சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், விடுதலைக்கு முன்பே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து விடுதலைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் மருத்துமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அதன்பிறகு சென்னை திரும்பாத சசிகலா, பெங்களூருரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் எப்போது சென்னை திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முமுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென் தமிழகத்தில் சசிகலாவை வரவேற்று, தொண்டர்கள் பலர் போஸ்டர் ஒட்டியது அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலா வரும் பிப்ரவரி 7-ந் தேதி (இன்று) சென்னை திரும்புவார் என்று அறிவித்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று முன்தினம் திடீரென மாற்று தேதியை அறிவித்தார். அதன்படி சசிகலா நாளை (பிப்ரவரி 8) சென்னை திரும்ப உள்ளதாகவும், அவர் எந்த வழியில் சென்னை வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை காலை பெங்களூருவில் இருந்து புறப்படும் சசிகலா தமிழக எல்லைக்குள் நுழையும்போது,அவருக்கு அமமுக தொண்டர்கள் பெரும் வரவேற்பு கொடுக்க காத்திருக்கின்றனர்.
அதன்படி சசிகலா வேலூர் வழியாக சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் வரும் அவருக்கு சிட்டி பார்டர் முதல் 400 அடி ரிங் ரோடு பிரிட்ஜ் வரை திருவள்ளூர் மேற்கு செயலாளர் ஏழுமலை வரவேற்பு கொடுக்க உள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 700 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு தெற்கு செயலாளர் கோதண்டபாணி கத்திபாரா பிரிட்ஜ் வரை வரவேற்பு கொடுக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், 100 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தென் சென்னை சென்ரல் செயலாளர் எம்.சி முனுசாமி கிண்டி பிரிட்ஜ் வரை வரவேற்பு அளிக்க உள்ளார். இந்த வரவேற்பில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை வரை வட சென்னை செயலாளர் லட்சுமி நாராயணன் வரவேற்பு அளிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 150 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவேக் அன் கோ-வில் இருந்து சசிகலா தங்கும் இடம் வரை தென் சென்னை செயலாளர் புவனேஷ்வரன் வரவேற்பு அளிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு 150 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை செய்யப்படும் செய்தி வெளியானதில் இருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், அவர் தற்போது சென்னை திரும்ப உள்ளதால், அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.