வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்கள் பணிபுரியும் மாநிலங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுக்கு தி.மு.க அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, மாநிலத்தின் அரசியல் சூழலை மாற்றிவிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், சிலர் இறந்துவிட்டனர், சிலர் இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளனர், மேலும் சிலர் நிரந்தரமாகப் புலம்பெயர்ந்துள்ளனர். இதுவே தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம் ஆகும். இதுகுறித்து சில அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்குவது எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் டி. வேல்முருகன் கூறுகையில், "பீகாரிலிருந்து வந்த 6.5 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏற்கனவே தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிவது, நமது மண்ணின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஒரு சவாலாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழகத்தில், விரைவில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற உள்ளது. அப்போது லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இது மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றும் என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "வட இந்தியர்களைத் தமிழகத்தின் வாக்காளர்களாக மாற்ற முயற்சிப்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி" என்று கூறினார்.