திமுகவில் இணைவாரா அழகிரி? : ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு

Mk Alagiri Birthday Poster : திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mk Alagiri Birthday Poster : தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி. இவரின் மூத்த மகன் அழகிரி.  தந்தையின் வழியில் தீவிர அரசியலில், ஈடுபட்டு வந்த அவர், 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அவர், தமிழகத்தில் தென்மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014-ம் இவர் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்பட்ட காரணத்தால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.  அதன்பிறகு அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்த அழகிரி, சில ஆண்டு இடைவெளிக்குபிறகு மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

ஆனால் அப்போது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருணாநதி இறந்ததை தொடர்ந்து அவரது 2-வது மகன் ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்றார். அவர் தலைவர் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே அழகிரி திமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அழகிரி எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியுடன் இருந்தார்.

ஆனால் தற்போது அரசியல் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ள அழகிரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஸ்டாலின் எப்போதும் முதல்ராக முடியாது என்று கூறிய அவர், தான் என்ன முடிவு எடுத்தாலும் தனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் அந்த கட்சியுடன் கூட்டணி சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அழகிரி தனி கட்சி தொடங்குவதாக தகவல் வெளியானது.

இந்த கட்சிக்கு கலைஞர் திமுக, மற்றும் தலைவர் கலைஞர் திமுக என இரண்டு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 30-ந் தேதி (நாளை) அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில், ஐ-பேக் தேவையில்லை. ஆட்சியமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும், சேர்த்தால் உதயம் தவிர்தால் அஸ்தமனம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பேரூர் முன்னாள் திமுக செயலாளர் கபிலன் என்பவர், நாளை அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil politics mk alagiri supporters make birthday poster

Next Story
சசிகலாவை வரவேற்று போஸ்டர் : மேலும் ஒரு அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com