முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலியில் உள்ள பனகுடி கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான ஜெயகுமார், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையில் உள்ள தாராவிக்கு வேலைக்காக சென்றார். ஆனால், இப்போது கோவிட்-19 அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தமிழர்களை மீண்டும் தமிழகத்திற்கு விரட்டியுள்ளது. மிகவும் கடினமான போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பிய அவர்களை கொரோனாவால் சொந்த ஊரில் அவர்கள் வீடுகளில் யாரும் வரவேற்காதது பெரும் சோகம்.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள தாராவி குட்டி தமிழ்நாடு என்றும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. தாராவியில் வசிப்பவர்கள் பெரும்பாலான மக்கள் தமிழ் பேசும் மக்கள்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாராவியிலும் பரவத் தொடங்கியது. தாராவியில் மட்டும் இதுவரை சுமார் 1500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், தாராவியில் இருப்பவர்கள் வேலை இழப்பை சந்தித்தனனர். சுகாதாரம் போன்ற பிரச்னைகளால் தாராவியில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்று அச்சப்பட்ட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தனர்.
அப்படி, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 700-க்கும் மேற்றப்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதியான தாராவியில் பெரும்பாலும் அங்கே வசிப்பவர்கள் பொது கழிப்பறையைத்தான் பயன்படுத்துகின்றனர். அதே போல, மக்கள் நெருக்கம் மிகுந்த குடிசைப் பகுதி என்பதால், அங்கே சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
இதனால், அங்கே உள்ள தமிழர்கள் பலர் தங்கள் சொந்த உரூக்கு செல்ல வேண்டும் என்று கடும் போராட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து தமிழகத்திற்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி தாராவியில் இருந்து வந்தவர்களில் ஒருவர்தான் ஜெயக்குமார்.
ஜெயக்குமார் தாராவியில் இருந்து தமிழகம் வந்ததற்கு காரணம், பள்ளி எழுத்தராக பணி புரிந்த அவருடைய நண்பர் கொரோனாவால் இறந்ததுதான் காரணம் என்கிறார். “கொரோனாவால் இறந்த என்னுடைய நண்பரின் உடலை கடைசியாக அவருடைய மனைவி குழந்தைகள்கூட பார்க்க முடியவில்லை. அது போல, எனது குடும்பத்துக்கு மட்டும் அல்ல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.” என்று துயரத்துடன் ஜெயக்குமார் ஊடகங்களிடம் கூறுகிறார்.
ஜெயக்குமாரும் அவரது குடும்பத்தினரும் மேலும் 26 பேர்களும் ரூ.1.60 லட்சம் செலவு செய்து மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
சொந்த ஊருக்கு வந்தவர்களை சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை செய்த பின்னர், அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களை கிராமத்தினரும் அவர்கள் உறவினர்களும் அவர்களை வரவேற்காமல் கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால், வள்ளியூருக்கு அருகிள் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கியுள்ளனர். ஜெயக்குமாருடன் வந்த சில குடும்பங்கள் அவர்களுடைய கிராமத்திலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பல்லிகுளம், காவல்கிணறு, நாங்குநேரியில் சமூக எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றனர். மேலும், இவர்கள், கொரோனா தொற்று காலத்தில், அவர்களுடைய கிராமத்தினராலும், உறவினர்களாலும் தேவையற்றவர்களாகக் கருதப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுவும் ஒருவைகையான பாகுபாடுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்று நோய் காலத்தில் எப்படியாவது தங்கள் சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு தாராவியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை யாரும் வரவேற்காதது அவர்கள் இடையே ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், தாராவியில் உள்ள பலரும் எப்படியாவது தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட வேண்டும் என்று இ பாஸ் பெற முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.