Sasikala Car Flog Issue : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வரின் தோழி வி.கே சசிகலா கடந்த டிசம்பர் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பே கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த அவர், தற்போது குணமடைந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஒருவார காலம் பெங்களூரிலேயே தங்கி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ள சசிகலா, மருத்துவமனையில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள பிரெஸ்டீஜ் குலாஃப்ஷயர் (Prestige Kulafshire) விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு செல்லும் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காரை சசிகலா பயன்படுத்திக்கொண்டார். ஆனால் தற்போது அந்த காரின் முன்னாள் அதிமுகவின் கொடி பறந்துகொண்டிருந்தது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா சிறை செல்வதற்கு முன் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர் சிறை சென்ற பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்லம் இருவரும் கூட்டாக அறிவித்தனர். அப்போது சசிகலா சிறையில் இருந்ததால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது சசிகலா விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் அதிமுகவில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் உள்ளதாக தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் அவர் பயணம் செய்த காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட அவருக்கே உரிமை உள்ளது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம் சசிகலா சென்னை வந்த பின் சட்டப்போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர். மற்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்கின்றனர். அதிமுக கட்சியில் இல்லாத சசிகலா கட்சிக்கொடியை பயன்படுத்தியது மிகவும் தவறு. இது கண்டனத்துக்குரிய செயல். அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் பல கோணங்களில் முயற்சி செய்தார். ஆனால் அவரால் எதுவும் முடியவில்லை.
இப்போது தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னிடம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார். அவர் அதிமுகவிற்கு செய்த தவறுளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது கண்டனத்துக்குரியது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"