புதுவை சட்டசபையில் மின்துறை தனியார்மயமாக்கும் திட்டம் : காங்கிரஸ் – தி.மு.க வெளிநடப்பு

புதுச்சேரி சட்டமன்றத்தில் மின்துறை தனியார் மையமாக்கப்படும் என அறிவித்த அமைச்சரை கண்டித்து காங்கிரஸ்-திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

puducherry
puducherry

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

மின்துறை தனியார்மயமாக்குவது தான் அரசின் எண்ணம் அதே வேளையில் மின்துறை நிலங்கள் தனியாரிடம் கொடுக்கப்படாது என்றும் மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் உறுதி அளித்தார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் மின்துறை தனியார் மையமாக்கப்படும் என அறிவித்த அமைச்சரை கண்டித்து காங்கிரஸ்-திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதுதான்  அரசின் கொள்கை  முடிவு என்று மின்துறை அமைச்சர்  நமச்சிவாயம் அறிவித்ததையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மின்துறை  தனியார்  மயமாக்கலுக்கு  எதிர்ப்பு  தெரிவித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா கேள்வி நேரத்தின்போது, புதுச்சேரி அரசின் மின்துறைக்கு சொந்தமான இடங்கள், மின் சாதனங்கள், தளவாடப்பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு- பாலிசிதாரர்களிடம் பெறப்பட்ட வைப்பு நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா மின்துறைக்கு அரசு துறைகள், தொழிற்சாலைகள், வீட்டு உபயோகச்சந்தாதாரர்களிடம் நிலுவையிலுள்ள மின் கட்டண பாக்கி எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மின்துறையின் நிகர சொத்தின் மதிப்பு தேய்மானம் போக சுமார் ரூ.551 கோடி. பாலிசி வைப்பு நிதி டெபாசிட் செய்யப்படவில்லை. மின்கட்டண பாக்கி ரூ. 536.7 கோடியாக உள்ளது என்றார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, மின்துறையை தனியார் மயமாக்கிவிட்டீர்களா என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர்  நமச்சிவாயம், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மின்துறையை தனியார் மயமாக்குவதுதான் அரசின் கொள்கை முடிவு. எல்லா மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள் என்றார். இச்சூழலில் பாஜக ஆளும் மாநிலங்களில் செய்துவிட்டார்களா முதல்வரின் நிலைப்பாடு என்ன  என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் எழுந்து பதில் தரவில்லை. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, “மின்துறை தனியார் மயம் அரசின் கொள்கை முடிவு என்பதை எதிர்த்தும், கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

அதைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, லீ. சம்பத், இரா.செந்தில்குமார், நாக. தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்திநாதன், ரமேஷ் பரம்மத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry assembly meet dmk and congress members vacate

Exit mobile version