Tamilnadu Assembly Election News : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம், அதிமுகவின் ஒவ்வொரு திட்டம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும் அதிமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் திமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கும்போது. அதனை கேட்க மறுத்த திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ஸ்டாலின் முதல்வர் ஆனபின் தான் மீண்டும் சட்டசபை வருவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சபதம் எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தமிழகத்தில் தற்போது அரசியல் பரபரப்பு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், திமுகவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கூறுகையில், இல்லத்தரசிகள் பலர் அவர்களது வீட்டில் அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரைண்டரை இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருக்கிறது என்று காண்பித்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் முதல்வர் ஆனபின்தான் சட்டசபை வருவேன் என்ற முடிவில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது. பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"