பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்), மற்றும் புதுச்சேரி காவல்துறை சார்பில் ராக் பீச் கடற்கரையை புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. உலகில் புகையிலை பயன்பாட்டினால் 12ல் ஒருவர் பலியாகின்றனர், இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோயால் இறப்பவர்கள் புகையிலை பயன்படுத்துபவர்கள். இதனால் 60 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.
இதை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் புகையிலை பாதிப்பில் இருந்து அவர்களை காக்கவும் புகையிலையினால் சுற்று சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலை முழுவதும் புகைபிடிக்க வேண்டாம் என்றும், புகையிலை பொருட்கள் வீசுவதை தவிர்க்கும் வகையில், கடற்கரைக்குள் எந்தவிதமான புகையிலை பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது. இப்பலகையினை காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் திரு. நாரா சைதன்யா, IPS அவர்களும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரியுமான டாக்டர் வெங்கடேஷ் அவர்களும் திறந்து வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்வாதி சிங் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஆலோசகர் டாக்டர். சூரிய குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“