தமிழ்நாட்டில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெயர் பலகைகளில் தமிழ் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழில் பெயர் பலகை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், தற்போது வரை தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணம் ரூ. 50 ஆக உள்ளது. இது இனி உயர்த்தி வசூலிக்கப்படும். அபராதக் கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான அறிவிப்பு 2 வாரங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“