வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து 103.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து 98.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கவலை அடையச் செய்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு 24.11 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 21.83 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49.09 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இரு பிம்பங்களாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கண்களைப் போல காத்து வருகின்றனர்; அதிமுக பல நூற்றாண்டு காலம் தமிழ் போல வாழ வாழ்த்துகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக அக்டோபர் 14ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கக் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மழைக் காலங்களில் தொற்று வியாதிகள் பரவுவதை தடுக்க உத்தரவிட்டுளார்.
கேரளாவில் கனமழை தொடர் நிலச்சரிவை ஏற்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பேரழிவின் கீழ் தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சில கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுவரை, பலி எண்ணிக்கை 18ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இராணுவம், என்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டிக்கல் மற்றும் கொக்காயர் பஞ்சாயத்துகளில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
பிரதமர் மோடி ட்வீட்: “கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் மக்கள் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்; பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று அதிமுகவின் பொன் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புரட்சி தாய் என பெயர் வைத்துக் கொள்ளும் அளவிற்கு என்ன புரட்சி செய்தார் சசிகலா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நமக்குள் ஒற்றுமை தான் முக்கியம், நீர் அடித்து நீர் விலகாது. தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு தெரியும். மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக பொன்விழாவையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் மரியாதை செலுத்தினர்
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு 45 கிமீ சைக்கிளில் சென்று அங்குள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் DGP சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார்
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40. கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கேரளாவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணைகை 9ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
அதிமுக பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு சசிகலா செல்கிறார். அங்கு அதிமுகவின் கொடியை ஏற்றிய பிறகு கல்வெட்டை திறந்து வைக்க உள்ளார். அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இனி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 144 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1 லட்சத்து 95 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அக்டோபர் 19ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.