நடிகை விவகாரத்தில் தன் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும், சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை நீதிபதி, தள்ளுபடி செய்தார். இதனிடையே, இந்த வழக்கில் சீமான் நாளை ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பில், அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அப்போது சீமான் வீட்டு காவலாளிக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சீமான் வீட்டு காவலாளி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நாளை தன்னால் ஆஜராக முடியாது என்றும் சீமான் கூறியுள்ளார்.
இதனிடையே வழக்கை ரத்து செய்ய கோரி தான் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சீமான் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளளார். இதில் 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.