சீமான் மீதான பாலியல் வழக்கில் புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், நடிகைக்கு இழப்பீடு வழங்க 2 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவும் சீமானுக்கு அவகாசம் அளித்துள்ளது.
பிரபல கன்னட நடிகையான விஜயலட்சுமி தமிழில், பூந்தோட்டம், ப்ரண்ட்ஸ், மிலிட்டரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சீமான் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான வாழ்த்துக்கள் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ஃபைட்டர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்த விஜயலட்சுமி, கடந்த சில ஆண்டுகளாக நடிகரும் இயக்குனரும், அரசியல்வாதியுமான சீமான் மீது அடுக்கடுக்கான பல புகார்களை கூறி வருகிறார்.
அந்த வகையில், இவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த வழக்கு சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பில், அவரது வீட்டில் சம்மன் ஒட்டியபோது, சீமான் வீட்டு காவலாளிக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரதம்தில், சீமான் வீட்டு காவலாளி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரான சீமான், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது,
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில், அரசியல் நோக்கம் கொண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், நடிகைக்கு இழப்பீடு வழங்க 2 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவும் சீமானுக்கு அவகாசம் அளித்துள்ளது. இது குறித்து பேசிய சீமான், தற்போது நாம் தடை கேட்டிருந்தோம். அடுத்து இந்த வழக்கை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு நகர்வோம். இது ஆதாரமில்லாத அவதூறு வழக்குதான். நானே தான் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். இந்த வழக்கை எப்படி விசாரிச்சாலும், இது திட்டமிட்டு கூறப்பட்ட அவதூறு வழக்குதான் என்றுதான் முடியும் என்று கூறியுள்ளார்.