அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் பாமகவிற்கு தொடர்பு இல்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில், அடுத்த நாள் (ஏப்ரல் 7) ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோமனூர் கிராமத்தின் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுனன், சூர்யா. இவர்கள் இருவரும் தேர்தலுக்கு அடுத்த நாள் நண்பர்கள் சிலருடன், குருவராஜப்பேட்டையிலுள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் அவர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் அடங்கிப்போதை தொடர்ந்து இரு கும்பலும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். தொடர்ந்து அர்ஜுனன், சூர்யா இருவரும் தங்களது நண்பர்களுடன் அப்பகுதியில் மது அருந்துவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது மீண்டும் அங்கு வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை, பாட்டில்கள் மற்றும் ஆயுதங்களால் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாகவும், கொலை செய்தவர்கள் பாமகவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ, அரசியலோ இல்லை. தேவையில்லாமல் பாமக மீது அவதூறு பரப்பி வருவதாக கூறினார். மேலும் புதிய பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், இந்த கொலைக்கான காரணம் ஜாதிய மோதல் இல்லை இரு கும்பலின் குடி வெறிதான் இந்த தாக்குதலுக்கு முழு காரணம் என்றும் கூறியிருந்தார். ஆனாலும் கம்யூசிஸ்ட் கட்சி தலைவர்கள், மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதாகவும், அரசியல் மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரட்டை கொலை தொடர்பாக விசாரனை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழு விசாரணை நடத்தியதில், இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கும் பாமகவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil