமுக.வுக்கு வியூக வகுப்பாளராக இருந்த சுனில், அதிமுக.வுக்கு பணியாற்ற தொடங்கியிருப்பதை ஐஇ தமிழில் எழுதியிருந்தீர்கள். அவர் இணைந்த பிறகு, அதிமுக.வின் முதல் நடவடிக்கையே ஐடி அணியில்தான். சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் இருந்த ஐடி அணியின் மாநில நிர்வாகிகள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக ஐடி அணி பிரிக்கப்பட்டு, தலா ஒரு மண்டலச் செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னைக்கு அஸ்பையர் சுவாமிநாதன், மதுரைக்கு ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், வேலூருக்கு கோவை சத்யன், கோவைக்கு சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் மண்டலச் செயலாளர்கள்’

இவர்களது பணி?

‘திமுக மாடலில் ஐடி அணி பணிகள் வரையறுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே திமுக.வில் ஊராட்சி செயலாளர்கள் பதவி காலி செய்யப்பட்டதைப் போலவே அதிமுக.விலும் அந்தப் பதவிகள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கு ஒன்றிய அளவில் ஐடி அணியில் வாய்ப்புகள் கிடைக்கலாம்’ என்ற அரட்டை அரங்கசாமி, அடுத்து வரும்போது சினிமாச் செய்திகள் சிலவற்றையும் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு எழுந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

#Dmk #Aiadmk #All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment