Tamilisai Say About Governor Post : தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன். தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தனது முதல் அரசியல் அத்தியாயத்தை பாஜக –வில் இருந்து தொடங்கிய இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். தமிழகத்தில் கடந்த 2006 –ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், வேளச்சேரி தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
ஆனாலும் தனது சிறந்த ஆளுமையால் பாஜக தலைமையின் நம்பிக்கையை பெற்ற தமிழிசை கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் பாஜக தரப்பில் முதல் முதலாக நியமிக்கப்பட்ட பெண் தலைவர் என்ற பெருமைபெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடம்பெற்றார். மேலும் அந்த தொகுதியில், வெற்றி பெற்ற திமுக எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் 2-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் அனைவரும் மாறிமாறி குறை கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் நாளுக்கு நாள் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் நடவடிக்கையாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌவுந்திரராஜன் நாளை பொறுப்பேற்க உள்ளார். இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழிசை, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அங்கு போய் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் மொழி பிரச்சினை இல்லை தமிழ் எனது மொழி எனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது தமிழ் என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"