பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரி மக்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் ரங்கசாமி ஏன் முதல்வராக இருக்க வேண்டும் என கேள்வி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டம் மூன்று நாள் புதுச்சேரியில் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய பாஜக ஆட்சியில் பெரிய ஊழல் அதானி ஊழல். இதனால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில் நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது இந்த ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்தோடு இணைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானங்களை சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்தி எங்கள் கட்சி போராடி வருகிறது. இந்தப் போராட்டம் தொடரும். புதுச்சேரி ஆளும் முதலமைச்சர் ரங்கசாமியின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கிறது என்று புலம்ப தொடங்கி இருக்கிறார். அவர் புலம்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரி மாநிலமும் மக்களும் இன்றைக்கும் துரோகத்துக்கு ஆளாகிறார்கள் மக்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன இந்த சூழ்நிலையில் ரங்கசாமி முதலமைச்சராக ஏன் இருக்க வேண்டும் .
பாரதிய ஜனதா கட்சியோடு ஏன் இன்னும் கைகோர்த்து நிற்க வேண்டும் அதனை விட்டு வெளியேறுவதற்கு ரங்கசாமி தயார் தானா? தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் அடியாளாகவே அவர் இருப்பாரா? பாஜக பிடியில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காப்பாற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை விரட்டுவதே நமது தலையாய கடமை. இதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும்.

மேலும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் கொண்டு செல்ல ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி மே 15-ம் தேதி வரை மக்கள் இயக்கத்தை தொடங் உள்ளோம். காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் மல்லிகார்ஜூன கார்கே. அவரை முன்னிருத்தி காங்கிரஸ் கட்சி சிறிதுபடுத்த பிரதமர் மோடி பார்க்கிறார் அவரது கனவு பலிக்காது.
டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை. எதிரணியின் தலைவர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், அவர்களை பலவீனப்படுத்த பாஜக சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஆளுநர்கள் மாநிலத்திற்கு தேவை இல்லை என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து ஆளுநராக இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசியல் பேச வேண்டும் என்றால் அவர்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசலாம் என்றும் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“