பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
விபத்து காப்பீடு முழுமையாக இருக்கிறதோ அதைப்போல பனை ஏறுபவர்களுக்கு ஒரு காப்பீடு கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். தெலுங்கானாவில் பதநீர் நிலையங்கள் உண்டு. ஆக அதைப்போல பதநீரை கொள்முதல் செய்து சிறு சிறு கடைகளாக வைத்து வியாபாரம் செய்யும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்
திருநெல்வேலி, இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் ஆகியவற்றின் சார்பில் அம்பை நெடுஞ்சாலை, தருவை பனங்காட்டில் "பனை தேசியத் திருவிழா 2023 இன்று(12.08.2023) நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் துணைநிலை ஆளுநருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பனைப் பொருட்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு விழாவில் துணைநிலை ஆளுநர்
பனை மரங்களின் குணம் என்னவென்றால் சாக்கடை நீரை ஊட்டினாலும் அது பதநீரைதான் தரும். அந்த குணம் நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் தீமை செய்தாலும் அவருக்கு நல்லதைத்தான் தருவேன் என்று பனைமரம் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.
பனை மரத்தைப் போல நாமும் நல்ல சேவையையும் உழைப்பையும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு பிரதமர் தலைமையின் கீழ் பனை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 'சமையல் எண்ணைய் விதை இயக்கம்' தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பனை விதைக்க திட்டம் செய்ட்யப்பட்டது. அதன்படி, இதுவரை 7,000 ஹெக்டேர் நிலத்தில் பனை விதைக்கப்பட்டு இருக்கிறது.
மாநில அரசு தனிப்பட்ட முறையில் இதில் கவனம் செலுத்தி பனை உற்பத்தியை அதிகரிக்க அரசு நிறுவனங்கள் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் செயலாற்ற வேண்டும். ஏனென்றால், மற்ற மாநிலங்களை விட பனைத் தொழிலை சார்ந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.
முன்பு பணையால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கியதால் மக்களுக்கு பெரிதாக நோய் ஏற்பட்டதில்லை. பனம் பழத்தை சாப்பிட்டதன் மூலமாக அதிக நார்ச்சத்து கிடைத்தது. இன்று, கையில் பணம் வைத்துக் கொண்டு எதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது என்று வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். அன்று நம் முன்னோர்கள் பணம்பழத்தை உண்டு திடமாக வாழ்ந்து வந்தனர்.
இதை சாப்பிடுவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது என்று கூறுகிறார்கள். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
இன்று, புதுச்சேரியில் பதநீர் குடித்துவிட்டு தான் என் வேலைகளை செய்யத் தொடங்குவேன். 24 மணி நேரமும் பணியாற்ற முடிகிறது என்றால் அதற்கு இந்த பதநீர் முக்கிய காரணம்.
பனையைப் பற்றி இவ்வளவு நுணுக்கங்கள் எனக்கு தெரிந்ததற்கு என் தந்தைதான் காரணம். என் தந்தை கள்ளைத் தீவிரமாக எதிர்த்தார். ஆனால், நான் கட்சித் தலைவராக இருந்தபோது அந்நிய மதுபானங்கள் இருக்கும்போது ஏன் கள் இருக்கக் கூடாது என்று கேட்டேன். அந்நிய மதுபானங்களை ஊக்கப்படுத்தும் நாம் ஏன் கள்ளை மறுக்க வேண்டும்.
ஒரு மருத்துவராக உயிருக்கு உபாதை தரும் எதையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். ஆனால் ஒரு அந்நிய மதுபானங்கள் விற்பனையில் இருக்கும் பொழுது ஏன் கள்ளு இருக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி. ஆக இது விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
வெளிநாட்டவர்கள் பனையின் அருமை அறிந்து அதை விற்பனை செய்கிறார்கள். ஆனால் நம்மில் பலர் பனையைப் பற்றி அறியாமல் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பனையைப் பாதுகாக்க வேண்டும் என்று எழுந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
விபத்து காப்பீடு முழுமையாக இருக்கிறதோ அதைப்போல பனை ஏறுபவர்களுக்கு ஒரு காப்பீடு கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். தெலுங்கானாவில் பதநீர் நிலையங்கள் உண்டு. ஆக அதைப்போல பதநீரை கொள்முதல் செய்து சிறு சிறு கடைகளாக வைத்து வியாபாரம் செய்யும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்.
நம் ஊருக்கு யாரேனும் அதிகாரிகள் யாரேனும் வந்தால் அவர்களுக்கு வெளிநாட்டு பானங்களை இளைப்பாற கொடுக்காதீர்கள். அவர்களுக்கு நம் நாட்டின் பாரம்பரிய பானங்களான சுக்கு டீ, பதநீர் போன்றவற்றைக் கொடுங்கள். பனைப் பொருட்கள் மூலம் ரூ. 200 கோடி அந்நிய செலவாணி கிடைக்கிறது. பொருளாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நபர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை அரசிற்கு எடுத்துக் கூறும் முதல் நபராக நான் இருப்பேன்.
முதலில் நாம் பனைப் பொருட்களை பயன்படுத்த தொடங்குவோம். திருமண மேடைகளில் மணமக்களுக்கு பரிசளிக்க பனையாலான ஒரு பெட்டியை செய்து அதில் கருப்பட்டியை போட்டு கொடுப்போம். பனைப் பாய்களை பரிசளிக்கத் தொடங்குவோம்.
நாம் ஒவ்வொருவரும் பனைப் பொருளையும் சந்தைபடுத்த தொடங்குவோம். என் தந்தை பனைபாயில்தான் உறங்குவார். அவர் முதுமையிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு பனைப் பொருளும் காரணம். நாம் பனைப் பொருட்களை உண்டு ஆரோக்கியமாக இருப்போம். பனை மரங்களை பாதுகாப்போம்; விதைகளை விதைப்போம்; அதன் மூலம் வளத்தை பெருக்குவோம்.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர்,
பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பனையை நாம் பாதுகாக்கவில்லை என்பதுதான் கவலையான ஒன்று. பனைமரம் பலன் தருவதற்கு பல நாள் ஆகும். ஆனால் மரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயன் தரும்.
கனத்த மனதோடு கூற வேண்டிய விஷயம் நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம். அறிவாற்றலோடு திகழ வேண்டிய மாணவர்கள் அரிவாள் ஏந்தியது மிகவும் வேதனையான நிகழ்வு. சாதிய வேற்றுமைகள் களையப்பட வேண்டும். குழந்தைகள் மனதில் இந்த சாதியம் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம்கூட ஒப்புக்கொள்ள முடியாதது. புத்தகம் எடுத்து செல்ல வேண்டியவர்கள் கத்தி எடுத்துக்கொண்டு திரிகிறார்கள் என்பது கொடுமையான விஷயம். இது போன்ற கொடுமைகளால் 50 குடும்பங்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் என்பதை அறியும்போது காவல்துறை ஏன் இதை கண்காணிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
கட்சியைத் தாண்டி குழுக்களைத் தாண்டி சாதி அமைப்புகளை தாண்டி எல்லோரும் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நல்லொழுக்க வகுப்புகள் பள்ளியில் எடுக்கப்படுகிறது. இருந்தும் மாணவர்களை கண்காணிக்க ஏன் தவறுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் கண்டிப்பாக நடக்கக்கூடாது. இதனால் அந்த குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அரசு சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அரசு மட்டுமல்லாது பொதுமக்களும் இதுகுறித்த ஆழ்ந்த சிந்தனையில் இறங்க வேண்டும். சாதியக் கொடுமைகள் நடைபெற்ற வந்திருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அதை ஆராய்ந்து தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்.
கர்நாடக முதலமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். காவிரி நதிநீர் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நமக்குள்ள உரிமை பறிபோகாமல் இருக்க வேண்டும்.
செங்கோல் என்பது தமிழர்களின் பெருமை. பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்கும் பொழுது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆதீனங்கள் முன் தலை வணங்கினார் என்கிற செய்தி வருகிறது. ஆதீனங்கள் நமக்கு தமிழை வளர்த்தவர்கள். தமிழ் வழிக் கல்வியை தமிழ்ப் பள்ளிகளில், கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தி தமிழை வளர்த்தவர்கள். தமிழ்நாட்டில் 40,000 மாணவர்கள் தமிழ்ப் பொதுத் தேர்வில் தோல்வியடைகிறார்கள். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50,000 பேர் தமிழ் தேர்வுக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்.
ஒட்டுமொத்தமாக அரசின்மீது ஒரு கண்டனம் வரும் சூழல் ஏற்படும்போது அரசு இந்த நாட்டிற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக சொல்ல வேண்டியது பிரதமரின் கடமை. அதை அவர் செய்தார். ஒட்டுமொத்தமாக நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதை சொல்வதற்கு பாரதப் பிரதமருக்கு உரிமை இருக்கிறது. மணிப்பூர் சிக்கலுக்கு தீர்வு காண்போம் எனவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.